பள்ளி மாணவி உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை!

குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க – சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஆவார். கடந்த 10 ந்தேதி அதே பகுதியை சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் ஏசகன் (எ) கலியமூர்த்தி மற்றும் முன்னாள் கவுன்சிலர் கணபதி மகன் முருகன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொலை செய்ய முயன்றுள்ளனர்.

மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வரவே குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர். இந்நிலையில், தீயில் கருகிய படுகாயமடைந்த மாணவி ஜெயஸ்ரீயை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அந்த மாணவி தன்னை ஏசகனும், முருகனும் பெட்ரோல் ஊற்றி எரித்ததை நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அந்த மாணவி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த மனிதத் தன்மையற்ற கொடூரமான செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறை கொலை வழக்குப் பதிவு செய்து பிணையில் வெளிவர முடியாதபடி சிறையில் அடைக்க வேண்டும்.

ஊரடங்கின் போது இந்தச் சம்பவம் நடந்துள்ளதால் தமிழக அரசே இதற்குப் பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். மேலும், தமிழகத்தில் இனி இதுபோன்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் நடக்காமல் தமிழக அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கே. பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்.

Check Also

சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாசையும், செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனையும் பணியிடை நீக்கம் செய்க!

பெறுநர்உயர்திரு காவல்துறை இயக்குனர் அவர்கள்,தமிழ்நாடு காவல்துறை,மயிலாப்பூர்,சென்னை – 600 004. அன்புடையீர், வணக்கம். பொருள்: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் ...