பிரதமரின் அனைத்து கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக தோழர் இளமாறம் கரீம் அவர்கள் எடுத்து வைத்த முக்கிய ஆலோசனைகள்:

மாண்புமிகு பிரதமர் அவர்களே அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்கு இந்திய அரசாங்கத்தை நான் பாராட்ட்டுகிறேன். பிப்ரவரி மாதத்திலிருந்தே இத்தகைய கூட்டத்தை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் கோரி வந்தன. கோவிட் வைரசுக்கு எதிரான போராட்டம் என்பது இந்திய மக்கள் அனைவரும் ஒரே மனிதனாக அரசியல் வேறுபாடுகளை கடந்து ஓரணியில் நின்று நடத்த வேண்டிய போராட்டம் ஆகும்.இந்த போராட்டத்தில் எங்களது ஆதரவை முழுமையாக நல்குகிறோம்.

தேசம் தழுவிய ஊரடங்கு என்பது இன்றைய தேவையாக இருக்கலாம். ஆனால் திடீரென அது அறிவிக்கப்பட்டவிதம் பல துன்பங்களை விளைவித்துள்ளது.

இன்றைய நெருக்கடியில் நமது தேசம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் ஊரடங்குக்கு பிறகு உருவாக உள்ள துன்பமான சூழல்களை எதிர்கொள்ளவும் நான் சில ஆலோசனைகளை முன்வைக்கிறேன்.

உழைக்கும் மக்களின் பொருளாதார சூழலை நிலை நிறுத்த

1.கோவிட் வைரசின் முதல் தாக்குதல் ஜனவரி இறுதியில் தெரிய வந்தது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட இடையில் இரண்டு மாதங்கள் நம்மிடம் இருந்தன. ஆனால் நமது நடவடிக்கைகளை திட்டமிட இந்த பொன்னான கால இடைவெளி பயன்படுத்தப்படவில்லை. எனவே ஊரடங்கு அறிவித்த பொழுது மக்களிடையே பீதி உருவானது. புரிதல் தேவையான அளவு இல்லாமல் போனது.

 1. ஏற்கெனவே தள்ளாடிக்கொண்டிருந்த நமது பொருளாதாரம் வைரஸ் தாக்குதலுக்கு பிறகு மேலும் மோசமாகிவிட்டது. ஊரடங்கு காரணமாக தின வருவாயை மட்டுமே நம்பியிருக்கும் கோடிக்கணக்கான நகர்ப்புற மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் பசியால் வாடிக்கொண்டுள்ளனர். அவர்கள்அனைவருக்கும் ரூ 5000 உடனடியாக தரப்பட வேண்டும்.
 2. அரசாங்கத்திடம் 50 மில்லியன் டன் அரிசியும் 27.5 மில்லியன் டன் கோதுமையும் உள்ளது. எனவே அனைத்து ஏழை மற்றும் இடம் பெயர் உழைப்பாளிகளுக்கு ஒரு குடும்பத்துக்கு 35 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக தரப்பட வேண்டும்.
 3. அனைத்து நகர்ப்புற மையங்களிலும் குறிப்பாக குடிசை வாழ் பகுதிகளில் பசி,பட்டினி மற்றும் வைரஸ் சமூக பரவலை தடுக்க இது உடனடியாக நடைமுறைப்படுத்துவது அவசியமாகிறது.
 4. கேரளா அறிவித்து இருப்பது போல விளைந்த பயிர்களை அறுவடை செய்வதை அத்தியாவசிய பணியாக அறிவிக்க வேண்டும். ஊரடங்கை தளர்த்தி விவசாயிகளுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு தர வேண்டும். அறுவடை இயந்திரங்கள், விதைகள் இலவசமாக தர வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையில் உணவு கழகம் விளை பொருட்களை வாங்குவதை உத்தரவாதம் செய்ய வேண்டும்.
 5. மாகாத்மா காந்தி கிராமப்புற வேலைச்சட்டத்தில் உள்ள வேலையில்லா காலத்திய உதவி சட்டவிதியை பயன்படுத்தி விவசாய தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் அளிக்கப்பட வேண்டும்.
 6. அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைப்பது உத்தரவாதம் செய்யப்பட வேண்டும். கருப்பு சந்தை கட்டுப்படுத்துவதுடன் ஒவ்வொரு அத்தியாவசிய பொருளின் அதிகபட்ச விலை பகிரங்கமாக அறிவிக்கப்பட வேண்டும்.

