பசுமைத் தீர்ப்பாயத்தில் – ஸ்டெர்லைட் ஆலை மூடல் குறித்த தமிழக அரசின் வாக்குமூலத்தை தாமதமின்றி சமர்ப்பிக்க கோரி முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள், இன்று (09.08.2018) ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்.


9-8-2018

பெறுதல்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009.

மதிப்புக்குரிய முதல்வர் அவர்களுக்கு,

வணக்கம்.

பொருள் : பசுமைத் தீர்ப்பாயத்தில் – ஸ்டெர்லைட் ஆலை மூடல் குறித்த தமிழக அரசின் வாக்குமூலத்தை தாமதமின்றி சமர்ப்பிக்க கோருதல் தொடர்பாக…

மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த வேதாந்தா குழுமத்தின் நிறுவனமான தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடுவதற்கு அம்மக்கள் நடத்திய போராட்டம், அதை ஒட்டிய துப்பாக்கி சூடு உள்ளிட்ட அரசு வன்முறை போன்றவற்றின் பின்னணியில் ஆலையை மூடுவதற்குத் தங்கள் அரசு, அரசாணை வெளியிட்டு ஆலை மூடப்பட்டது. அதன் பிறகும் ஆலையைத் திறந்து விடுவார்களோ என்ற அச்சம் அவ்வப்போது மக்கள் மத்தியில் எழுந்தது. அரசாணையை எதிர்த்து, ஆலை நிர்வாகம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தது. அரசு தரப்பு பதில் கேட்டு வழக்கு தற்போது ஆகஸ்ட் 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் டெல்லியில் தம் நிறுவனத்தின் ஆண்டறிக்கையை வெளியிட்டுப் பேசிய வேதாந்தா குழுமத்தின் பிரதிநிதி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறப்பதை விரைவுபடுத்த அதிகாரிகளுடன் இணைந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார். பிரதான செய்தித் தாள்களில், சுற்றுச்சூழலுக்கு ஆலையால் எவ்விதக் கேடும் இல்லை என்ற ரீதியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தொடர்ந்து விளம்பரம் வெளியிட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்புகள் இருப்பதை சுட்டிக்காட்டியே ஆலை மூடலுக்குத் தங்கள் அரசு உத்தரவிட்டது. ஆனால் அதற்கு மாறான செய்திகளையே தம் விளம்பரத்தில் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இதற்கு ஒரு வலுவான மறுப்பு அரசு தரப்பில் ஏன் இல்லை என்ற கேள்வி எழுகிறது.  மேலும், பசுமை தீர்ப்பாயத்தில் இது வரை, அரசு தரப்பு பதில் எழுத்து மூலமாகத் தாக்கல் செய்யப்படவில்லை என தெரிகிறது. இந்த அணுகுமுறை ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை நிர்வாகத்துக்கே சாதகமாக அமையும். எனவே உடனடியாக, ஆலையை மூடியதற்கான நியாயங்களை எழுத்து மூலமாக பசுமை தீர்ப்பாயத்திடம் தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மேலும் கீழ்க்கண்ட கேள்விகளுக்கான விளக்கங்களையும் அரசு சார்பில் சமர்ப்பித்திட வேண்டும்.

1.    ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை செயல்படுவதற்கு தமிழக அரசு வழங்கியிருந்த அனுமதி 31.03.2018 உடன் முடிந்து விட்டது. மீண்டும் ஆலை நடத்திட அனுமதி கேட்டு நிர்வாகம் அளித்திருந்த மனுவும் 09.04.2018 அன்று  தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நிராகரிக்கப்பட்டு, உரிய முன் அனுமதியின்றி ஆலையில் எவ்விதமான பணிகளும் மேற்கொள்ளப்படக் கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், 18.05.18 மற்றும் 19.05.18 தேதிகளில் திருநெல்வேலி முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர் ஆய்வு செய்த போது, மீண்டும் ஆலையைத் துவக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததால் மின் விநியோகத்தை ரத்து செய்து ஆலையை மூடிட உத்தரவிட 23.05.18 தேதியிட்ட தன் அறிக்கையில் கூறியுள்ளார். மேற்கூறிய ஆய்வு உள்ளிட்ட விவரங்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மூடுதல் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தற்போது நடந்து வரும் வழக்கில், ஸ்டெர்லைட் ஆலை 25.07.18 அன்று தாக்கல் செய்துள்ள இடைக்கால மனுவில், மேற்சொன்ன 18.05.2018 மற்றும் 19.05.18 தேதிகளில் எவ்வித ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறியுள்ளனர். இது குறித்து உரிய விளக்கத்தினைத் தமிழக அரசு அளிக்க வேண்டும்.

2.    சிப்காட் அலகு 1ல் தான் ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ளது. ஆனால் சிப்காட் 2வது அலகில் ஆலை, தன் இரண்டாவது யூனிட்டிற்கான கட்டுமானங்களை 80 சதவிகிதம் அளவில் எழுப்பி உள்ளது. ஆனால் சிப்காட் அலகு 2 மற்றும் அதற்கான பணிகள் முழுமை பெற்று தொழிற்பூங்கா நிறுவப்படாத நிலையில் ஆலை எழுப்பியுள்ள கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதையும், தூத்துக்குடி மாநகராட்சிக்கான மாஸ்டர் பிளானில் சிப்காட் தொழிற்பூங்கா அடங்கியுள்ளதா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

3.    ஸ்டெர்லைட் ஆலையின் முதல் யூனிட் எந்த நில அளவீட்டில் புல எண்களில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதையும், அவற்றின் விஸ்தீரணத்தையும் வெளியிட வேண்டும்.

4.    ஸ்டெர்லைட்டுக்கு எவ்வளவு நிலம் ஒப்படை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும். அதே போல் நீர் விநியோகம் செய்யப்படுவது குறித்த விவரங்களையும் வெளியிட வேண்டும்.

5.    ஸ்டெர்லைட் ஆலை துவங்கியதில் இருந்து 2018 ஜனவரி மாதம் வரை எத்தனை டன் தங்கம், வெள்ளி, பிளாட்டினம், பல்லாடியம் உற்பத்தி செய்யப்பட்டது என்பதையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.

பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை, ஆலையைத் திறப்பதற்கு சாதகமான உத்தரவைப் பெற்று விடாமல் இருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனை கவனத்தில் கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வற்புறுத்துவதோடு, இதனை செய்ய தவறும்பட்சத்தில் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்படுவதாக தமிழக மக்கள் கருத வாய்ப்பு ஏற்படும் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

இப்படிக்கு,
/ஒப்பம்
(கே.பாலகிருஷ்ணன்)
மாநிலச் செயலாளர்

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...