நீதிவிசாரணை நடத்துக

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு செவ்வாயன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

போபாலில் விசாரணை கைதிகளாக இருந்த 8 பேர், அவர்களது குற்றம் உறுதி செய்யப்படாத நிலையில், என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டது தொடர்பாக முன் வைக்கப்படும் தகவல்களின் தன்மை, அச்சம்பவம் தொடர்பாக கடுமையான சந்தேகங்களை எழுப்புகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு குறிப்பிட விரும்புகிறது.

கொல்லப்பட்ட 8 பேரும் சிமி அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள்; பல்வேறு வழக்குகளில் விசாரணையை எதிர்கொண்டிருப்பவர்கள். உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்ட சிறையிலிருந்து, குற்றம் சாட்டப்பட்ட இவர்கள் எப்படி தப்பியிருக்க முடியும் என்பது கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. இது எப்படி நடந்தது என்பது குறித்து மாநில அரசு முழு விளக்கத்தினை அளிக்க கடமைப்பட்டுள்ளது.

இந்த நபர்கள் ஆயுதம் தாங்கியிருந்ததாகவும், தங்களை தாக்கியதால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் மத்தியப்பிரதேச காவல்துறை கூறுவது, மாநில உள்துறை அமைச்சர் பூபேந்திரசிங்கின் கூற்றிலிருந்து முரண்பட்டதாக உள்ளது. மேற்படி நபர்கள், ஆயுதங்களை கைப்பற்றி கொண்டு சென்றதாக கூறப்படும் அதே வேளையில், அவர்களால் தப்பிப்பதற்கு ஒரு வாகனத்தை கைப்பற்றி கொள்ள முடியவில்லை என்று கூறுவது பொருத்தமற்றதாக உள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ கிளிப்புகளில் தரையில் கிடக்கும் ‘தப்பிச் சென்ற’ ஒரு நபரை போலீசார் சுடுவது பதிவாகியிருக்கிறது. மற்றொரு காட்சியில், தாங்கள் சரணடைய விரும்புவதாக உணர்த்தும் விதத்தில் ஒருவர் போலீசாரை நோக்கி கைகளை உயர்த்தி அசைப்பது பதிவாகியுள்ளது. இவை அனைத்தும், போலீஸ் தரப்பு தகவல்களின் உண்மை தன்மை குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்புகின்றன.

இத்தகைய பின்னணியில், இந்த ஒட்டுமொத்த சம்பவம் குறித்து பதவியிலிருக்கும் நீதிபதி தலைமையிலான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மத்தியப்பிரதேச முதலமைச்சர் தேசிய புலனாய்வு முகமையால் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இத்தகைய விசாரணை எந்த விதத்திலும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவோ, ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவோ இருக்காது.

Check Also

கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு – கே.பாலகிருஷ்ணன் கடிதம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும், அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்திட ...