பி.எஸ்.கிருஷ்ணன் மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், சமூக அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடியவருமான பி.எஸ்.கிருஷ்ணன் உடல்நிலை குறைவு காரணமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.

1956ல் ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்த அவர்,  தன்னுடைய பணிக்காலத்தில், தலித்துகள், பழங்குடிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமைகளை உறுதிப்படுத்தியவர். தீண்டாமையையும், சாதிய பாகுபாடுகளையும் ஒழிப்பதற்காக பாடுபட்டவர். குறிப்பாக  பட்டியல் சாதியினருக்கான சிறப்புக்கூறு திட்டம், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தை உருவாக்க காரணமாக இருந்தவர். ஆட்சி முறையும், பொதுநிர்வாகமும் அடித்தட்டு மக்களை எளிதாக சென்றடைவதற்கான வழிமுறைகளை வடிவமைத்தவர்.

1990ல் ஓய்வு பெற்ற பின்னரும் கடந்த 29 ஆண்டுகளாக பழங்குடி மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மதசிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தனது இறுதி மூச்சுவரை மிகத்தீவிரமாக பாடுபட்டு வந்தவர் பி.எஸ்,கிருஷ்ணன்.  அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அவரது குடும்பத்தாருக்கும், அவரது நண்பர்களுக்கும் தன்னுடைய அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

Check Also

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூண் இடிக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் ...