வைரஸ் பரவலை தடுக்க

 1. பல இடங்களிலிருந்து பயணம் செய்த இடம் பெயர் தொழிலாளர்களுக்கு பொருத்தமான மருத்துவ வசதிகளும் ஆரோக்கியகரமான தனிமைப்படுத்துதல் வசதிகளும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் செய்து தரப்பட வேண்டும்.
 2. வைரசால் பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்த அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் வசதிகளை அதிகரிக்க வேண்டும். தேவைப்பட்டால் அனைத்து தனியார் மருத்துவ மனைகளையும் அரசாங்கம் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். கேரளா அரசாங்கத்தின் முயற்சிகளை முன்மாதிரியாக கொள்ள வேண்டும்.
 3. நோய் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் நிபுணர்கள் அளித்துள்ள ஆலோசனைப்படி மருத்துவமனை படுக்கைகள் மற்றும் அவசரகால சிகிச்சைகள் வசதிகளின் எண்ணிக்கையை பன்மடங்கு அதிகரிக்க பேரிடர் கால நிதியை பயன்படுத்தி பெருமளவு மூலதன முதலீடு செய்ய வேண்டும்.
 4. சமூக பரவலை தடுக்க பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தேடிப்பிடிப்பது அவசியம் ஆகும். இதில் கேரளாவின் அனுபவத்தை முன்மாதிரியாக கொள்ளலாம்.
 5. அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கும் பாதுகாப்பு உடைகள் மற்றும் ஏனைய உபகரணங்கள் தரப்பட வேண்டும். அனைத்து மருத்துவ உதவிகளும் செய்யப்பட வேண்டும். சுவாசக்கருவிகள் கொள்முதல் செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
 6. ‘ரேபிட் டெஸ்ட்’ எனப்படும் அதிவிரைவு மருத்துவ பரிசோதனைகள் தேசம் முழுதும் விரைவுபடுத்தப்பட வேண்டும். தென் கொரியாவைவிட 241 மடங்கு குறைவாக நாம் பரிசோதனை செய்கிறோம். கேரளாவில் ஏற்கெனவே அதிவிரைவு மருத்துவ பரிசோதனை தொடங்கப்பட்டுவிட்டன.
 7. இந்த வைரசை திறமையாக கட்டுப்படுத்திய தேசங்களான கியூபா, சீனா, தென் கொரியா ஆகிய தேசங்களிலிருந்து அவசர அவசியமாக மருத்துவ உதவிகள் பெறப்பட வேண்டும். சீனா,கியூபா ஆகிய தேசங்கள் எப்பொழுதும் இன்னல் மிகுந்த காலங்களில் உதவிட தயாரக உள்ளன.
 8. வைரஸ் தொற்று காரணமாக நிறுவனங்கள் மூடப்பட்டதால் பணியை செய்ய இயலாத ஊழியர்களுக்கு 80% ஊதியத்தை தருவதாக பல தேசங்கள் அறிவித்துள்ளன. இந்திய அரசாங்கமும் அவ்வாறு அறிவிக்க வேண்டும்.

ஊரடங்கிற்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்

1.எந்த ஒரு தொழில் பிரிவிலும் வேலை இழப்போ அல்லது ஊதிய குறைப்போ இல்லை என்பதை அரசாங்கம் உத்தரவாதம் செய்ய வேண்டும்.

 1. தொழில் மற்றும் கட்டுமான பிரிவுகளின் செயல்பாடை உடனடியாக துவங்க வேண்டும். பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் குறிப்பாக இடம் பெயர் தொழிலாளர்களை காப்பாற்ற இது அவசியம்.
 2. ஊரடங்கிற்கு பிந்தைய காலத்தில் பொருளாதார மந்தம் தடுக்க தேவையான அளவு மூலதனம் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
 3. விவசாய துறைக்கு உடனடி கவனம் செலுத்த வேண்டும். விவசாய கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும்.
 4. வேலை இழப்பின் காரணமாக நாடு திரும்பும் வெளிநாடு இந்தியர்களுக்கு மறுவாழ்வு திட்டம் அறிவிக்கப்பட வேண்டும். அதற்காக விசேட பொருளாதார திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
 5. நடுத்தர வர்க்க மக்களுக்கு குறிப்பாக ஊழியர்களுக்கு கடன் மற்றும் மாத தவணைகள் தள்ளி போட வேண்டும்.
 6. அனைத்து மாவட்டங்களிலும் அரசாங்க மருத்துவமனைகள் தொடங்க மத்திய மாநில அரசாங்கங்கள் நடவடிகைகள் எடுக்க வேண்டும்.

