பாஜக-விற்கும் முகநூல் நிறுவனத்திற்கும் இடையேயான பிணைப்பு குறித்து கிரிமினல் புலனாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்: பி.ஆர்.நடராஜன் எம்.பி கடிதம்!

மத்தியில் ஆளும் பாஜக-விற்கும் முகநூல் நிறுவனத்திற்கும் இடையேயான பிணைப்பு குறித்து கிரிமினல் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும் என்று நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு தலைவருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தாங்கள் முகநூல் நிறுவனத்துடன் செப்டம்பர் 1, 2 தேதிகளில் நடத்தவுள்ள கூட்டம் தொடர்பாக, நான் தங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இந்தியாவில் முகநூல் நிறுவனம் கடைப்பிடித்துவரும் கேள்விக்குரிய நடைமுறைகள் குறித்தும் அது தன்னுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் ஒழுங்குமுறைகளையும் மீறி செயல்பட்டுக்கொண்டிருப்பது குறித்தும் தாங்கள் முகநூல் நிறுவனத்திற்கு ஓர் அறிவிப்பு அனுப்பியிருக்கிறீர்கள்.

முகநூலின் நடத்தை மிகவும் ஆழமான ஒன்று. பாரபட்சமற்ற முறையில் தகவல்களைப் பெறுவதற்கான நம் உரிமைகள் மீது கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாகும். பாரபட்சமற்ற முறையில் குடிமக்கள் தகவல்களைப் பெறும் உரிமைகைளை சமூக ஊடகமான முகநூல் மீறியிருக்கிறது.

நாம், இன்றையதினம் இந்தியாவில் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்துக்களுக்கு எதிராக மிகவும் தெளிவான முறையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும். நாம், எதேச்சாதிகாரம் அதிகரித்துக் கொண்டிருப்பதையும், நிறுவனங்களின் சுதந்திரம் அரிக்கப்பட்டுக்கொண்டிருப்பதையும், அடிப்படை உரிமைகள் மீது கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதையும் எதிர்கொண்டிருக்கிறோம்.

முகநூல் மற்றும் சமீபத்தில் அதனுடன் இணைந்துள்ள வாட்சப் செயலி போன்ற சமூக ஊடகங்கள் ஜனநாயக விழுமியங்களை ஆதரிக்கும் விதத்தில் செயல்படுவதற்குப் பதிலாக, அவைகள் அவற்றை அரிக்கும் விதத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதனை சமீபத்திய வால்ஸ்ட்ரீட் ஜர்னல் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததைப் பார்த்தோம். நம் நாட்டில் அதன் வர்த்தக ஆதாயங்களின் அடிப்படையில் அவ்வாறு அது செயல்பட்டதாக அது குறிப்பிட்டிருந்தது.

மக்களின் உயிரைக் காவு கொடுத்து, இவ்வாறு வர்த்தக நிறுவனங்கள் ஆதாயம் அடைந்திருக்கிறது என்று கூறுவதற்கு வருத்தமாக இருக்கிறது. முகநூலிலும், வாட்சப் செயலியிலும் மதச் சிறுபான்மையினர் மற்றும் சாதிச் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை உமிழும் உரைகள் இடம்பெற்றிருக்கின்றன. இத்தகைய சாராம்சங்களை இவற்றில் அனுமதிப்பது மனித உரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்வதன்மூலம்  வேண்டுமென்றே லாபம் ஈட்ட வேண்டுமென்கிற மோசமான விஷயம் என்று சொல்வதைத் தவிர வேறெப்படியும் சொல்ல முடியாது.

இன்றைய தினம் இந்தியாவில் சிறுபான்மை சமூகத்தினருக்கு முகநூல் மற்றும் வாட்சப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் மூலம் ஏற்பட்டுள்ள உண்மையான அச்சுறுத்தல்களைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு அவற்றின்மீது கிரிமினல் சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். மியான்மரில் நடைபெற்ற இனப்படுகொலைகள் மீது முகநூல் கேந்திரமான பங்களிப்பினைச் செய்திருக்கிறது என்று ஐ.நா. உண்மை அறியும் குழு கூறியிருப்பதுபோன்றே இப்போது நம் நாட்டிலும் நிலைமைகள் இருக்கின்றன.

மேலும், பாஜக-விற்கு ஆதரவாக இந்திய வாக்காளர்கள் மீது செல்வாக்கு செலுத்தும் விதத்தில் முகநூல் நிறுவனம் நடந்துகொண்டிருக்கும் விதம் என்பது, ஓர் அந்நிய கார்ப்பரேட் நிறுவனம் இந்திய தேர்தல் நடைமுறையில் தலையிடுவதாகும். முகநூலை, இந்தியாவில் 29 கோடி பேர் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் அதன் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே அது மக்கள் மத்தியில் விளைவித்திடும் செல்வாக்கைக் குறைத்து மதிப்பிடக்கூடாது.  எனவே இந்தியத் தேர்தல் நடைமுறையில் அது செல்வாக்கு செலுத்திட அனுமதித்திடக் கூடாது. முகநூல் நிறுவனம் தன்னுடைய பாகுபாடான நடைமுறைகளுக்காகக் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பது என்பது இந்தியாவில் மட்டுமல்ல.

பாஜக, இந்தியாவில் ஜனநாயகத்தை நிலைகுலைவித்திடும் அதே சமயத்தில், தன் சொந்த தேர்தல் ஆதாயங்களுக்காக, இவ்வாறு இரண்டகமான முகநூல் நிறுவனத்தைப் பயன்படுத்திடுவதும் கேள்விக்குரியது.

மேலும் நாட்டில் உள்ள மத்திய அரசின் பல அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் துறைகள் முகநூல் நிறுவனத்துடன் மிகவும் நெருக்கமானமுறையில் ஒத்துழைத்து செயல்பட்டிருப்பதும் மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இவ்வாறு மேலே கூறப்பட்டுள்ள காரணங்களின் அடிப்படையில், பாஜக-விற்கும் முகநூல் நிறுவனத்திற்கும் இடையேயான பிணைப்பு குறித்தும், அது அரசாங்கத்தின் மற்றும் அரசமைப்புச்சட்ட நிறுவனங்களில் புகுந்துள்ள தன்மைகள் குறித்தும் ஒரு கிரிமினல் புலன்விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.  இவற்றின்மீதான விசாரணை முடியும் வரையிலும், இந்தியாவில் உள்ள அரசுத்துறைகள் அல்லது அரசமைப்புச்சட்ட அமைப்புகள் எதனுடனும் இந்நிறுவனம் இணைந்து செயல்பட அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு பி.ஆர். நடராஜன், கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...