நீட் தேர்வு எழுதிய மாணவ – மாணவிகளிடம் வரம்பு மீறிய சோதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

 

நாடு முழுவதும் நேற்றைய தினம் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழகத்தில் சுமார் 85 ஆயிரம் பேர் எழுதினர். தேர்வு எழுதும் மையங்களில் கடுமையான கெடுபிடிகளும், அதிகப்படியான சோதனை நடவடிக்கைகளும் இருந்தன. இது மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் கடுமையான அதிர்ச்சியை, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சோதனை என்கிற பெயரில் மாணவிகளிடம் கம்மல், மூக்குத்தி, செயின் ஆகியவற்றை அகற்ற வலியுறுத்தியதோடு, துப்பட்டா, முழுக்கைச் சட்டை அணிந்திருந்த மாணவிகளின் சட்டையை வெட்டியும், ஹேர்பின்னை அகற்றிடவும், துப்பட்டாவிற்கு அனுமதி மறுத்தும் உள்ளிட்ட அனைத்து கெடுபிடிகளையும் மேற்கொண்ட பிறகே மாணவிகள் தலைவிரிக் கோலத்துடன் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். முழுக்கைச் சட்டை அணிந்து வந்த மாணவர்களை அதனை அரைக்கையாக வெட்டி  வர வேண்டுமென அவசியம் இல்லாமல் கட்டாயப்படுத்தப்பட்டனர். மாணவர்களை குற்றவாளிகளைப் போன்று சிபிஎஸ்இ வாரியம் நடத்தியுள்ளது. இந்த கொடுமைகளை காண சகிக்காத பெற்றோர்கள் பலர் மனஉளைச்சலுக்கு ஆளாகி தேர்வு எழுதாமல் தங்கள் பிள்ளைகளை திரும்பி அழைத்துச் சென்ற பரிதாபமும் நிகழ்ந்துள்ளது.  உச்சநீதிமன்றமே ஆதார் கார்டை கட்டாயமாக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள நிலையில் தேர்வு எழுதிய மாணவர்களிடம் ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பல மாணவர்கள் தேர்வுக்கு அனுமதிக்கப்படாத கொடுமையும் நடந்திருக்கிறது.

இந்த செயல் படுமோசமான மனித உரிமை மீறல் மட்டுமல்லாது தேர்வுக்கு தயாரிப்புடன் வந்த மாணவ மாணவிகளை அச்சுறுத்தி மனஉளைச்சலுக்கு ஆளாக்கும்  நடவடிக்கைகளாகும்.

அகில இந்திய அளவில் தேர்வுகள் நடத்தி மருத்துவ சேர்க்கை செய்வது தமிழகத்தில் உள்ள ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பை மறுத்து விடும் என்பதால் நீட் தேர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு இருந்தது. கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டிலும் தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தப்பட்ட அடிப்படையில் தமிழக சட்டமன்றத்திலும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவையனைத்தையும் மதிக்காமல் மத்திய அரசு நீட் தேர்வை கட்டாயப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அங்கீகரிக்கப்பட்ட தேர்வு நடைமுறைகளுக்கு மாறாக மேற்கண்ட கடுமையான கெடுபிடிகள் நடத்தியுள்ளது.

சிபிஎஸ்இ வாரியத்தின் இந்த மோசமான நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

– ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...