8.பல்வேறு இடங்களில் உள்ள இடம் பெயர் தொழிலாளர்கள் தமது சொந்த ஊர்களுக்கு செல்ல விசேட இரயில்கள் இயக்க வேண்டும்.

கேரளா மற்றும் மாநிலங்கள் தொடர்பான கோரிக்கைகள்:

 1. இந்த அசாதரண சூழலில் மாநில ஜி.டி.பி.யில் 3% எனும் கடன் உச்சவரம்புகளை நீக்க வேண்டும். இது குறித்து பின்னர் விவாதித்து மறுநிர்ணயம் செய்யலாம்.
 2. கேரளாவுக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவை ரூ 3000 கோடி உடனடியாக தரப்பட வேண்டும்.
 3. ஏற்கெனவே மத்திய அரசால் ஏற்று கொள்ளப்பட்ட 2020-21ம் ஆண்டுக்கான ரூ 15,323 கோடி உடனடியாக தரப்பட வேண்டும்.
 4. உள்ளார்ட்சிகளுக்கு தர வேண்டிய ரூ2412 கோடி விரைவில் அளிக்க வேண்டும்.
 5. மாநில பேரிடர் நிதியை அந்தந்த மாநிலங்களின் நிலைமைக்கு ஏற்ப பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

6.கோவி 19 வைரஸ் காரணமாக மோசமாக கேரளா பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் உதவி தொகை குறைவாகவே தரப்பட்டுள்ளது. இது அதிகரிக்கப்பட வேண்டும்.

 1. வெளிநாடுகளில் இறந்தவர்களின் உடலை இந்தியா கொண்டுவர எளிமையான நடைமுறைகளை இந்திய அரசாங்கம் தூதரகங்கள் மூலமாக அமலாக்க வேண்டும்.
 2. கோவிட் 19 நிவாரணம் என்பது கேரளாவுக்கு ரூ 157 கோடி மட்டுமே தரப்பட்டது. மொத்த உதவியான 11,091 கோடியில் இது வெறும் 1.4% மட்டுமே. தேசத்தில் உள்ள மொத்த நிவாரண முகாம்களான 22567ல் கேரளாவில் மட்டும் 15541 அதாவது 68.8% இயங்குகின்றன. இதனை மத்திய அரசாங்கமே உச்ச நீதிமன்றத்தில் ஏற்று கொண்டுள்ளது. எனவே கேரளாவுக்கு தரப்பட்ட நிதி அதிகரிக்கப்பட வேண்டும்.
 3. வளைகுடா நாடுகளில் தொழிலாளர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் ஒரு அறையில் 10 முதல் 20 பேர் தங்கியுள்ளனர். இதனால் தொற்று பரவும் ஆபத்து உள்ளது. எனவே இந்திய தூதரகங்கள் மூலம் அந்தந்த தேசங்களின் அரசாங்கங்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நமது தொழிலாளர்களை காப்பது மிக அவசியம் ஆகும். இதனை மாண்புமிகு பிரதமர் செய்ய வேண்டும்.

இந்த பிரச்சனைகளை இந்திய அரசாங்கம் பரிசீலனை செய்யும் என நம்புகிறேன். மீண்டும் எனது கட்சி சார்பாக கோவிட் 19 வைரசுக்கு எதிரான போராட்டத்தில் எங்களது ஆதரவை தெரிவித்து கொள்கிறேன்.

நன்றி!

தோழர்.கனகராஜ் பதிவு

Check Also

5000 பட்டதாரி ஆசிரியர்கள், 1250 தமிழாசிரியர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் பணி வழங்கிட தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்

03.8.2021 பெறுநர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம்.   பொருள்:- கடந்த ...