நீதிபதிகளின் ஓய்வுக்கு முந்தைய தீர்ப்புகளும் ஓய்வுக்குப் பிந்தைய வேலைகளும்…

என்.ஜி.ஆர்.பிரசாத் & கே.கே.ராம்சித்தாத்தா

அரசியலமைப்புச் சட்டம் நீதித்துறைக்கு ஒரு பெருமை மிக்க இடத்தை வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் அரசமைப்பு பணிகளுக்கு நியமிக்கப்படுவோருக்கு சுதந்திரமாக இயங்குவதற்கான முறையில் ஏராளமான உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி 5ன் 4ஆம் அத்தியாயம் உச்சநீதிமன்றம் குறித்து பேசுகிறது. பகுதி 6ல் 5 ஆம் அத்தியாயம் உயர்நீதிமன்றங்கள் குறித்து பேசுகின்றன. நீதிபதிகளின் சம்பளமும் அவர்களின் ஓய்வு வயது உள்ளிட்டவையும் நீதிபதிகள் சுயேட்சையாக செயல்படும் வண்ணம் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 124/4 மற்றும் 217/1 B ஆகியவற்றின் மூலம் நாடாளுமன்றத்தில் ஒரு கண்டன தீர்மானத்தின் மூலம் மட்டுமின்றி அவர்களை எளிதாக நீக்க முடியாது என்கிற அளவிற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இயற்றப்படும் சட்டங்களை மறுபரிசீலனை செய்வதற்கும் ரத்து செய்வதற்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. நிர்வாகங்களின் சட்டங்களை கேள்வி கேட்பதற்கு அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் ஒரு பேராசையற்ற நீதித்துறையை உத்தரவாதப்படுத்தும் முறையில் அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

கோகாய் உதாரணம்

அரசியலமைப்பின் உயர் பதவிகளில் இருந்து ஓய்வுபெறும் நீதிபதிகள் ஓய்வுகால வாழ்க்கையை கடைபிடிப்பார்கள் என்று நம்பப்பட்டது. யாருமே ஓய்வுக்குப் பின்பு லாபம் தரும் பதவிகளை ஏற்பார்கள் என்று நினைக்கவில்லை. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே அரசு வழங்கும் பதவிகளை ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஏற்றுக் கொண்டதன் மூலம் நீதித்துறைக்கும் நிர்வாகத்துறைக்குமான வேறுபாடுகள் மங்கத்துவங்கிவிட்டன.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் தலைமை நீதிபதி ஒருவர் ஆளும் பாஜகவினால் ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது இந்திய தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் குடியரசுத் தலைவரால் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில் அயோத்தியா, ரபேல் உள்ளிட்ட முக்கியமான வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்ததில் தலைமை தாங்கினார். இந்த அனைத்து வழக்குகளிலும் அரசுக்கு ஆதரவாகவே தீர்ப்புகள் அமைந்திருந்தன. இதன் காரணமாகவே அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டது ஒரு கைமாறு என்ற எண்ணம் எழுவதற்கு இட்டுச் செல்கிறது. இந்த நியமனம் அதுவும் ஓய்வுபெற்ற சில மாதங்களுக்குள்ளேயே நடத்தப்பட்டது ஆச்சர்யத்தை மட்டுமன்றி பல பகுதிகளிலிருந்து கடும் கண்டனத்தையும் எதிர்கொண்டுள்ளது.

மக்கள் மிக வேகமாக சுயேட்சையான நீதித்துறை என்று அழைக்கப்படுதவன் மீது நம்பிக்கை இழந்து கொண்டிருக்கிறார்கள். 2013ம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் தானும் ஒரு மூத்த வழக்கறிஞராக இருந்தவர், மாநிலங்களவையில் கீழ்க்கண்டவாறு முரண்பட்ட வகையில் பேசியிருந்தார்.

“நாம் வெகுதூரம் வந்துவிட்டோம் என நினைக்கிறேன். ஒவ்வொரு சட்டம் இயற்றலின் போதும் நீதிபதிகளுக்கு ஓய்வுக்குப் பிந்தைய பணிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அநேகமாக சில குறிப்பிடத்தக்க மரியாதைக்குரிய மனிதர்களைத் தவிர அனைவரும் ஓய்வுக்குப்பிறகு தங்களுக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டுமென ஆசைப்படுகின்றனர். சிலர் மட்டுமே விதிவிலக்காக இருக்கிறார்கள். நாம் (நாடாளுமன்றம்) அந்தப் பதவிகளை வழங்கவில்லை எனில் தங்களுக்கான பதவிகளை அவர்களே உருவாக்கிக் கொள்கிறார்கள்.

