பழங்குடி மக்களின்  வாழ்வுரிமைகளை உறுதிப்படுத்துக

தமிழகத்தில் வாழும் பத்து லட்சத்திற்கும்  மேற்பட்ட பழங்குடி மக்கள் ஆட்சியாளா்களால் தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனா்.  இம்மக்களுக்கென்று உருவாக்கப்பட்ட பல்வேறு சட்டங்களை அமுல்படுத்துவதில்  ஆளும் அரசு அக்கறையற்று இருக்கிறது.

வன உரிமைச்சட்டம் 2006 உருவாக்கப்பட்டு 10 ஆண்டு காலம் கடந்த பிறகும் அச்சட்டத்தை அமுல்படுத்த தமிழகத்தில்  அதிகாரத்திற்கு வந்த அரசுகள் கடுகளவும் முயற்சிக்கவில்லை.  பழங்குடி மக்களின் நீண்ட பல போராட்டங்களுக்கு பிறகு தற்போதுதான் மிகத் தாமதமாக அமல்படுத்த துவங்கியுள்ளனா். இந்நிலையில் வேகமாக செயல்பட்டு ஆதிவாசி மக்களுக்கு வனங்களின் மீதான உரிமையையும், நில உரிமையையும் வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும்.

பழங்குடி இனத்தைச் சார்ந்த லட்சக் கணக்கானோர் இனச் சான்றிதழ் கிடைக்காமல் அதிகாரிகளால் அலைக்கழிக்கப் படுகின்றனா்.   இதனால்  உயா்கல்வி,  வேலைவாய்ப்பை  இழக்க  வேண்டிய நிலை ஏற்படுகிறது.   எனவே      விண்ணப்பித்த ஒரு வார காலத்திற்குள்  இனச்சான்றிதழ்  வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மெய்த்தன்மை அறிதல் என்ற பெயரில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பழங்குடி ஊழியா்கள் ஆண்டுக் கணக்கில் விசாரணைக்காக  காத்திருக்கும் நிலை இருக்கிறது. தற்போது காவல்துறை துணைக் கண்காணிப்பாளா்களை  இவ்விசாரணைக்காக ஈடுப்படுத்துவதை ரத்து செய்துவிட்டு மானிடவியல் துறையை சார்ந்தவா்களை பயனப்படுத்த வேண்டும்.  குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணையை  முடிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் மெய்த்தன்மை அறிதல் என்ற பெயரில் சித்ரவதை செய்வது, பதவி உயா்வு, ஓய்வூதியம் உள்ளிட்டவைகளை நிறுத்தி வைப்பது போன்ற நடவடிக்கைகளை மத்திய மாநில  அரசுகள்  கைவிட வேண்டும்.

பழங்குடியினர்க்குரிய இடஒதுக்கீடு  முழுமையாக அமுல்படுத்துவதுடன் பின்னடைவு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேணடும். தனியார் துறையிலும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு வழங்க அரசு  சட்டம் இயற்ற  வேண்டும்.

பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் மின்சாரம், குடிநீா், குடியிருப்பு, குடிமனைப்பட்டா, சாலை ஆகிய அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். பழங்குடி  மக்களுக்கென்று ஒதுக்கப்படும் நிதி வேறு பணிகளுக்கு மாற்றுவதை தடுத்து நிதி முழுவதும் பழங்குடி மக்களுக்கு செலவிடப்பட வேண்டும். பழங்குடி மாணவா்கள்  பயிலும்  உண்டு. உறைவிட பள்ளிகளில்  போதிய ஆசிரியா்கள் நியமனம் செய்வதுடன் அடிப்படை கட்டமைப்பு வசதிகள்  மேம்படுத்தப்பட  போதுமான நிதி ஒதுக்கீ டு செய்ய வேண்டும்.

உண்மையில் பழங்குடி மக்களாக இருந்தும் பழங்குடியினா் பட்டியலில்   சோ்க்கப்படாமல் உள்ள ஈரோடு மாவட்ட மலையாளி, குறுமன்ஸ்  இனத்தின் உட்பிரிவினா் , குறவன் இனத்தின் உட்பிரிவினா்  புலையன் ஆகிய இனத்தவரை பழங்குடி பட்டியலில் சோ்க்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே பழங்குடி பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வேட்டைக்காரன் இனத்தை பழங்குடிப் பட்டியலில் சோ்ப்பது குறித்து  தமிழக பழங்குடியினா் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுக்கு உத்திரவிட வேண்டும்.  75 ஆண்டு சுதந்திரத்திற்கு பிறகும் மிகவும் பின் தள்ளப்பட்ட நிலையிலேயே  வைக்கப்பட்டுள்ள  இப்பழங்குடி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமென்று  மத்திய, மாநில அரசுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது மாநில மாநாடு வலியுறுத்திக்  கேட்டுக் கொள்கிறது.

முன்மொழிந்தவா்                  டெல்லிபாபு

வழிமொழிந்தவா்                   ஆா்.சரவணன்

Check Also

மாநில உரிமைகளைப் பாதுகாப்போம், பலப்படுத்துவோம்

இந்தியா, பல்வேறு மாநிலங்களின் ஒன்றியம் என்றே அரசியல் சாசனத்தின் முதல் வரி குறிப்பிடுகிறது. வேறுபட்ட தேசிய இனங்கள், அவற்றின் மொழிகள், ...