பயங்கரவாதிகளுடன் பாஜக கூட்டணி – திரிபுரா தேர்தலில் விரட்டியடிப்போம்: சீத்தாராம் யெச்சூரி

தேசபக்தி பற்றி வாய்ச்சவடால் அடிக்கும் பாரதிய ஜனதா கட்சி, திரிபுராவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பிரிவினைவாதிகளுடனும் பயங்கரவாதிகளுடனும் கூட்டணி அமைத்திருக்கிறது. திரிபுராவில் நல்லாட்சி நடத்தி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணியை தேர்தலில் எதிர்கொள்வதற்காக எத்தகைய இழிவான உத்தியையும் கடைப்பிடிப்பதற்கு பாஜக தயாராகி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. திரிபுராவில் இடதுசாரிகளுக்கு எதிராக எத்தகைய உத்தியை கையாண்டாலும் தேர்தலில் பாஜகவால் வெற்றிபெற முடியாது, இந்த உலகையே ஆளத் துடித்த நெப்போலியனே வாட்டர்லூ எனும் இடத்தில் நடைபெற்ற யுத்தத்தில் வீழ்த்தப்பட்டான்; அதேபோல ஒட்டுமொத்த இந்தியாவையும் அடிமையாக்கத் துடிக்கும் பாஜக மதவாத சக்திகளுக்கு திரிபுரா ஒரு வாட்டர்லூவாக அமையும்.

கொல்கத்தாவில் நடைபெற்ற கட்சியின் மத்தியக்குழு கூட்டத்திற்குப் பின்னர் ஞாயிறன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தபோதே சீத்தாராம் யெச்சூரி மேற்கண்டவாறு கூறினார்.

மத்தியக்குழு கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் ஜனவரி 19, 20, 21 தேதிகளில் கொல்கத்தாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற உள்ள கட்சியின் 22வது அகில இந்திய மாநாட்டிற்கான அரசியல் நகல் தீர்மானத்தை இறுதி செய்வதற்கான விவாதம் நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அரசியல் நகல் தீர்மானம், விவாதிக்கப்பட்டு, சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகு மத்தியக்குழுவால் நிறைவேற்றப்பட்டது. மத்தியக்குழுவால் நிறைவேற்றப்பட்ட அரசியல் நகல் தீர்மானம், கட்சி அகில இந்திய மாநாட்டு தேதிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு நாடு முழுவதும் உள்ள கட்சி உறுப்பினர்களின் விவாதத்திற்காக வெளியிடப்படும்.

சீத்தாராம் யெச்சூரி பேட்டி

மத்தியக்குழு கூட்டத்தின் முடிவுகளை விளக்கி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:

ஹைதராபாத்தில் நடைபெற உள்ள கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்கு முன்னதாக கட்சி அணிகளால் விவாதிக்கப்படுவதற்கான அரசியல் நகல் தீர்மானம் தற்போது மத்தியக்குழுவால் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த நான்கு மாத காலமாக கட்சி இந்தவிவாதத்தில் ஈடுபட்டது; மூன்று முறை கட்சியின் மத்தியக்குழு கூடி விவாதித்துள்ளது. இத்தகைய விரிவான விவாதமும் அதைத் தொடர்ந்து நிறைவேற்றுவதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் எந்த அளவிற்கு உயர்ந்து நிற்கிறது என்பதையே மீண்டும் ஒருமுறை பிரகடனம் செய்திருக்கிறது. கட்சியின் அரசியல் தலைமைக்குழுவால் முன்வைக்கப்பட்ட அரசியல் நகல் தீர்மானத்தின் மீது மத்தியக்குழு கூட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, அவை வாக்கெடுப்புக்கு விடப்பட்டு பெரும்பான்மை அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. கட்சியின் அகில இந்திய மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ள இந்த அரசியல் நகல் தீர்மானம், பாஜகவையும் அதன் அரசாங்கத்தையும் வீழ்த்துவதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான கடமை என்று வரையறை செய்கிறது. இந்திய மக்கள் மீது பாரதிய ஜனதா கட்சி நான்கு முனைகளில் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

முதலாவது, பாஜகவால் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் பொய்யானவை-போலியானவை என்பதை அதன் அரசு நடத்தி வரும் கொடூரமான பொருளாதார தாக்குதல்களே உணர்த்துகின்றன என்பதாகும். விவசாயிகள் வரலாறு காணாத நெருக்கடியில் சிக்கியிருக்கிறார்கள்; வேலையின்மை நிலைமை நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருகிறது; ஏழை – பணக்காரர் ஏற்றத்தாழ்வு இதுவரை இந்திய நாடு கண்டிராத அளவிற்கு தீவிரமடைந்துள்ளது.

