பாதாள சாக்கடை திட்டம் குறித்து முறையான கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துக!!!

நாகர்கோவில் நகராட்சியில் சுமார் 110 கி.மீ அளவுக்கு பாதாளச்சாக்கடைத் திட்டப்பணி நடைபெற்று வருகிறது. சுமார் 3 வருடங்களாக வேலை நடைபெறுகிறது. வேலை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை நகராட்சி என்பது நரக ஆட்சியாக மாறி மாவட்ட மக்களை அலங்கோலப்படுத்துகிறது. எந்த தெருவிலும் மக்கள் நடந்து செல்லவோ, இருச்சக்கரம் மற்றும் கார்களில் செல்லவோ முடியாது. தோண்டப்பட்ட குழிகள் மூடப்படவில்லை. மூடியப்பகுதிகளும் முழுமையாக மூடப்படவில்லை. வாகனங்கள் புதைக்குழிக்குள் சிக்கி தத்தளிப்பது தினம், தினம் கண்கொள்ளா காட்சியாக மாறிவிட்டது. நகராட்சி நிர்வாகத்தை நினைத்து மக்கள் தலையில் போட்டு அடித்துக் கொள்கின்றனர். இந்த அவலநிலைக்குக் காரணம் திட்டச் செலவில் நடைபெறும் நிதி முறைகேடு என்பது ஊரறிந்த உண்மை. எந்த ஒப்பந்தகாரர்களையும் கட்டுப்படுத்தும் நிலையில் நகராட்சி நிர்வாகம் இல்லை. காரணம் வேலை அனுமதிக் கொடுப்பதற்கு முன்பே மாமூல் முறையாக கணக்கிட்டு வாங்கப்பட்டுவிட்டதாக ஒப்பந்தக்காரர்களே கூறுகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எண்ணற்ற கண்டன போராட்டங்கள் நடத்தியுள்ளது. பலசமூக ஆர்வலர்கள் ஏராளமான புகார்களை அனுப்பியுள்ளனர். மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார் மனுக் கொடுத்துள்ளோம். நகராட்சி நிர்வாகத்தின் முறைகேடுகளை விளக்கி தினசரி பத்திரிகைகள் எழுதி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் 19-11-2015 அன்று நாகர்கோவில் நகராட்சியின் பாதாள சாக்கடை திட்டம் பற்றி பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் நடந்ததாகவும், இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டதாகவும் பத்திரிகைகளில் செய்தி படிக்க முடிந்தது. இது வேதனையான விசயம்.
கருத்துக் கேட்பு என்ற முறையில் நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாட்டுக்கு நற்சான்றிதழ் வழங்கும் கூட்டம் நடந்ததாகவே கருத வேண்டியுள்ளது. காரணம் இக்கூட்டத்தில் மக்களின் சிரமம் பற்றி பேசியதாகவோ, சாலைகள் சீரழிக்கப்பட்டுள்ளது பற்றியோ, நிதி முறைகேடுகள் பற்றியோ பேசியதாக தெரியவில்லை. மாவட்ட நிர்வாகம் எந்த விளம்பரமும் செய்யாமல் குறிப்பிட்ட சிலரை அழைத்து வைத்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது என்பது வேடிக்கையாக உள்ளது. எனவே, பத்திரிகை மூலம் விளம்பரம் செய்து பொதுமக்கள் கலந்து தங்கள் கருத்துக்களை கூறும் வகையில் வெளிப்படைத் தன்மையுடன் நாகர்கோவில் பாதாளச் சாக்கடைத் திட்டம் பற்றி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட ஆட்சியரைக் கேட்டுக் கொள்கிறது.
என்.முருகேசன்
மாவட்டச் செயலாளர்

Check Also

பிரதமரே நடிக்காதீர்… செயல்படுங்கள்… கொரானாவை எதிர்கொள்ள…

நாடு முழுவதும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோவிட் பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் மரணங்களைத் தடுத்து நிறுத்தவும், மருத்துவ ...