நீட் நுழைவுத்தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜூலை 28-ல் மறியல் போராட்டம்

நீட் நுழைவுத்தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

ஜூலை 28-ல் மறியல் போராட்டம்

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட் தேர்வு’ தமிழக மாணவர்களை  பாதிக்கிறது, மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது என்ற அடிப்படையில் தமிழகத்திற்கு விதிவிலக்கு அளித்திட தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. மத்திய அரசு பரிந்துரை செய்யாததால் குடியரசுத்தலைவர் ஒப்புதல் பல மாதங்களாகியும் கிடைக்கவில்லை. குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்றிட மாநில அதிமுக அரசு உருப்படியான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

நீட் தேர்வு முடிந்து 15 சதவிகிதம் மத்திய ஒதுக்கீட்டிற்கு அளித்து மீதமுள்ள 85 சதவிகிதத்தில் 85 சதவிகிதம்  மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதென மாநில அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ளமொத்த இடங்களில் மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் படித்த மாணவர்களுக்கு 5 சதவிகித இடங்கள் மட்டுமே கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாநில பாடத்திட்டடத்தில் படித்த மாணவர்களுக்கு இது ஒரு பேரிடியாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டுமென வலியுறுத்திய பிறகும் மத்திய அரசாங்கம் பிடிவாதமாக மறுத்து வருகிறது.

நீட் தேர்வுக்கு விதிவிலக்கு கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிக்க மத்திய அரசு பரிந்துரைக்க வேண்டுமென்று வலியுறுத்தியும், இதற்காக  மாநில அரசு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தியும் 28-7-2017 அன்று சென்னையில் மத்திய அரசு அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது. கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.

தமிழக மாணவர்களின் உரிமை காத்திட நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு அனைத்துப்பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

– ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலி, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்

இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், விபத்திற்கு காரணமான பங்களா உரிமையாளர் மற்றும் கடமை தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இடிந்து விழுந்த கருங்கல் சுவரின் மீதமுள்ள பகுதியை முழுமையாக அகற்றிட வேண்டுமெனவும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.