பட்டியலின மக்களுக்கான சிறப்பு உட்கூறு திட்ட நிதியில் சத்தியவாணிமுத்து நகர் மக்களுக்கு கே.பி.பூங்கா குடியிருப்பில் வீடுகளை ஒதுக்க தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்

பெருநகர சென்னை மாநகராட்சி 59வது வட்டத்தில் உள்ள சத்தியவாணிமுத்து நகர், காந்திநகர், இந்திராகாந்தி நகர் பகுதிகளில் கூவம் ஆற்றுக்கரையோரம் பல தலைமுறைகளாக குடியிருப்போர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என பெயரிட்டு நகரை விட்டு வெளியேற்றி, 40 கி.மீ.க்கு அப்பால் உள்ள பெரும்பாக்கத்தில் குடியமர்த்துகின்றனர். இது அம்மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்கு எதிரானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது.

வலுக்கட்டாயமாக சென்னைக்கு அப்பால் குடியமர்த்துவதற்கு மாறாக, (தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் அளித்த தகவலின் படி) கூவம். பக்கிங்காம் மற்றும் அடையாறு கால்வாய் ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்து வசித்து வருபவர்களுக்கு கேசவப்பிள்ளை திட்டப்பகுதியில் கட்டப்பட்ட 1056 வீடுகளில் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கூவம் கரையோர ஆக்கிரமிப்பாளர்கள் என கடைசி கட்டத்தில் அப்புறப்படுத்தப்பட்டுள்ள 191 குடும்பங்களுக்காகவது கேசவப் பிள்ளை பூங்கா திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 1056 குடியிருப்புகளில் இடம் ஒதுக்க கோரி மாண்புமிகு துணை முதல்வர் அவர்களை நேரடியாக 31.12.2020 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா ஆகியோர் சந்தித்து மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட துணை முதல்வர் அவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தார்.

கூவம் கரையோரம் இருக்கக்கூடிய மக்களை அப்புறப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை (CRRT) ரூ.65,000/- மட்டுமே குடிசைப்பகுதி மாற்று வாரியத்திற்கு செலுத்தியுள்ளதால் மீதி தொகையை (CRRT) அல்லது தனிநபர்கள் வாரியத்திற்கு செலுத்தினால், கேசவ பிள்ளை பூங்கா திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 1056 குடியிருப்புகளில் மேற்படி வீடுகள் கோரும் மக்களுக்கு ஒப்படைப்பதற்கு ஏதுவாக இருக்கும் என வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேற்கண்ட நிதியை தனிப்பட்ட பயனாளிகளிடமிருந்து பெறுவதற்கு மாறாக CRRT-யிடம் அல்லது பட்டியலின மக்களுக்கான சிறப்பு உட்கூறு திட்டத்தில் அம்மக்களின் வாழ்வாதாரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் பெற்றுக் கொண்டு சம்மந்தப்பட்ட பயனாளிகளுக்கு கேசவ பிள்ளை பூங்கா திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 1056 குடியிருப்புகளில் ஒதுக்கீடு செய்யுமாறு குடிசைப்பகுதி மாற்று வாரிய அதிகாரிகளிடம் எங்களது கட்சி சார்பில் முறையிட்டோம்.

ஆனால், குடிசைப்பகுதி மாற்று வாரிய அதிகாரிகளோ சென்னை மாநகரத்திற்குள்ளேயே குடியமர்த்துவதற்கு வாய்ப்பிருந்தும் அதற்கு மாறாக, மணலி புதுநகரில் கட்டப்பட்டுள்ள குடிசைப்பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில் ஒதுக்குவது ஆலோசிப்பதாகவும் கூறுகின்றனர். அதிலும் மணலி புதுநகரில் கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் சுமார் 1 1/2 லட்சம் ரூபாய் செலுத்தினால் மட்டுமே வீடுகளை ஒதுக்க பரிசீலிக்கப்படும் என குடிசைப்பகுதி மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

கூவம், பக்கிங்காம் மற்றும் அடையாறு கால்வாய் ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்து வசித்து வருபவர்களுக்கென கட்டப்பட்ட கேசவப்பிள்ளை பூங்கா 1056 குடியிருப்புகளில் கூவம் கரையோரம் சத்தியவாணிமுத்து நகரில் வசித்த குடும்பங்களுக்கு வீடுகளை ஒதுக்க மறுப்பது எந்தவிதத்திலும் நியாயமல்ல.

சென்னை மாநகரத்திற்குள்ளேயே வாழும் தலித் மக்களின் குடியிருப்பதற்கான வாழ்வாதார உரிமையை மறுக்கக்கூடிய வகையில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. கூவம் கரையோரம் குடியிருந்த மக்களுக்கு மறுக்கப்படும் அதே வீடுகள் மற்றவர்களுக்கு பணத்தின் அடிப்படையில் ஒதுக்குவது என எந்த அடிப்படையில் முடிவெடுத்து குடிசைப்பகுதி மாற்று வாரியம் செயல்படுகிறது என்பதை விளக்க வேண்டும். குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் இத்தகைய செயல்பாடுகள், அது உருவாக்கியதன் நோக்கத்தையே சிதைக்கக் கூடிய செயலாக அமைந்துவிடும்.

தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு உட்கூறு திட்ட நிதியில் உள்ள கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழிக்காமல், மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கும் தமிழக அரசு, அந்நிதியை பயன்படுத்தி, சென்னை மாநகரத்திற்குள்ளேயே ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கான வீடுகளை ஒதுக்குவதற்கு முன்வர வேண்டும். குறிப்பாக, இப்போது சத்தியவாணிமுத்து நகரில் இருந்து கடைசி கட்டத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் என அப்புறப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு கேவசப்பிள்ளை பூங்கா திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 1056 வீடுகளில், வீடுகள் ஒதுக்கீடு செய்து இம்மக்களின் வாழ்வாதார உரிமையை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...