பால் உற்பத்தி விவசாயிகளை பாதுகாக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

உற்பத்தியாகும் பால் முழுவதையும் தமிழக அரசு கொள்முதல் செய்து
பால் உற்பத்தி விவசாயிகளை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

தமிழகத்தில் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தியாகும் பால் முழுவதையும் தமிழக அரசு கொள்முதல் செய்யாத நிலை தொடர்கிறது. தற்போது தமிழக அரசின் ஆவின் நிர்வாகம் பால் உற்பத்தி சங்கங்களிலிருந்து கொள்முதல் செய்து வந்த பாலின் அளவை மேலும் சுமார் 5 லட்சம் லிட்டர் அளவிற்கு குறைத்துள்ளது. இதனால் தமிழகத்தில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களும், இதில் உறுப்பினர்களாக உள்ள 4 லட்சத்திற்கு மேற்பட்ட பால் உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கூட்டுறவு சங்க உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் அளவை பெருமளவு குறைத்துள்ள ஆவின் நிர்வாகம் தனியார் நிறுவனங்களிடம் பால்கொள்முதல் செய்யும்  நடவடிக்கைகைய தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசின் ஆவின் நிர்வாகத்தின் இந்நடவடிக்கையை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

ஆவின் நிர்வாகம் பால் கொள்முதல் அளவை குறைத்ததால் பால் உற்பத்தியாளர்கள் தனியாரிடம் குறைந்த விலைக்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையை பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் குறைந்த விலைக்கு பாலை தங்களுக்கு விற்பனை செய்ய பால் உற்பத்தியாளர்களை நிர்ப்பந்தம் செய்கின்றனர். வேறுவழியின்றி குறைந்த விலைக்கு பால் உற்பத்தியாளர்கள் தனியாருக்கு விற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் கடைபிடிக்கும் தவறான விலைவாசி கொள்கையினால் மாட்டுத் தீவணம் உள்ளிட்டு பால் உற்பத்திக்கு தேவைப்படும் அனைத்துப் பொருட்களின் விலைகளும் தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், ஆவின் நிர்வாகத்தின் கொள்முதல் குறைப்பு நடவடிக்கை பால் உற்பத்தி விவசாயிகள் தங்கள் தொழிலை தொடர்ந்து செய்ய முடியாத நிலைமைக்கு தள்ளப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு ஆவின் நிர்வாகம் தனியார் நிறுவனங்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டுமெனவும், பால் உற்பத்தி விவசாயிகள் உற்பத்தி செய்யும் பால் முழுவதையும் கொள்முதல் செய்வதை உத்தரவாதப்படுத்த வேண்டுமெனவும்; பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியான விலை கொடுக்க வேண்டுமெனவும், கூடுதலாக உற்பத்தியாகும் பாலை கொள்முதல் செய்து குளிரூட்டு வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி மானிய விலையில் மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை கிடைக்கச் செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் காவல்நிலை சித்ரவதையால் வாலிபர் குமரேசன் மரணம் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 8 தென்காசி மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அனுப்புநர்: நவநீதகிருஷ்ணன் (வயது 55/2020) த/பெ. ஆதிமூலம் ...