நெய்வேலியில் பாய்லர் வெடித்து 6 தொழிலாளிகள் மரணம்மேலும் பலர் படுகாயம்! தொடர் விபத்துகளுக்கு காரணங்களை விசாரிக்க உயர்மட்டக்குழு அமைத்திடுக!!

மேலும் பலர் படுகாயம்! தொடர் விபத்துகளுக்கு காரணங்களை விசாரிக்க உயர்மட்டக்குழு அமைத்திடுக!!

இந்தியாவின் நவரத்தினா நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி. இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இன்று (1.07.2020) காலை 2வது அனல் மின்நிலையத்தில், 5வது யூனிட்டில் பாய்லர் வெடித்து ஆறு தொழிலாளர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 16க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த கோர விபத்தில் இன்னும் பலர் பாதிக்கப்பட்டிக்கக் கூடும் என கிடைக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.

இதே இரண்டாவது அனல் மின் நிலையத்தில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 6வது யூனிட் பாய்லர் வெடித்து, நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர், ஆறு பேர் படுகாயமடைந்தனர். இந்த காயம் ஆறுவதற்கு முன்பே, மீண்டும் இந்த கொடூரமான விபத்து நடந்துள்ளது. நெய்வேலி நிறுவனத்தில் நடைபெறும் தொடர் விபத்துக்கள் பல தொழிலாளர்களின் உயிரிழப்புக்கு நெய்வேலி நிறுவனத்தின் நிர்வாகமே முழு பொறுப்பேற்க வேண்டும்.

குறிப்பாக, அனல் மின் நிலையத்தில் பாய்லர்கள் பராமரிப்பு பணியை பொதுத்துறை நிறுவனமான திருச்சி ஃபெல் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு மாறாக, தனிப்பட்ட காண்ட்ராக்டரிடம் ஒப்படைத்துள்ளனர். தனிப்பட்ட காண்ட்ராக்டர்கள் இந்த பாய்லர்களை முறையாக பராமரிக்காத காரணத்தினாலேயே இந்த கோர விபத்துகள் தொடர்ந்து நடைபெறுகின்றன என தெரிய வருகிறது. இந்த ஒப்பந்த ஏற்பாடுகளில் ஊழல் – முறைகேடுகளும் இருப்பதற்கு வாய்ப்புள்ளதாக கருத வேண்டியுள்ளது.

துயரத்தில் வாடுகிற உயிரிழந்த தொழிலாளர்களின குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். நெய்வேலி நிறுவனம் இறந்துபோன தொழிலாளர்களுக்கு தலா ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர பணியும், படுகாயமடைந்தவர்களுக்கு பூரண குணமடையும் வரை உயர் சிகிச்சையளிப்பதோடு தலா ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடு அளிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், மத்திய அரசு நெய்வேலி நிறுவனத்தில் நடைபெறும் தொடர் விபத்துக்கள் தொடர்பாக உயர்மட்டக்குழு அமைத்து விசாரிக்க வேண்டுமெனவும், அதில் சம்பந்தப்பட்ட உயர்மட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.

இத்தகைய விபத்துகள் தொடர்ந்து நடைபெறா வண்ணம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அக்குழு விசாரித்து அளிக்கும் சிபாரிசுகள் மீது, நெய்வேலி நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

கே. பாலகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

5000 பட்டதாரி ஆசிரியர்கள், 1250 தமிழாசிரியர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் பணி வழங்கிட தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்

03.8.2021 பெறுநர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம்.   பொருள்:- கடந்த ...