நீட் தேர்விற்கு விலக்கு கோரி இயற்றப்பட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி ஜனநாயக உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூலை 12-

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குக் கோரும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கக் கோரி ஜனநாயக உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியரகம் அருகே புதனன்று (ஜூலை 12) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் ப.செல்வசிங் பேசியதாவது:

மருத்துவ சேர்க்கைக்கான இந்த நீட் தேர்வு, தமிழகத்தின் மீது திணிக்கப்படுகிறது. இது தமிழகத்தில் இருக்கக் கூடிய மக்களை வஞ்சிக்கக் கூடியது. இந்த நீட் தேர்வு தமிழக கிராமப்புற மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல மாநில உரிமைகளைக்கும், கூட்டாச்சி தத்துவத்திற்கும் எதிரானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பட்ட மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் குடியரசுத் தலைவருக்கு ஒப்புதல் வழங்க்கக் கோரி கடிதம் எழுதிய போதுதான், மத்திய அரசு ஜனாதிபதி ஒப்புதலுக்கே அனுப்பவில்லை என்பது தெரிய வந்தது. தமிழக அரசு இயற்றிய மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்காமல் இருப்பதில் இருந்தே, தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்பது உறுதியாகிறது. ஆனால் அதிமுக அரசு அதைப்பற்றி கவலைப்படுதில்லை. மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தேசியக் கல்வி கொள்கை என்ற பெயரில், கல்வியை மத்தியத்துவப்படுத்துவது, கல்வியை வணிகமயமாக்குவது, கல்வியை வகுப்புமயமாக்குவது என்ற 3 அம்சங்களின் அடிப்படையில், உயர்கல்வி, அனைத்து மக்களுடைய கல்வியையும் பறிக்கக் கூடிய வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதனுடைய தொடக்கமாகத்தான் நீட் தேர்வை திணிக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல பல்கலைக்கழங்களின் மீது தாக்குதல் தொடுக்கிறார்கள். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தாழ்த்தப்பட்ட மாணவன் அடித்து கொலை செய்யப்படுகிறான். ஜவகர்லால் பல்கலைக்கழக மாணவன் கன்னையா குமார் தேசத்துரோகி என முத்திரை குத்தப்படுகிறான். ஐஐடி கல்வி நிறுவனத்தில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இப்படி ஒன்றன்மீது ஒன்றாக தாக்குதலை தொடுத்து வருகிறார்கள். மோடி அரசு இந்த தேசத்தில் ஒற்றை ஆட்சியை கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே முதலமைச்சாரக இருந்த ஓ.பன்னீர் செல்வம் உணவுப்பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றுகிறோம் என்ற பெயரில் தமிழக மக்களின் 50 சதவிகித உணவு உரிமையை பறிக்கும் செயலில் ஈடுபட்டார். இப்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி மாணவர்களின் கல்வி உரிமை பறிபோவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். பன்னீர்செல்வமோ, பழனிச்சாமியோ மத்திய மோடி அரசுக்கு துதி பாடுபவர்களாக, மாநில உரிமையை பறிகொடுப்பவர்களாக இருக்கிறார்கள். இதை அனுமதிக்க முடியாது. தமிழகத்திற்கு எதிராக தொடுக்கப்படும் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயக சக்திகளை இணைத்து முறியடிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், பொதுபள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, கே.கே.எஸ்.எம்.தெஹலான்பாகவி ஆகியோரும் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகளை, அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...