பாஜகவினர் கொண்டாட ஏதுமில்லை – சிபிஐ(எம்)

குஜராத் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக கொண்டாடுவதற்கு எதுவுமில்லை – குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை:

குஜராத் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டுவது என்னவெனில், இதுகுறித்து பாஜக பெரிய அளவில் கொண்டாடுவதற்கு எதுவுமில்லை என்பதேயாகும். ஆட்சியை அமைக்கக்கூடிய அளவிற்கு அது பெரும்பான்மையைப் பெற்றுள்ள போதிலும், கடந்த இருபதாண்டுகளில் அது பெற்ற இடங்களைவிட இப்போது மிகவும் குறைவாகும். சென்ற முறை பெற்றிருந்த 115 இடங்களை விட இந்த முறை பாஜக 100 இடங்கள்தான் பெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இது பாஜக தலைவர் அமித் ஷா “நாங்கள் 150 இடங்களைப் பிடிப்போம்” என்று கூப்பாடு போட்டதுடன் ஒப்பிடும்போது மிகப்பெரிய வீழ்ச்சியாகும். 2014 இல் பாஜக நாடாளுமன்றத் தேர்தலின்போது குஜராத்தில் 165 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது, அத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இது எந்த அளவிற்கு சரிவு என்பதனைப் தெரிந்து கொள்ள முடியும்.

சரியான மாற்றுக் கொள்கையுடன் ஒரு நம்பகமான எதிர்ப்பினை அளித்தோமானால், பாஜகவிற்கு எதிராக மக்களிடையே எழுந்துள்ள அதிருப்தியை மிகவும் வலுவாக முன்னெடுத்துச் செல்ல முடியும். இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியிலிருந்த காங்கிரசை அகற்றிவிட்டு பாஜக போதுமான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கிறது. இமாச்சலப்பிரதேசத்தில் மக்களின் தீர்ப்பு என்பது காங்கிரசின் வீர்பத்ர சிங்கின் ஊழல் மற்றும் தவறான ஆட்சிக்கு எதிரான ஒன்றாகும். இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் இருபதாண்டு கால இடைவெளிக்குப் பின்னர் மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறுகிறது.

Check Also

உமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்

உமர் காலித் உட்பட ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...