பள்ளிப்பாளையத்தில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை புரிந்த குற்றவாளிக்கு தண்டனை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் ஒரு சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. இளம் பெண்ணை பாலியல் கொடுமைப்படுத்திய குற்றவாளிக்கு 32 ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பினை பெற புலன் விசாரணை மேற்கொண்டு வழக்கு நடத்திய சிபிசிஐடி போலீசார், அரசு சிறப்பு வழக்கறிஞர், தீர்ப்பு வழங்கிய மாவட்ட நீதிபதி அனைவருக்கும் பாராட்டுக்கள்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் சிவக்குமார் என்பவர் கந்து வட்டி தொழில் நடத்தி வந்துள்ளார். பள்ளிப்பாளையத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இவரிடம் ரூ. 1000/- கடன் பெற்றுள்ளதை பயன்படுத்தி இவரை கட்டாயப்படுத்தி மிரட்டி பாலியல் வன்கொடுமை புரிந்துள்ளார். இதோடு விடவில்லை. தனது உதவியாளர் ஆமையனையும் வரவழைத்து அவரையும் இந்த பாலியல் வன்முறையில் ஈடுபடச் செய்துள்ளார். கொடூரத்தின் உச்சமாக இந்த பாலியல் வன்முறையை சிவக்குமார் வீடியோவில் பதிவு செய்துள்ளார். தொடக்கத்திலிருந்தே தன்னை விட்டு விடுங்கள், நான் பணத்தை உடனே கொடுத்து விடுகிறேன் என அந்த பெண் கெஞ்சி அழுததையும் இக் கொடூரர்கள் பொருட்படுத்தவில்லை.  வீடியோவை அழித்து விடுங்கள் என அந்த பெண் மன்றாடி கேட்டுள்ளதை ஏற்க மறுத்து இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் இந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.

அடுத்த சில நாட்களில் அந்த வீடியோவை ஒரு ஆபாச வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனைக் கண்டு பதறிய அந்த பெண்ணும், அவருடைய தாயாரும் என்ன செய்வது என்று புரியாமல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய ஊழியரான தோழர் வேலுச்சாமி அவர்களை சந்தித்து தங்களை காப்பாற்றும்படி கோரியுள்ளனர். தோழர் வேலுச்சாமியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் சென்று பள்ளிப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர். மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்துள்ளனர். ஆனால் இப்புகாரின் மீது உருப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை.

தன்மீது புகார் கொடுத்ததால் ஆத்திரமடைந்த சிவக்குமார் அடியாட்களுடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்த தோழர் வேலுச்சாமியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் பல கட்ட போராட்டங்களை நடத்தியது. கட்சியின் நாமக்கல் மாவட்டக்குழு இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரிய அடிப்படையில், சிபிசிஐடி விசாரணைக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.

தோழர் வேலுச்சாமி கொலை வழக்கை விசாரணை செய்திட திரு. டி.ராஜன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு அவர் விசாரணை மேற்கொண்டிருக்கும் போது,  பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட பெண் இவரிடம் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து புகார் அளித்தார். இப்புகார் மீது விசாரணை மேற்கொண்டு சிவக்குமார் அவருடைய உதவியாளர் ஆமையன் இருவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

விசாரணை முடிந்து, இவர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் மீது நாமக்கல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது சாட்சிகளை மிரட்டி பணிய வைக்க அராஜகமான முயற்சிகளை குற்றவாளிகள் மேற்கொண்டனர். இதன் காரணமாக சில சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது தாயார் நீதிமன்றத்தில் உறுதியாக சாட்சியமளித்துள்ளார்கள். வழக்கு விசாரணை முடிந்த நிலையில் மாவட்ட நீதிபதி குற்றவாளி சிவக்குமாருக்கு (இன்னொரு குற்றவாளியான ஆமையன் இறந்துவிட்டார்) 32 ஆண்டுகள் தண்டனை வழங்கியதுடன், இத்தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமெனவும்,  பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.

2010ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்ட போதிலும், கடந்த 10 ஆண்டுகளாக குற்றவாளிகள் இந்த வழக்கை இழுத்தடித்தே வந்துள்ளனர். இந்த வழக்கில் புலன் விசாரணை மேற்கொண்ட திரு. டி. ராஜன் ஓய்வுபெற்ற பின்னர், பொறுப்பேற்ற சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றத்தை நிரூபித்துள்ளனர். அரசு சிறப்பு வழக்கறிஞரான ஜி. சுசீலா அவர்கள் திறமையாக வாதிட்டுள்ளார். இறுதியில் மாவட்ட நீதிபதி திருமதி. சசிரேகா எம்.எல்., மேற்கண்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.

சமூகத்தில் கடைக் கோடியில் உள்ள அப்பாவி மக்களுக்கும் இத்தகைய தீர்ப்பு ஒரு உந்து சக்தியாக அமைவதோடு, சமூக விரோதிகளுக்கு எச்சரிக்கையாக அமையும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.

அப்பாவி பெண்ணுக்கு உதவி செய்த காரணத்தால் படுகொலை செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர் தோழர் வேலுச்சாமி அவர்களது கொலை வழக்கு விசாரணையும் தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்த வழக்கிலும் குற்றவாளிகள் தப்பி விடாமல் தண்டிக்கப்பட வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

இளம் பெண் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக போராடியது. இப்பணியில் ஈடுபட்ட தோழர் வேலுச்சாமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட போது, கிஞ்சிற்றும் தயங்காமல் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர சிபிஐ (எம்) அயராது பணியாற்றியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  நாமக்கல் மாவட்ட கட்சித் தோழர்களுக்கும், குற்றவாளிகள் தண்டனை பெறுவதற்கு அயராது பாடுபட்ட சிபிஐசிஐடி போலீசார், அரசு வழக்கறிஞர் உள்ளிட்ட அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது  நெஞ்சார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

கே. பாலகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

தடுப்பூசி தயாரிக்கும் பணியில் செங்கல்பட்டு `ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை விரைவில் செயல்படுத்திட கோரி டி.கே.ரங்கராஜன் பிரதமருக்கு அவர்களுக்கு கடிதம்…

தடுப்பூசி தயாரிக்கும் பணியில் செங்கல்பட்டு `ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை விரைவில் செயல்படுத்திட கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...