நெடுஞ்சாலைத்துறையில் ரூ. 10 ஆயிரம் கோடிக்கணக்கான டெண்டர் பணிகளை நிறுத்தி வைத்து – அந்நிதியை கொரோனா நோய்த்தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்திடுக!

தமிழக முதல்வருக்கு சிபிஐ (எம்) கடிதம்

பெறுநர்

            மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,

            தமிழ்நாடு அரசு,

            தலைமைச் செயலகம்,

            சென்னை – 600 009.

மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.

பொருள்:-  கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு – மருத்துவம் மற்றும் நிவாரணப் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கிடுவது – பல விமர்சனங்களுக்கு மத்தியில் திட்டமிடப்பட்டுள்ள நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை நிறுத்தி வைக்கக் கோருவது தொடர்பாக:

            தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் சுமார் ரூ. 10,000 கோடி அளவுக்கு தமிழகம் முழுவதும் டெண்டர் விடுவதற்கு நெடுஞ்சாலைத்துறை அறிவிப்புகளை செய்து பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலைத்துறையில் திட்டமிடப்பட்டுள்ள டெண்டர்கள் குறித்து பல விமர்சனங்களும், கேள்விகளும் எழும்பியுள்ளன. ஏற்கனவே, சென்னை, உயர்நீதிமன்றத்திலும் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

            இதில் தஞ்சாவூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில் மட்டும் 833 கி.மீ.க்கு ரூ. 1827 கோடி திட்டம் மதிப்பீடு உள்பட டெண்டருக்கான அறிவிப்பாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, தஞ்சாவூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில், பராமரிப்பு ஒப்பந்தத்தின் கீழ் (பி.பி.எம்.சி.) ஒரு கி.மீ.க்கு ரூ. 2.25 கோடி மதிப்பீடு செலவில் தயார் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் இதே போல பராமரிப்பு ஒப்பந்ததின் கீழ் (பி.பி.எம்.சி.) திட்டமிடப்பட்ட சாலைகளுக்கு சராரியாக ஒரு கி.மீ.க்கு ரூ. 1.30 கோடி செலவுக்கு மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தஞ்சை மாவட்டத்தில் மட்டும் ஒரு கி.மீ.க்கு ரூ. 2.25 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது அதீத மதிப்பீடாக உள்ளது. இதற்கான காரணங்கள் வெளிப்படையாக இல்லை.

            தஞ்சை மாவட்டத்தில் உள்ள சாலைகள் ஏற்கனவே ஒருங்கிணைந்த சாலைகள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முழுமையாக மேம்படுத்தப்பட்டுள்ளன. கூடுதல் செலவு செய்து மேம்படுத்தப்பட்ட சாலைகளுக்கு, இப்போது கூடுதலான மதிப்பீடு செய்யப்பட்டது ஏன் என கேள்வி எழுகிறது.

            இந்த பராமரிப்பு ஒப்பந்தத்தின் கீழ் சாலைகள் பராமரிப்பு மட்டுமே செய்ய வேண்டும். அதாவது சாலைகளில் ஏற்படும் பழுதுகளை அவ்வப்போது சரி செய்வதற்கான ஒப்பந்தமாகும். ஆனால், நடைமுறையில் ஏற்கனவே மேம்பாடு செய்யப்பட்ட சாலைகளை அகலப்படுத்துதல், வலுப்படுத்துதல், வடிகால் பணிகளை மேற்கொள்வது போன்ற பணிகள் அனைத்தும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இது, அந்த செயல்பாட்டு பராமரிப்பு ஒப்பந்தத்திற்கு முரணாக உள்ளது.

            ஏற்கனவே தமிழகத்தில் 7 கோட்டங்களில் பராமரிப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனுடைய அனுபவங்கள் குறித்து உரிய ஆய்வுகளை மேற்கொள்ளாமல் தொடர்ந்து தமிழகத்தின் மேலும், மேலும் கோட்டங்களை இந்த பராமரிப்பு ஒப்பந்ததின் கீழ் ஒப்படைப்பது எதிர்பார்த்த பலனை தருமா என்கிற கேள்வி எழுகிறது.

            பொதுவாக, டெண்டர்கள் ஆன்லைன் மூலம் நடத்துவதே சிறந்ததாகும். ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி ஆகிய நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று நிறைவேற்றப்படும் வேலைகளுக்கான டெண்டர்களில் எல்லா ஆவணங்களையும் ஆன்லைனில் அனுப்பும் நடைமுறை உள்ளது. ஆனால், நெடுஞ்சாலைத்துறையில் அவ்வாறு ஆன்லைன் மூலம் டெண்டர்கள் விடப்படுவதாக தெரியவில்லை. அதாவது, ஒவ்வொரு வேலைக்கான தொகையை மட்டுமே ஒப்பந்தக்காரர்கள் ஆன்லைன் மூலம் தெரிவிக்கிறார்கள். ஆனால், ஒப்பந்தத்திற்கான வைப்புத் தொகை, கருவிகள், தளவாடங்கள் குறித்த சான்றிதழ்களை நேரடியாக கொடுக்கும் நடைமுறை உள்ளது. இதைப்பயன்படுத்தி தங்களுக்கு வேண்டாத ஒப்பந்தக்காரர்களின் வைப்புத் தொகையும், தளவாடங்கள் மற்றும் கருவிகள் சான்றிதழ்களை வாங்க மறுத்துவிட்டு இவர்களது ஒப்பந்தங்களை நிராகரிக்க வாய்ப்புள்ளது.

