பள்ளிக் கல்வியை சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள்

பள்ளிக் கல்வியை சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை எதிர்த்து அனைவரும் குரலெழுப்ப முன்வர வேண்டும் சிபிஐ(எம்) வேண்டுகோள்

நாட்டின் வளர்ச்சியில் ஊற்றுக்கண்ணாக விளங்குவது பள்ளிக் கல்வியாகும். “முதல்கோணல் முற்றும் கோணல்” என்பதை போல பள்ளிக் கல்வியை சீரழிப்பது ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியை காவு கொடுப்பதாகும். மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் பள்ளிக் கல்வியை முடமாக்கும் நடவடிக்கைகள் வன்மையான கண்டனத்திற்குரியது.

மத்திய நிதி ஆயோக் ஒருங்கிணைந்த பள்ளிகள் (Composite Schools) உருவாக்க வேண்டுமென்கிற முயற்சியில் தொடக்கப்பள்ளிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே போதிய நிதியின்மையால் தொடக்கப்பள்ளிகளில் அடிப்படை கட்டுமான வசதிகள், குடிநீர், கழிப்பிட வசதி, மாணவர்கள் அமர்வதற்கான இட வசதி இல்லாமல் உள்ளன. பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை பெரும் பிரச்சனையாக உள்ளது. இதனால் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து வருகிறது. இதை சரி செய்வதற்கு போதிய நிதி வசதி, கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் நியமனம் உள்ளிட்டவைகளை மேற்கொள்வதற்கு மாறாக இப்பள்ளிகளை படிப்படியாக மூடி விடுவது அல்லது அருகமை பள்ளிகளோடு இணைத்து விடுவது (இணைப்பதும், மூடுவதும் ஒன்று தான்) ஒட்டுமொத்தத்தில் ஒருங்கிணைந்த பள்ளிகளாக மாற்றி விட வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் நாடு முழுவதும் சுமார் 3 லட்சம் தொடக்கப்பள்ளிகள்  மூடப்படும் ஆபத்து ஏற்படும் என அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. இதனால் குழந்தைகள் சொந்த வாழ்விடத்திற்கு அருகிலேயே கல்வி கற்கும் வாய்ப்பு பறிபோய் விடுவதுடன், தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி படிக்க வேண்டிய ஆபத்தான நிலைமைக்கு தள்ளப்படுவார்கள்.

மத்திய அரசின் இந்த முடிவினை ஏற்று வரும் ஆண்டிலிருந்து 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை மூடுவது அல்லது மற்ற பள்ளிகளுடன் இணைக்கப்படும் என தமிழக கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதன்படி சுமார் 3000 பள்ளிகள் மூடப்படும் ஆபத்து உள்ளது.

மேலும் இந்நடவடிக்கையின் அடுத்தக்கட்டமாக “தொடக்கப்பள்ளி இயக்குனரகத்தை” படிப்படியாக கலைத்து விட்டு பள்ளிக் கல்வித்துறையுடன் இணைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் எதிர்காலத்தில் தொடக்க கல்வி கடும் பாதிப்புக்குள்ளாகும்.

குழப்பத்தை ஏற்படுத்தும் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்புகள்:

21-ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள திறன்படைத்தவர்களாக மாணவர்களை வளர்த்தெடுக்க மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டம் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது வரவேற்கத்தகுந்ததாகும். புதிய பாட நூலின் வடிவமைப்பு மற்றும் உள்ளடக்கம், புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால் இப்பணி முழுமையடைவதற்கு முன்பே இதற்கு பொறுப்பான அதிகாரிகளை பணி மாற்றம் செய்து முட்டுக்கட்டை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வெளியிடப்படும் புதிய அறிவிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்ட உயர்ந்த நோக்கத்தை சிதைத்துவிடுமோ என அச்சம் ஏற்படுகிறது.

மேல்நிலைக் கல்வியில் முதலாமாண்டுக்கும் அரசுத் தேர்வு என அறிவித்து விட்டு தற்போது இரண்டாமாண்டு தேர்வில் மாணவர்கள் பெரும் மதிப்பெண்கள் மட்டுமே உயர்கல்வி சேர்க்கைக்கு அடிப்படையாக கொள்ளப்படும் என்ற அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. உரிய பரிசீலனைக்கு பிறகு இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இம்முடிவு மாணவர்களின் கல்வி தரத்தை புறக்கணித்து, தனியார் பள்ளிகளது வியாபார நோக்கத்திற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வலுவான சந்தேகம் எழுந்துள்ளது.

மாணவர்களது கற்றல் திறனை அதிகரிக்க தேவையான அளவு ஆசிரியர்கள் நியமிப்பதும், அவர்களுக்கு புதிய பாடத்திட்டங்களுக்கு ஏற்ப உரிய பயிற்சிகளை அளிப்பதும் மிக முக்கியமாகும். ஆனால், ஆசிரியர் காலியிடங்களை பூர்த்தி செய்வது குறித்து அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருவதானது மாணவர்களின் கற்றல் திறனை காவு கொடுப்பதற்கு இட்டுச் செல்லும்.

மேலும் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் சீர்குலைந்துள்ளன. குடிநீர், நவீன கழிப்பிட வசதி, ஆய்வுக் கூடங்கள், மாணவர்களுக்கான இருக்கைகள் அனைத்தும் பற்றாக்குறையில் உள்ளன. இவைகளை சரிப்படுத்துவதற்கு தேவையான நிதியை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்க மறுத்து வருகின்றன.

எனவே, மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் இத்தகைய நடவடிக்கைகளை கைவிட்டு தொடக்கப்பள்ளி மற்றும் பள்ளிக் கல்வியை சிறப்பாக வடிவமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

அரசு தொடக்கப்பள்ளிகளை மூடுவது, தொடக்கப்பள்ளி இயக்குநரகத்தை வலுவிழக்கச் செய்வது போன்ற நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும்; தொடக்கப் பள்ளிகளில் மழலையர் பிரிவை தொடங்க வேண்டும்; அரசுப் பள்ளிகளை மேம்படுத்திட ஆசிரியர் அமைப்புகளுடன் பேசி பொருத்தமான ஏற்பாடுகளோடு, ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி வகுப்பு நடத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

மேலும் அரசுப்பள்ளிகளை இழுத்து மூடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் வலுவான கண்டன குரலெழுப்பிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வேண்டுகிறது.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...