பாடகர் கோவனை உடனே விடுதலை செய்க! வழக்குகளை கைவிடுக !!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!!!

மக்கள் கலை இலக்கிய கழகத்தை சார்ந்த பாடகர் கோவன் தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு இந்தக் கைது நடவடிக்கையை, கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறது. கோவனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும், அவர் மீது புனையப்பட்டுள்ள வழக்குகளை கைவிட வேண்டுமென்றும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

ஜனநாயகத்தில் மாற்று கருத்து சொல்வதற்கான உரிமை இருப்பதை அதிமுக அரசு ஏற்க மறுக்கிறது. அரசின் மீதான விமர்சனங்களை முன்வைக்கும் அரசியல் தலைவர்கள், பத்திரிகைகள் மீது அதிமுக அரசாங்கம் தொடர்ச்சியாக அவதூறு வழக்குகளை தொடுத்து வந்துள்ளது. இதேபோன்று ஜனநாயக இயக்கங்களுக்கு அனுமதி மறுப்பது, சட்டமன்றத்திற்குள் மாற்றுக் கருத்துக்களை சொல்ல விடாமல் தடுப்பது, அரசை விமர்சிக்கும் பத்திரிகைகளுக்கு விளம்பரங்களை மறுப்பது என்று எவ்வித ஜனநயாக நெறிமுறைகளுக்கும் உட்படாத அரசாக அதிமுக அரசு செயல்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே பாடகர் கோவன் கைது செய்யப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து ஜனநாயக இயக்கங்களும் தமிழக அரசின் இந்த அடாவடிக்கெதிராக குரல் எழுப்ப வேண்டுமென மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

அதிமுக அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயலாகும். அதிமுக அரசின் இந்த நடவடிக்கையை கண்டிப்பதோடு கோவனை எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்வதோடு, அவர் மீது புனையப்பட்ட வழக்குகளை கைவிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

இந்திய பருத்திக்கழகத்துக்கு சுமார் 1000 கோடி இழப்பு. இடைத்தரகர்களுக்கு பெரு லாபம். விவசாயிக்கும் தொழில்முனைவோருக்கும் கடும் நெருக்கடி. பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்.

நாள்: 01.12.2020 இந்திய பருத்திக்கழகத்துக்குசுமார் 1000 கோடி இழப்பு. இடைத்தரகர்களுக்கு பெரு லாபம். விவசாயிக்கும் தொழில்முனைவோருக்கும் கடும் நெருக்கடி. பிரதமர் ...