நோய் தொற்றிலிருந்து மாணவர்கள் பாதுகாக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டபோது நோய் தொற்று அதிகமாக உள்ளது என அனைவரும் வற்புறுத்தியதன் பேரில் அதனை கணக்கில் கொண்டு ஜூன் 15ம் தேதி அரசு ஒத்தி வைத்தது.
ஆனால் இப்போது உள்ள சூழ்நிலையில் கடந்த காலங்களைவிட நோய் தொற்று மிக மோசமாக பரவி வருகிறது. சாவுகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகி வருகிறது.

இந்தியாவிலேயே நோய்த்தொற்று அதிகம் பாதித்த இரண்டாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆகையால் இந்த தேர்வுகளை இப்போது நடத்த வேண்டாம் என அனைவரும் வலியுறுத்தினார்கள்.  ஆனால் தமிழக அரசைப்  பொறுத்தவரை இதையெல்லாம் கவலைப்படாமல் தேர்வுகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மும்முரமாக செய்து வந்தது.  குறிப்பாக ஜூன் 8-ந் தேதி திங்களன்று காலை முதல் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுக்கான அனுமதி சீட்டு வழங்கும் பணியை செய்திருந்தனர். 

அதைப்போன்று ஆசிரியர்களை எல்லாம் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டு தேர்வு மையங்களை சரி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.  தேர்வுகளை எப்படியேனும் நடத்த வேண்டும் என அரசு கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒருங்கிணைந்து பேசி, இப்போது உள்ள சூழ்நிலையில், பொதுத்தேர்வு நடந்தால்  மோசமான விளைவுகளை உருவாக்கும்  என்ற அச்சத்தின் காரணமாக,  எதிர்க்கட்சிகள்  அனைத்தும் ஜூன் 10- ந்தேதி போராட்டம் நடத்தவுள்ளதாக  அறிவிப்பை வெளியிட்டன.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றமும் இது குறித்து பல கேள்விகளை எழுப்பியது. பொதுத்தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டால் யார் பொறுப்பு ஏற்பது, அரசு பொறுப்பேற்றுக் கொள்ளுமா? என கேட்டது.  எதிர்க்கட்சிகளின் இவ்வளவு வற்புறுத்தலுக்கு பிறகுதான்,  இப்போது பொதுத்தேர்வு இல்லை என்ற முடிவுக்கு தமிழக அரசு வந்துள்ளது.  பல லட்சம் மாணவர்களை நோய் தொற்றிலிருந்து காப்பாற்றும் இம்முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது.


– கே.பாலகிருஷ்ணன். மாநிலச்செயலாளர்

Check Also

பிரதமரே நடிக்காதீர்… செயல்படுங்கள்… கொரானாவை எதிர்கொள்ள…

நாடு முழுவதும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோவிட் பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் மரணங்களைத் தடுத்து நிறுத்தவும், மருத்துவ ...