பிரதமரின் அறிக்கை குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது விளக்கம் தேவை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

புதுதில்லி, ஜூன் 22

இந்திய – சீன எல்லைக் கோடு தொடர்பாக ஏற்பட்டுள்ள மோதலை அடுத்து எழுந்துள்ள நிகழ்ச்சிப் போக்குகள் குறித்து பிரதமர் அளித்துள்ள அறிக்கை குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பதால், அது குறித்து விளக்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரி இருக்கிறது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய – சீன எல்லைக்கோட்டில் மோதல் ஏற்பட்டதற்கான நிகழ்ச்சிப் போக்குகள் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்குவதற்காக ஜூன் 19 அன்று அரசாங்கம் ஓர் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தாமதமாக ஏற்பாடு செய்தது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் உரைநிகழ்த்தும்போது, “நம்முடைய இடங்கள் எதிலும் ஊடுருவல் எதுவும் இல்லை, நமது எல்லைக்குள் யாரும் வரவும் இல்லை, நமது எல்லைச்சாவடிகள் எதுவும் கைப்பற்றப்படவும் இல்லை,” என்று சந்தேகத்திற்கிடமின்றி தெரிவித்தார். பின்னர், ஏன் இந்த மோதல்? நம் வீரர்கள் வீர  மரணங்கள் அடைந்தது ஏன்?

பிரச்சனைகள் தொடர்பாக, தற்போது அரசுத்தரப்பில் கட்டிஎழுப்பப்படும் விளக்கங்களும், சம்பவங்களின் காலவரிசையும் எல்லைக்கோட்டில் சம்பவம் நடந்த இடத்தைப் பற்றித் துல்லியமாக சில கேள்விகளை எழுப்புகின்றன.

பிரதமரின் கூற்றுகள், துணிவுமிக்க நம் வீரர்கள், தீரத்துடன் மேற்கொண்ட சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கு பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்தத் தாவாவைத் தீர்த்துவைப்பதில் நாம் மேற்கொண்டுவந்த ராஜதந்திர முயற்சிகளை வலுப்படுத்துவதையும் இது அரித்து வீழ்த்துகிறது.

பிரதமரின் அறிக்கை விரிவான அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதால், அரசாங்கம், இப்போது நீண்ட நெடிய விளக்கங்களை வெளியிட்டிருக்கிறது. ஒன்று, பத்திரிகை தகவல் அலுவலகம் மூலமாக, பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளிவந்திருக்கிறது. மற்றொன்று, மத்திய அயல்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரிடமிருந்து வந்திருக்கிறது. இவ்விளக்கங்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடுகளுடன் காணப்படுகின்றன. குழப்பத்தைத் தெளிவுபடுத்தத் தவறிவிட்டதுமல்லாமல், குழப்பத்தை மேலும் அதிகப்படுத்தி இருக்கின்றன.

மத்தியப் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் மத்திய அயல்துறை அமைச்சகம் ஆகியவற்றின் நிலைப்பாடுகளில் உள்ள முரண்பாடுகள் தொடர்பாக, பிரதமரின் கூற்றுகளிலிருந்து எழுந்துள்ள கேள்விகளுக்கு, “விஷமத்தனமான வியாக்கியானங்கள்” (“mischievous interpretation”)  என்று கூறியிருப்பது நியாயமற்றது.   

 எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, மோதல் ஏற்பட்ட துல்லியமான இடம் குறித்து எழுந்துள்ள கேள்விக்கும், அவ்வாறு மோதல் ஏற்பட்டதற்கான சூழ்நிலைகள் குறித்தும், திட்டவட்டமான பதிலைக் கோருகிறது. அப்போதுதான் இது தொடர்பாக எழுந்துள்ள ஐயங்கள் போக்கப்படும் மற்றும் லடாக்கில் எல்லைக்கோட்டுப் பகுதியில் அமைதியை மீளவும் நிலைநிறுத்தவும், போர்ப்பதற்ற நிலைமையைக் குறைக்கவும் அதிகாரபூர்வமாக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள குறிக்கோள்களைப் பின்பற்றுவதற்கான நிலைமைகளை உருவாக்கவும் உதவிடும்.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கோரியுள்ளது.

Check Also

மனுவாதிகளின் ஆதிக்க செயலை முறியடித்த அய்யா வைகுண்டரின் 189-வது பிறந்த தினம்…

அய்யா வைகுண்டரின் 189வது பிறந்த தின விழாவை கொண்டாடி வரும் அய்யாவின் அன்புக்கொடி மக்களுக்கு இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ...