பட்ஜெட் ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு அநீதி…

உண்மையை அப்பட்டமாக்கும் தென்னக ரயில்வேயின் விளக்கம்
சு.வெங்கடேசன் பத்திரிக்கையாளர் சந்திப்பு

மத்திய பட்ஜெட்டில் தென்னக இரயில்வேயில் தமிழகத்துக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்து ஞாயிறன்று செய்தி வெளியிட்டிருந்தேன். இதனைத் தொடர்ந்து தென்னக இரயில்வேயின் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி பத்திரிக்கை குறிப்பொன்றினை (510/2019-20) வெளியிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தமிழகத்துக்கான பத்து புதிய வழித்தடங்களின் விபரங்களைச் சொல்லி அவைகள் அனைத்துக்கும் தலா ஆயிரம் ரூபாய் வீதம் பத்தாயிரம் ரூபாய்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வடக்கு இரயில்வேயில் புதிய வழித்தடங்களுக்கு சுமார் 7000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று நான் கூறினேன். இவைகள் எதையும் அந்த செய்தி குறிப்பு மறுக்கவில்லை.

இதன் மூலம் தென்னக இரயில்வேயில் தமிழகத்துக்கான பத்து புதிய வழித்தடங்களுக்கு 10000 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மீண்டுமொரு முறை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதேநேரம் இரட்டை வழிப்பாதைக்கான திட்டங்களைப் பற்றிய விபரங்களை செய்திக் குறிப்பில் விளக்கியுள்ளனர். உப்பு எங்கே? என்று கேட்டால் இதோ பருப்பு இருக்கிறது என்று கூறியுள்ளனர். சரி, இவர்கள் கொடுத்துள்ள பருப்பின் விபரத்தைப் பார்ப்போம்.

தமிழகத்தில் இரட்டை வழிப்பாதைக்கான ஆறு திட்டங்களைக் குறிப்பிட்டு 826 கிலோ மீட்டருக்கு 8501 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாக இச்செய்தி குறிப்பு கூறுகிறது.

அவர்கள் கூறும் ஆறு திட்டத்தில், தர்மாவரம்-பாகலா-காட்பாடி இரட்டைப் பாதை 290 கிலோ மீட்டர் 2900 கோடி திட்டம் என்று கூறுகிறார்கள். இது தென் மத்திய இரயிவேயின் திட்டம். இந்த வழித்தடத்தில் சுமார் 90 சதவிகிதம் ஆந்திர மாநிலத்துக்கானது. அதேப்போல ஓசூர்- ஓமலூர் இரட்டைப்பாதைக்கு 147 கிலோ மீட்டர் 1470 கோடி திட்டம் என்று கூறுகிறார்கள். இது தென்மேற்கு இரயில்வேயின் திட்டம், இந்த வழித்தடத்தில் சுமார் 90 சதவிகிதம் கர்நாடக மாநிலப் பகுதியாகும். தென் மத்திய இரயில்வே மற்றும் தென்மேற்கு இரயில்வேயின் திட்டங்களை தென்னக இரயில்வே தனது திட்டமாக எப்படி கூறுகிறது? என்று முதலில் விளக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட இரண்டினைத் தவிர மற்ற நாண்கு இரட்டை வழிப் பாதை திட்டங்களான 1. காட்பாடி – விழுப்புரம், 2. சேலம்-கரூர்-திண்டுக்கல், 3. ஈரோடு-கரூர். 4.சென்னை பீச் – சென்னை எழும்பூர் ஆகிய நாண்கு மட்டுமே தமிழகத்துக்கான தென்னக இரயில்வேயின் புதிய இரட்டைவழிப்பாதை திட்டங்களாகும்.

தென்னக இரயில்வே செய்திகுறிப்பில் கூறியுள்ள 826 கிலோமீட்டர் நீளத்துக்கான இரட்டைப் பாதைக்காக 8501 கோடி திட்டம் என்பது உண்மையல்ல, மாறாக 381 கிலோ மீட்டர் நீளத்துக்கான 4100 கோடி மதிப்பிலான திட்டம்தான் தென்னக இரயில்வேயின் தமிழகத்துக்கான புதிய இரட்டை வழிப்பாதை திட்டங்களாகும்.

இதில் அதிர்ச்சிதரத் தக்க செய்தி என்னவென்றால் இவர்கள் சொல்லுகிற இரட்டை வழிப்பாதைக்கான இந்த ஆறு புதிய திட்டங்களுக்கும் இந்த ஆண்டு (2020-21) தலா 1000 ரூபாய் வீதம் 6000 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே குறிப்பிட்ட பத்து புதிய வழித்தடத்துக்கு பத்தாயிரம் ரூபாயும், இப்பொழுது தென்னக இரயில்வே குறிப்பிட்டுள்ள ஆறு இரட்டை வழிப்பாதைக்கான திட்டங்களுக்கு ஆறாயிரம் ரூபாயும் தான் 2020-21 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய வழித்தடத்துக்கான திட்டங்களிலும் தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. புதிய இரட்டை வழிபாதைக்கான திட்டத்திலும் தமிழகம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.

Check Also

தடுப்பூசி உபகரண ஏற்றுமதி தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்; சிபிஐ(எம்) வலியுறுத்தல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் பல்வேறு துணைப் பொருட்களின் பற்றாக்குறையால் தேவையான அளவிற்கு தடுப்பூசிகள் ...