பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் மீது களங்கம் கற்பிக்கும் நோக்கோடும், சிறுபான்மையினரை வன்முறையாளர்கள் என சித்தரித்தும் உண்மைக்கு மாறாக  பல்கலைக்கழகப் பாடப் புத்தகத்தில் தவறான கருத்துகள் இடம்பெற்றுள்ளன. இத்தகைய கருத்துக்கள் பல ஆண்டுகளாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு போதிக்கப்பட்டு வந்துள்ளன. பல்கலைக்கழக பாடப்புத்தகமா? பாஜகவின் பிரச்சார பிரசுரமா? என கேள்வி எழுப்பும் அளவுக்கு பாரம்பரியமிக்க அரசியல் கட்சிகளையும், சிறுபான்மை மக்களையும் கொச்சைப்படுத்தும் வகையிலும் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இக்கருத்துக்கள் இக்கட்சிகளின் அரசியல் செல்வாக்கை சீர்குலைக்கும் வகையிலும், சிறுபான்மை மக்கள் மீது வன்மத்தை உருவாக்கும் வகையிலும் பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த கருத்துக்களை பாடப்புத்தகத்திலிருந்து நீக்கிடவும், இதற்கு காரணமானவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாண்புமிகு. உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.

மத்திய பாஜக அரசு வரலாற்றையும், மரபுகளையும் திரித்து ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என இந்துத்துவ கொள்கைகளை திணிப்பதற்கு முயன்று வருகிறது. மத்திய அரசின்  இந்த நடவடிக்கைகளுக்கு துணைபோகும் வகையில் இச்செயலை செய்தவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

திமுக மற்றும்  பொதுவுடமை கட்சிகளைப் பற்றியும், சிறுபான்மை மக்களைப் பற்றியும் அவதூறு பரப்பும் வகையிலான பொய் கருத்துக்களை புத்தகத்தில் திணித்து வைத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும்; ஓய்வு பெற்றிருந்தாலும் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து தண்டிக்க வேண்டுமெனவும்; பாடம் எழுத அனுமதித்தவர்கள், அதை மேற்பார்வை செய்தவர்கள் அனைவரும் சட்டப்படி தண்டிக்கப்பட  வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

நாட்டு மக்களை சட்ட விரேதமாகக் கண்காணித்திட யார் அதிகாரம் அளித்தது? பாஜக அரசே பதில் சொல்!

கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை; இஸ்ரேல் உளவு நிறுவனமான NSO ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் போன்கள் ...