பத்திரிகை நிருபர் கேமிராவை உடைத்து காவல்துறையினர் அராஜகம் – சிபிஐ(எம்) கண்டனம்!

நேற்று (21.4.16) விழுப்புரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் காவல்துறையினர் ஒரு இளைஞரை வெறித்தனமாக தாக்கிக் கொண்டிருந்தனர்.  கூடியிருந்த  பொதுமக்களும், அங்கிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஜி. ஆனந்தனும்  காவல்துறையினரின் செயலை கண்டித்தனர்.
“இளைஞன் குற்றம் செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்; மாறாக, அவரை பொதுவெளியில் அடித்தது சரியல்ல” என்று அவர்கள் கூறியுள்ளனர். தோழர் ஆனந்தனையும், தடுக்க வந்த பொதுமக்களையும் கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி காவல்துறையினர் அவமானப்படுத்தினர்.
இந்த சம்பவத்தை அங்கு உடனிருந்த தீக்கதிர் நிருபர் வி. சாமிநாதன் புகைப்படம் எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஒரு போலீஸ்காரர் சாமிநாதன் மீது பாய்ந்து சராமரியாக தாக்கினார். அவரிடமிருந்த கேமிராவை பிடுங்கி தரையில் வேகமாக ஓங்கி அடித்து உடைத்து சுக்குநூறாக்கினார். உடைந்த கேமிராவை எடுத்து தோழர் சாமிநாதன் மீது வீசி எறிந்து, அவமானப்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் முன்னிலையிலேயே ரவுடிகளைப் போன்று வெறித்தனமான செயல்களில் ஈடுபட்ட காவல்துறையின் நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
ஜனநாயக குரல் எழுப்புவோர் மீதும், ஜனநாயக ரீதியில் இயக்கங்களை நடத்துவோர் மீதும் அதிமுக அரசு தொடர்ந்து காவல்துறையை பயன்படுத்தி அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகிறது. ஊடகச் சுதந்திரத்தை நசுக்க முயல்கிறது. அதன் தொடர்ச்சியாக விழுப்புரம் சம்பவம் அமைந்துள்ளது.
பத்திரிகை நிருபர் சாமிநாதனின் கேமிராவை மீட்டுக் கொடுப்பதுடன் இச்சம்பவத்தோடு தொடர்புடைய காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Check Also

திருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை இழிவுபடுத்தும் நோக்கோடு நேற்று நள்ளிரவு சமூக விரோதிகள் ...