பண்ருட்டி தோழர் எஸ். துரைராஜ் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் எஸ். துரைராஜ் (வயது 76), சிறுநீரகப் பாதிப்பு மற்றும் கோவிட் – 19 நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (01.09.2020) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்த தோழர் துரைராஜ் ஹோட்டல் தொழிலாளியாக பணிபுரிந்தார். தென்னாற்காடு மாவட்டம் முழுவதும் ஹோட்டல் தொழிலாளர்களை அணி திரட்டி சங்கம் அமைத்து போராடியதில் முக்கிய பங்கு வகித்தவர். 1970ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராகவும் பல கட்ட போராட்டங்களை தலைமையேற்று நடத்தியவர். ஒன்றுபட்ட தென்ஆற்காடு மாவட்ட செயற்குழு உறுப்பினர், விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர், வி.தொ.ச. மாநில பொருளாளர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் என பல பொறுப்புகளை வகித்து திறம்பட பணியாற்றியவர். குறிப்பாக, பண்ருட்டி வட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதில் முக்கியப் பங்காற்றியவர். அவருடைய மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், குறிப்பாக, கடலூர் மாவட்டக்குழுவிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த வருத்தத்தையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...