பயன்படுத்தப்படாத இரயில்வே சீசன் டிக்கெட் காலத்தை நீட்டிக்க கோரி தென்னக ரயில்வே பொது மேலாளர் அவர்களுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்…

பெறுநர்

            பொது மேலாளர் அவர்கள்,

            தென்னக ரயில்வே,

            சென்னை – 600 003.

அன்புடையீர், வணக்கம்.

பொருள்:-     பயன்படுத்தப்படாத இரயில்வே சீசன் டிக்கெட் காலத்தை நீட்டிக்க கோருவது தொடர்பாக

கொரோனா நோய்த் தடுப்பையொட்டி மார்ச் 25 முதல் அமலாக்கப்பட்ட முதலாவது ஊரடங்கு காலம் முதல் இன்று வரை அனைத்து புறநகர் இரயில்களின் இயக்கமும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் விரைவில் புறநகர் இரயில் சேவைகள் துவங்குவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கிற மக்கள் பல்வேறு இரயில் நிறுத்தங்கள் இடையே பயணம் செய்கிற வகையில் மாதாந்திர இரயில்வே சீசன் டிக்கெட்டுகளை பெற்றிருக்கிறார்கள். ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரையிலான இரயில்வே சீசன் டிக்கெட்களுக்கான கட்டணங்களை முழுமையாக செலுத்தியே பெற்றிருக்கிறார்கள். இந்நிலையில் தொடர்ச்சியாக பல கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அனைத்து இரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மக்களின் இரயில் போக்குவரத்தும் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

இதனால் பணம் கட்டி பெறப்பட்டிருந்த சீசன் டிக்கெட்களை பயன்படுத்த முடியாமல் போனதோடு அவற்றிற்கான காலமும் முடிவடைந்திருக்கிறது. பெரும்பாலும் சிறு வியாபாரம் செய்பவர்கள், முதியோர், மாணவர்கள், மற்றும் அன்றாடக் கூலி வேலைக்குச் செல்லும் ஏழைத் தொழிலாளர்கள் ஆகியோரே இந்த சீசன் டிக்கெட்டுகளை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புறநகர் இரயில் சேவைகள் மீண்டும் துவங்கும் போது ஏற்கனவே இவர்களுக்கு இரயில்வே சீசன் டிக்கெட்டுகளை பயன்படுத்த முடியாமல் போன காலத்திற்கு ஈடாக செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்துத் தர வேண்டும் என ரயில்வே நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறோம். இது மிகுந்த நியாயமான கோரிக்கையாக இருக்கும் என்பதோடு, இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் அனுபவித்த சொல்லொண்ணா துயரத்திற்கு ஈடு செய்கிற பேருதவியாக அமையும் என்றும் கருதுகிறோம்.

புறநகர் இரயில் சேவைகளை துவங்குவதற்கான அறிவிப்பைச் செய்யும் அதேநேரத்தில், இரயில்வே சீசன் டிக்கெட் பயன்பாட்டுக்கான கால அளவை நீடிக்கச் செய்யும் வகையிலான அறிவிப்பினையும் செய்து மக்களுக்கு உதவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மேற்கண்ட எங்கள் கோரிக்கை உரிய முறையில் பரிசீலிக்கப்படும் என்றும் நம்புகிறோம்.

நன்றி.

இங்ஙனம்

தங்களன்புள்ள

(கே.பாலகிருஷ்ணன்)

மாநிலச்செயலாளர்

Check Also

கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு – கே.பாலகிருஷ்ணன் கடிதம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும், அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்திட ...