ஓய்வுக்குப் பிந்தைய வேலைக்கான அவர்களின் தாகம் அந்த நீதிபதிகளின் ஓய்வுக்கு முந்தைய தீர்ப்புகளில் தாக்கம் செலுத்துகிறது. இது சுயேட்சையான நீதித்துறைக்கு அச்சுறுத்தலாகும். மேலும், ஓய்வுக்கு முந்தைய தீர்ப்புகளில் இந்த தாக்கம் இருப்பது என்பது நமது நீதித்துறையின் செயல்பாட்டை மோசமாக பாதிக்கிறது.” இந்தப் பின்னணியில்தான் கோகாயின் மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தை புரிந்து கொள்ள வேண்டியது இருக்கிறது.

நீதிபதி கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற பின்பு அளித்த பேட்டி நிலைமையை இன்னும் மோசமாக்கியது. அவரது நியமனம் அரசுக்கு ஆதரவாக தீர்ப்புகள் வழங்கியதற்கான கைமாறா? என்று கேட்கப்பட்டதற்கு நான் மட்டுமல்ல, வேறு சில நீதிபதிகளும் கூட இப்படி நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொன்னது மிகப் பெரிய பாதகமாக அமைந்தது. மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்பது ஒரு பணியல்ல, சேவை என்று அவர் குறிப்பிட்டார். எனவே, குடியரசுத் தலைவர் அந்த சேவைக்காக அவர் தேவைப்படுகிறார் என்று அழைத்தபோது அதை ஏற்றுக் கொள்வதுதான் தனது கடமை என்று குறிப்பிட்டார். இத்தகைய கருத்துக்கள் நீதித்துறையின் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டதல்ல என்ற எண்ணத்தையே ஏற்படுத்தியது.

அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 80/3 ஐ மேலோட்டமாக வாசித்தாலே குடியரசுத் தலைவர் “இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவையில் சிறப்பு அறிவு பெற்றவர்களையே மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கலாம்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. நிச்சயமாக அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் இந்தப் பிரிவை உருவாக்கியபோது ஓய்வு பெற்ற நீதிபதியை கவனத்தில் கொண்டிருக்கமாட்டார்கள்.

கலங்கத்தை சரிசெய்ய…

எனவே, அரசமைப்புப் பொறுப்புகளிலிருந்து ஓய்வுபெற்றோர் இத்தகைய நியமனங்களை ஏற்றுக் கொள்வது அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள விழுமியங்களில் பாரபட்சமற்ற தன்மை என்பதை கேள்விக்குள்ளாக்கும். அதேபோன்று இது அதிகார அமைப்புகளுக்கிடையேயான அதிகாரப் பிரிவினைக்கும் எதிரானது. நீதிபதி கோகாயின் மேலவை உறுப்பினர் நியமனத்திற்கு சட்டப்படி தடையில்லை என்பது உண்மைதான். ஆனால், இத்தகைய பிரச்சினைகளை தனிப்பட்ட நீதிபதிகளின் விருப்பு வெறுப்புகளுக்கு விட்டுவிட முடியாது. ஓய்வுக்குப் பிந்தைய இந்த நியமனங்கள் நீதித்துறையின் மீதும் அரசமைப்பு ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை இழக்கச் செய்யுமென்றால் இதை உடனடியாக தடை செய்ய வேண்டியது அவசியமாகும்.

அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துவதன் மூலமாகவோ அல்லது ஒரு புதிய சட்டத்தை உருவாக்குவதன் மூலமாகவோ இந்தத் தடையை உருவாக்க வேண்டும். இதுமட்டுமே மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும் ஓய்வுக்குப் பிந்தைய நியமனங்களை தடுப்பதற்குமான ஒரே வழியுமாகும். நீதிபதிகள் ஓய்வுபெறும் போது கடைசியாக வாங்கிய சம்பளத்தை பென்சனாக கொடுத்துவிடலாம். அவர்கள் ஓய்வு பெறும் வயதைக் கூட ஒன்றிரண்டு வருடங்கள் அதிகப்படுத்திக் கொள்ளலாம். ஓய்வுக்குப் பிந்தைய நியமனங்களால் ஏற்படும் பாதிப்புகளை இது தடுக்கும். ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நீதிபதிகள் அரசியலமைப்புச் சட்டத்திற்குத்தான் சேவகர்களே தவிர, அரசாங்கத்திற்கு அல்ல.

தமிழில்: க.கனகராஜ்

ஆங்கிலத்தில் படிக்க : https://bit.ly/2VU8Zph

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...