            கொரோனா நோய்த் தொற்று மிகவும் தீவிரமடைந்து வருகிறது. மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதை எதிர்த்து ஒரு தீவிரமான போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஏற்கனவே தமிழக அரசின் நிதி நிலைமை மிகுந்த நெருக்கடியில் உள்ளது.

            இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின் படி ரூ. 4.53 லட்சம் கோடி மாநிலத்திற்கு கடன் சுமை உள்ளது. நடப்பாண்டு நிதிப்பற்றாக்குறை ரூ. 43 ஆயிரம் கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு பிறகு மாநிலத்தின் சொந்த வருவாய் பெருமளவு பாதித்துள்ளது. மாண்புமிகு. முதலமைச்சரின் அறிவிப்பின் படி நடப்பாண்டில் கொரோனாவால் ரூ. 85 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

            இது மட்டுமின்றி மாநிலத்தின் வருவாய் குறைந்து வரும் சூழலில் திட்டமிடாத பல செலவுகள் அதிகமாகிக் கொண்டுள்ளன. குறிப்பாக, கொரோனா நோய்த் தொற்றுக்காக மருத்துவம், சுகாதாரப் பணிகளுக்காக பல ஆயிரம் கோடி செலவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் மருத்துவ பணிகளுக்காகவும், நிவாரணப் பணிகளுக்காகவும் தமிழக அரசு ஒதுக்கியுள்ள தொகை மிகச் சொற்பமானதே. அடுத்த பல மாதங்களுக்கு நோய்த் தொற்று மற்றும் மருத்துவ பணிகளுக்காகவும், மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்காகவும் மேலும் பல ஆயிரம் கோடிகளை செலவழிக்க வேண்டியுள்ளது. மத்திய அரசும், தமிழக அரசு கோரியுள்ள நிதியினை வழங்கவில்லை. கடன் தொகையைப் பெற்றே தற்போது தமிழக அரசு நிலைமைகளை சமாளித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்று மற்றும் வாழ்வாதாரத்திற்கு முன்னுரிமை கொடுத்து மக்களை காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு தமிழக அரசின் முன் உள்ளது.

            எனவே, சாலைகள், பொதுப்பணித்துறை மற்ற பணிகள் அவசியம் என்ற போதிலும், கொரோனாவை எதிர்த்த பணிக்கு கூடுதல் முன்னுரிமை கொடுக்கும் வகையில், தமிழக அரசு திட்டமிட்டு பணியாற்றுவதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். இத்தகைய சூழ்நிலையில் நெடுஞ்சாலைத்துறையில் ரூ. 10,000 கோடிக்கான டெண்டர்களை கோருவதும், அதிலும் மேலே குறிப்பிட்டுள்ள பல விமர்சனங்களும், கேள்விகளும் எழும்பியுள்ள நிலையில் இந்த டெண்டர் அவசியம் தானா என கேள்வி எழுகிறது.

            நடப்பு ஆண்டிற்கு செலவுகளை ஈடுகட்டுவதே பெரும் பிரச்சனையாக உள்ள போது, நெடுஞ்சாலைத்துறையில் 5 ஆண்டுகளுக்கான பராமரிப்பு ஒப்பந்தம் மேற்கொள்வதும், அதற்கான தொகையினை முன்கூட்டியே ஒப்பந்தக்காரர்களுக்கு ஒப்படைப்பதும் அவசியமற்றதாகும். இவ்வாறு செய்வது பல முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

            எனவே, தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறையில் மிகவும் அவசியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளைத் தவிர இதர பணிகளுக்கான டெண்டர்களை நிறுத்தி வைத்து, அந்த நிதியினை கொரோனா மருத்துவம் மற்றும் மக்களது நிவாரணப் பணிகளுக்கு செலவழிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,

தங்களன்புள்ள,

(கே. பாலகிருஷ்ணன்)

மாநிலச் செயலாளர்

Check Also

தடுப்பூசி தயாரிக்கும் பணியில் செங்கல்பட்டு `ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை விரைவில் செயல்படுத்திட கோரி டி.கே.ரங்கராஜன் பிரதமருக்கு அவர்களுக்கு கடிதம்…

தடுப்பூசி தயாரிக்கும் பணியில் செங்கல்பட்டு `ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை விரைவில் செயல்படுத்திட கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...