புதிய பாதை காட்டும் இலத்தீன் அமெரிக்கா

காரல் மார்க்ஸ் பிறந்து இருநூறு ஆண்டுகள் முடிந்த நிலையில், இன்றும் மார்க்சியத்தில் வியக்கத்தக்க ஒரு தன்மை உண்டு. அது, மார்க்சியத் தத்துவத்தின் வற்றாத படைப்பாற்றல்.

ஒவ்வொரு சமூகத்திலும் மாற்றத்திற்கான மக்களின் புரட்சிப் போராட்டம் நிகழும்போதெல்லாம் மார்க்சிய வழியில், அந்த நிகழ்வுகளை ஆராய்ந்தால், புதிய வெளிச்சங்கள், கருத்துக்கள் கிடைக்கின்றன.

மானுட விடுதலைப் போராட்டத்தில் ரஷ்யப் புரட்சி மார்க்சியத்திற்கு பலம் சேர்த்த ஒரு வளமான படைப்பு. சீனப் புரட்சியும் ஒரு ஆசியப் படைப்பாக மார்க்சியத்தை அலங்கரிக்கிறது. கியூபா தனிச் சிறப்பு வாய்ந்த உன்னதப் படைப்பு. இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்த வரிசையில் இலத்தீன் அமெரிக்கா தனி உலகத்தை படைத்துக் கொண்டிருக்கிறது. பல நூற்றாண்டுகள் அந்த நாடுகளின் ஆன்மாவையும் அடக்கி வைத்திருந்தது, அமெரிக்க ஏகாதிபத்தியம். கடும் சுரண்டலுக்கும், அடிமைத்தனத்திற்கும் ஆட்பட்டிருந்தாலும், நீண்ட நெடிய போராட்டத்தை இலத்தீன் அமெரிக்க மக்கள் கைவிடவில்லை. அந்தப் போராட்டங்களின் ஊடாக ஏராளமான சித்தாந்தங்கள் உருப்பெற்றன.

எனினும், மார்க்சியம் இலத்தீன் அமெரிக்காவை கவ்விப் பிடித்தபோதுதான் வெற்றிப் பயணம் துவங்கியது. பல தோல்விகள், வீழ்ச்சிகள், மரணங்கள் என தியாகப் பயணமாக இருந்தாலும் இடதுசாரி இயக்கங்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் மாற்றங்களும் நிகழ்ந்தன. பிடல் காஸ்ட்ரோ வழியில் சாவேஸ் போன்ற தலைவர்கள் தலைமையேற்று  நடத்திய அரசாங்கங்கள் பல அமைந்தன. ஏகதியபத்தியத்தின் இடையறாது கவிழ்ப்பு, சதிகள், சூழ்ச்சிகளுக்கு இடையே இன்னமும் இலத்தீன் அமெரிக்காவில் பல நாடுகள் சோசலிச இலட்சியத்தை பிரகடனம் செய்து செயலாற்றி வருகின்றன. மார்க்சிய வளர்ச்சியின் முக்கிய களமாக இன்று இலத்தீன் அமெரிக்கா விளங்குகிறது.

புதிய இலத்தீன் அமெரிக்க சிந்தனைகள்

இந்த நிகழ்வுகளை விளக்கி வெளிவந்துள்ள முக்கியமான நூல், இலத்தீன் அமெரிக்க மார்க்சியப் போராளி மார்தா ஹர்னக்கர் எழுதிய “ஒரு உலகைப் படைப்பது:21-ம் நூற்றாண்டு சோசலிசதிற்கான புதிய பாதைகள்“ (“A World to Build: New Paths toward Twenty-First Century Socialism”).

இலத்தீன் அமெரிக்க நிகழ்வுகள விளக்குவதோடு மட்டுமல்லாமல்அந்த அனுபவத்தில், எதிர்காலப் புரட்சி மாற்றங்களுக்கும் சோசலிச அமைப்புக்களுக்கும் பல புதிய கருத்தாக்கங்களை மார்த்தா இந்த நூலில் பதிவு செய்துள்ளார். மார்க்சிய லெனினிய அடிப்படைகளிருந்து விலகிடாமல், இலத்தீன் அமெரிக்க நிலைமைகளை நன்கு ஆய்வு செய்து புதிய பாதைகளை விவாதிக்கிறார்.

ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் கொள்கையின் பரிசோதனை கூடமாக இலத்தீன் அமெரிக்கா இருந்து வந்திருக்கிறது. இலத்தீன் அமெரிக்காவில்தான் முதலில் நவீன தாராளமயக் கொள்கைகள் அமலாக்கப்பட்டன. இந்தக் கொள்கைகள் வறுமை, ஏற்றத் தாழ்வுகளை அதிகரித்தன. இந்தக் கொள்கைகளை எதிர்த்த போராட்டக் களமாகவும் இலத்தீன் அமெரிக்க கண்டம் திகழ்ந்தது.

உண்மையில் சோவியத்தின் வீழ்ச்சி ஏற்பட்டபோது உலகம் முழுவதும் சோசலிச இடதுசாரி சக்திகள் சோர்வுற்றிருந்தன. அந்தப் பின்னணியில் சோசலிச முழக்கத்துடன் இலத்தீன் அமெர்க்கக் கண்டம் வீறுகொண்டு எழுந்தது. 1998ம் ஆண்டில் வெனிசுலாவில் சாவேஸ் துவங்கி, 2000ல் சிலி, 2002ல் பிரேசில், 2003ல் அர்ஜெண்டினா, 2005ல் உருகுவே, 2008ல் பராகுவே, 2009ல் எல்சல்வாடர், 2013ல் ஈகுவடார், 2011ல் பெரு என தொடர்ந்து இடதுசாரிகள் வெற்றி பெற்று வந்துள்ளனர்.

இவை அனைத்தும் ஒரே தன்மையிலான வெற்றி அல்ல. ