பள்ளி -கல்லூரிகளில் மதவெறி சக்திகளின் செயல்பாட்டை மூடி மறைக்கும் தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தமிழகத்திலுள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இந்து  இளைஞர்  முன்னணி,  இந்து மாணவர் முன்னணி போன்ற மதவெறி அமைப்புகள் மாணவர்களிடத்தில் மதவெறியைப் போதிப்பதற்கும், இதிகாசங்கள், வரலாறுகளை மதஅடிப்படையில் போதிப்பதற்கும், சாதி, மதம் கடந்து மாணவ, மாணவிகள் ஒருவரை ஒருவர் நேசிப்பதைத் தடுப்பதற்கும் ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலும் 10 மாணவர்களைக் கொண்ட அமைப்புகளை குண்டர் படை போல் உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் செய்து வருவது குறித்து அரசுக்கு உறுதியான செய்திகள் கிடைத்திருப்பதாகவும், இவற்றைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்களுக்கு 20-9-2019 தேதியிட்டு கடிதம்  எழுதப்பட்டுள்ளது. 

இக்கடிதம் குறித்து, கல்வித்துறை அமைச்சரிடம் விளக்கம் கேட்டபோது, இப்படியான கடிதம் எதுவும் எழுதப்படவில்லையென முழுமையாக மறுப்பு தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை செயலக அதிகாரிகள் இப்படியான கடிதம் எழுதப்பட்டிருந்தாலும், அது சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. 


மேற்கண்ட கடிதம் மேம்போக்கான தகவல்கள் அடிப்படையில் எழுதப்படவில்லை. சட்டம் – ஒழுங்கு துறையின் முதன்மை செயலாளர் அலுவலகத்திலிருந்து  (எண். 3157/ L&O B/2019-11, நாள் –  12-9-2019)  பள்ளிக்கல்வித்துறைக்கு அதிகாரப்பூர்வமான கடிதம் வந்த அடிப்படையிலேயே அதன் அவசரத்தன்மையை உணர்ந்து பள்ளிக்கல்வித்துறை செயலகம்   (எண். 24832/ GL.II / 2019 -1,    நாள்  20-9-2019) கல்வித்துறை இயக்குநர்களுக்கு கடிதம் எழுதியதுடன் அடுத்து நடைபெறவுள்ள சட்டம் – ஒழுங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதால் உடனடியாக அறிக்கை அனுப்ப வேண்டுமெனவும் வற்புறுத்தியுள்ளது. 
சட்டம் – ஒழுங்கு முதன்மைச்செயலாளர் அலுவலகத்தின் கடிதத்தின்படி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அரசியல் சட்டதிற்குத் விரோதமாகவும், பள்ளிக்கல்வித்துறை விதிகளுக்கு முரணாகவும் மதவெறி அமைப்புகள் செயல்பட அனுமதித்துள்ளது பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுள்ளது.

மேலும், மத, சாதி அடிப்படையில் மாணவர்களை அணி திரட்டுவது ஆபத்தானது என்பதையும் பள்ளிக்கல்வித்துறை கடிதம் சுட்டிக்காட்டியுள்ளது. 


மாணவர்களின்  பிஞ்சு நெஞ்சங்களில் சாதி, மதவெறி விஷக்கருத்துக்களை பரப்பும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டியது அரசின் பிரதான கடமையாகும். ஆனால், அபாயகரமான இந்நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு பதிலாக, துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கடிதம் அமைச்சரின் தலையீட்டின் பேரில் நிறுத்தப்பட்டுள்ளது உறுதியாகிறது.  அமைச்சரின் இத்தகைய நடவடிக்கையினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
அரசியல் ரீதியாக பாஜகவுடன்  கூட்டணி அமைத்துள்ளதன் விளைவாக தமிழகத்தின் சமூக சீர்திருத்த வரலாறை பின்னுக்குத் தள்ளும் பாஜகவின் சித்தாந்தத்தை அடியொற்றி அரசுத்துறைகளில் நடவடிக்கைகளை கட்டமைப்பது, அரசியல் சாசனத்திற்கே விரோதமானதாகும்.


தமிழகத்தின் எதிர்காலமே மாணவர்களும், இளைஞர்களும்தான். இவர்கள் மத்தியில் மதவெறியை ஊட்டி வளர்ப்பது தமிழகத்தின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் மதச்சார்பின்மைக்கு விரோதமானது மட்டுமல்ல,  தமிழகத்தினை மதவெறி சக்திகளின் கூடாரமாக மாற்றுவதற்கும் இட்டுச்செல்லும். 
எனவே, தமிழக அரசும், பள்ளிக்கல்வித்துறையும், உடனடியாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்பட்டு வரும் மதவெறி அமைப்புகளை வெளியேற்றவும், அவர்களுக்கு அனுமதியளித்த பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் வற்புறுத்துகிறோம். பள்ளிகள்  மற்றும் கல்லூரிகள் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஜனநாயகம், மதச்சார்பின்மை போன்ற மாண்புகளுடன் சாதி, மத பேதங்களுக்கு இடமளிக்காத அறிவியல் பூர்வ மையங்களாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

கோவில்பட்டி தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் கே.சீனிவாசன் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் !

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 – திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கோவில்பட்டி தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் ...