பாலாற்றின் குறுக்கே தடுப்பணையை உயரத்தை அதிகரித்துள்ளதற்கு சிபிஐ(எம்) கண்டனம்

ஆந்திரா – தமிழகம்  எல்லை அருகே சித்தூர் மாவட்டம், பெரும்பள்ளம் கிராமப் பகுதியில் பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையின் உயரத்தை 5 அடியிலிருந்து 12 அடியாக ஆந்திர நீர்ப்பாசனத்துறை உயர்த்தியுள்ளது. ஆந்திர அரசின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

மாநிலங்களுக்கு இடையில் பாயும் ஆறுகளில் ஒன்று பாலாறு. இந்த ஆறுகளில் கீழ்நிலையில் உள்ள மாநிலங்களைக் கேட்காமல், மேல்நிலையில் உள்ள மாநிலம் ஆற்றின் திசையை திருப்புதல், தண்ணீர் தேக்குதல், தடுப்பணை கட்டுதல் போன்ற எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது. இந்நிலையில் ஆந்திர அரசு தன்னிச்சையாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

இப்பிரச்சனையில் ஏற்கனவே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வழக்கும் நிலுவையில் உள்ளது. இப்பின்னணியில் ஆந்திர அரசு தடுப்பணையின் உயரத்தை உயர்த்தியுள்ளது மாநிலங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள நதிநீர் ஒப்பந்தத்தை மீறும் செயலாகும்.

பாலாற்றின் மூலம் தமிழகத்தில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு  தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறையாக உள்ள பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தற்போது தடுப்பணையை உயர்த்தியதால் பாசன நீர் வரத்து முற்றிலுமாக குறைந்து பாசனப் பகுதிகள் பாலைவனமாக மாறிவிடும். குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே இப்பிரச்சனையில் தமிழக அரசு, ஆந்திரா மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதியதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

மேலும் மத்திய அரசும் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு தடுப்பணையை பழைய 5 அடி நிலைக்கே கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

மனுவாதிகளின் ஆதிக்க செயலை முறியடித்த அய்யா வைகுண்டரின் 189-வது பிறந்த தினம்…

அய்யா வைகுண்டரின் 189வது பிறந்த தின விழாவை கொண்டாடி வரும் அய்யாவின் அன்புக்கொடி மக்களுக்கு இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ...