பல்கலைக்கழகங்களில் இந்தியை திணிக்க அரசின் முரட்டுத்தனமான முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தேசிய வரைவு கல்விக் கொள்கையில் இந்தியை கட்டாயமாக்க முயற்சித்து கடுமையான எதிர்வினைகளுக்கு பின்பு அந்த ஆலோசனையை திரும்பப் பெற்றுள்ள மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் இந்தியை கட்டாயப் பாடமாக்க பல்கலைக்கழக மானியக்குழுவின் மூலம் நிர்ப்பந்தித்து வருகிறது.

28.06.2019 ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை வகுப்புகளில் இந்தியை கட்டாயப்பாடமாக்கும் பொருள் சேர்க்கப்பட்டு நிறைவேற்றப்படவிருக்கிறது. இதேபோன்ற ஆணையை அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு அனுப்பியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்தியை கட்டாயமாக திணிப்பதற்கான முயற்சியை மத்திய அரசு தனது துறைகள், நிறுவனங்கள், கல்வி அமைப்புக்கள் மூலம் செயல்படுத்திக் கொண்டேயிருக்கிறது.

சமீபத்தில் தென்னக ரயில்வேயில் இத்தகைய முயற்சியை செய்து உடனடியாக பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் செய்யப்படும் இந்த முயற்சி கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, மத்திய அரசு பல்கலைக்கழக மானியக்குழுவின், பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

அனைத்து ஜனநாயக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் மத்திய அரசின் இந்த எதேச்சதிகார முயற்சிக்கு எதிராக குரலெழுப்பிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

Check Also

இந்திய பருத்திக்கழகத்துக்கு சுமார் 1000 கோடி இழப்பு. இடைத்தரகர்களுக்கு பெரு லாபம். விவசாயிக்கும் தொழில்முனைவோருக்கும் கடும் நெருக்கடி. பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்.

நாள்: 01.12.2020 இந்திய பருத்திக்கழகத்துக்குசுமார் 1000 கோடி இழப்பு. இடைத்தரகர்களுக்கு பெரு லாபம். விவசாயிக்கும் தொழில்முனைவோருக்கும் கடும் நெருக்கடி. பிரதமர் ...