இரண்டாவதாக, இந்துத்துவா சக்திகள் தீவிரமான முறையில் இந்திய நாட்டின் அனைத்து அம்சங்களையும் மதவெறிமயமாக்கி வருகிறார்கள்; மத ரீதியாக அணி திரட்டலை மேற்கொண்டு வருகிறார்கள். இது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

மூன்றாவதாக, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது முன்னெப்போதும் இல்லாதஅளவிற்கு தாக்குதல் தீவிரப்படுத்தப்ப்பட்டுள்ளது. அனைத்து தளங்களிலும் எதேச்சதிகாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. ஊடகங்கள், உச்சநீதிமன்றம், ஆராய்ச்சி நிறுவனங்கள் என அனைத்து அமைப்புகள் மீதும் இந்த தாக்குதல் ஏவப்பட்டுள்ளது. திரைப்படம் வெளியிடுவதற்கான உரிமையைக் கூட இந்துத்வா சக்திகள் பறிக்கின்றன. திரைப்பட தணிக்கைவாரியத்தின் அனுமதியைக் கூட பாஜக மாநில அரசாங்கங்கள் ஏற்க மறுக்கின்றன.

நான்காவதாக, மத்திய பாஜக அரசு அமெரிக்க நலன்களுக்கு சேவகம் செய்யும் விதத்தில் முற்றாக சரணடைந்திருக்கிறது. அமெரிக்காவின் சூழ்ச்சிக் கூட்டணியில் ஒரு கூட்டாளியாக இணைந்திருப்பதன் மூலம், பாஜக அரசு இந்திய பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் அமெரிக்க நிறுவனங்களின் லாபத்திற்காக திறந்து விடு கிறது; பாதுகாப்பு, நிதித்துறை, சில்லரை வணிகம் உள்ளிட்ட துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை தாராளமாக அனுமதிக்கிறது. இத்தகைய பின்னணியில், பாஜகவுக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளையும் அணிதிரட்ட நாங்கள் விரும்புகிறோம். அரசியல் நகல் தீர்மானத்தில், பாஜகவுக்கு எதிராக அதிகபட்ச வலிமையை ஒருங்கிணைக்கும் விதத்தில் பொருத்தமான தேர்தல் உத்திகளை வகுப்போம் என்று கூறியுள்ளோம். காங்கிரசுடன் அரசியல் அணியோ அல்லது கூட்டணியோ மேற்கொள்ளப்படமாட்டாது.

திரிபுரா சட்டமன்ற தேர்தல்

பேட்டியின்போது திரிபுரா தேர்தல் குறித்த கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு பதிலளித்து யெச்சூரி கூறியதாவது:

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல்கள் குறித்து கட்சியின் மத்தியக்குழு விவாதித்தது. குறிப்பாக திரிபுராவில் நிலவும் சூழல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. திரிபுராவில் இன்றைய நிலையில் பாரதிய ஜனதா கட்சி, இடதுசாரி எதிர்ப்பு முகாமாக மாறியிருக்கிறது. அவர்கள் இடது முன்னணி ஆட்சிக்கு எதிராக எவருடனும் கைகோர்க்க தயாராக இருக்கிறார்கள். பயங்கரவாத சக்திகளுடனும் கூட கைகோர்க்கிறார்கள். ஒருபுறம் நாடு முழுவதும் தேசபக்தியைப் பற்றி பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது. தேசியவாதம் என்று வாய்ச்சவடால் அடித்து வருகிறது. மாற்றுக் கருத்து கூறுபவர்களைக் கூட தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தி வருகிறது.

ஆனால் மறுபுறத்தில் திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் திரிபுரா தேசிய விடுதலை முன்னணி (என்எல்எப்டி) என்ற பயங்கரவாத அமைப்பின் அரசியல் முகமாகவும் பிரிவினைவாத இயக்கமாகவும் செயல்பட்டு வருகிற திரிபுரா பழங்குடிகள் விடுதலை முன்னணியுடன் (ஐபிஎப்டி) கரம் கோர்த்திருக்கிறது. இவ்விரு இயக்கங்களும் திரிபுராவை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் செயல்பட்டு வருகிற அமைப்புகளாகும். திரிபுராவை தனி நாடாக்க வேண்டும் என்றும், இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டுமென்றும் பிரிவினைவாத குரலையும் பயங்கரவாதத்தையும் கையாண்டு வருகிற மேற்கண்ட அமைப்பு களுடனும் பாஜக கரம் கோர்த்திருப்பது நாட்டின் ஒற்றுமைக்கே ஆபத்தானதாகும். இந்த அமைப்புகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு திரிபுராவில் பதற்றத்தை உருவாக்க பாஜக முயற்சித்து வருகிறது. ஆனால் திரிபுரா மக்கள் அதை முறியடிப்பார்கள். திரிபுரா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது என்ற சவாலை இடது முன்னணி உறுதியோடு எதிர்கொள்ளும்.

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...