பிரகாஷ்காரத் பேட்டி!

சமர்முகர்ஜி நகர் (விசாகை), ஏப். 15 –

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டையொட்டி, பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் புதனன்று (ஏப்.15) ஊடக மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது வருமாறு:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நடைமுறை உக்தி குறித்த ஆய்வறிக்கையின் முன்வடிவின் மீது செவ்வாயன்று பிற்பகல் பிரதிநிதிகளின் விவாதம் துவங்கியது. இந்த அறிக்கையின் மீது கட்சியின் அனைத்து மட்டங்களிலும் விவாதிக்கப்பட்டு கட்சி கிளைகளில் இருந்து 1432 திருத்தங்கள் வந்துள்ளன. பொதுவாக மாநாட்டு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டவுடன் அதை கட்சியின் அனைத்து மட்டங்களிலும் விவாதிப்பது என்பது எங்களது கட்சியின் வழக்கமான நடைமுறையாகும். இந்த அறிக்கை மீது வந்த திருத்தங்கள் மத்தியக்குழுவின் முன்பு வைக்கப்பட்டு 29 திருத்தங்கள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளன.

இதுபோன்ற மறு ஆய்வை கட்சி மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். கடந்த 25 ஆண்டுகளில் கட்சி மேற்கொண்ட அரசியல் நடைமுறையை மறு ஆய்வு செய்வது என்று முடிவு செய்தோம். 1990-1991 ஆண்டில் இருந்து இந்த ஆய்வை துவக்கினோம். அந்த ஆண்டுதான் சர்வதேச அளவில் பல முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்தன. சோவியத் யூனியனில் சோசலித்திற்கு ஏற்பட்ட சரிவு இந்தியாவில் தனியார்மய – தாராளமய பொருளாதார கொள்கைகள் அமுலுக்கு வந்தது போன்றவை அந்த ஆண்டுதான் நடைபெற்றன.

இந்து ஆய்வின்போது முக்கியமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தனித்து வலுப்படுத்துவது மற்றும் இதர இடதுசாரி சக்திகளை ஒருங்கிணைத்து ஒரு வலுவான அணியை அமைப்பது எப்படி முன்னேற்றத்தை காண்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த அறிக்கை மீது இன்று காலை முதல் விவாதம் துவங்கியது. இதுவரை 14 தோழர்கள் பேசியுள்ளனர். இந்த விவாதத்தை புதனன்று இரவு வரைநடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம். அதுவரை பிரதிநிதிகள் முன்மொழியும் திருத்தங்களும் ஆய்வுக்குப்பின் ஏற்றுக் கொள்ளப்பட்டு, வியாழன் காலை இறுதிப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும்.

இதுவரை விவாதம் நல்லமுறையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வலுப்படுத்த வருங்காலத்தில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் வந்தன. சில பிரநிதிகள் கூர்மையான விமர்சனங்களையும் முன்வைத்தனர். அதவாது இத்தகைய மறு ஆய்வை கட்சி மிக இவ்வளவு ஆண்டுகள் கழித்து நடத்துவதற்கு பதில் பல ஆண்டுகளுக்கு முன்பே நடத்தியிருக்க வேண்டும் என்று சிலர் தெரிவித்தனர்.

கடந்த 25 ஆண்டு காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இல்லாத காரணத்தால் இந்த ஆய்வை நடத்த கட்சி முடிவு செய்தது. நாட்டில் மிகப்பெரிய இடதுசாரி கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திகழ்கிறது. கட்சிக்கு 10 லட்சத்து 50 ஆயிரம் உறுப்பினர்களும், பல்வேறு வெகுஜன அமைப்புகளில் 6 கோடி உறுப்பினர்களும் உள்ளனர். இதில் பெரும்பாலும், கேரளா, மேற்குவங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களே உள்ளனர்.

உண்மையான அகில இந்திய கட்சியாக மாறுவதற்கு ஏற்ப, கட்சியின் நடைமுறை உத்தியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து இந்த அறிக்கையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதைத் தவிர புதனன்று (ஏப்.15) மாநாட்டில் இரண்டு முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிலம் கையகப்படுத்துதல் மசோதா என்று அரசு கூறினாலும், நில அபகரிப்பு மசோதா என்பதுதான் அதற்கு பொருத்தமான பெயராக இருக்கும். அந்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானமும், டாக்டர் அம்பேத்கரின் 125வது பிறந்த நாள் நூற்றாண்டு விழா தொடங்கி உள்ள நிலையில், தலித் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார்.

Check Also

கட்சியின் சொந்த பலத்தை பெருக்குவோம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 22வது அகில இந்திய மாநாடு 2018 ஏப்ரல் 18 முதல் 22 வரை தெலுங்கானா ...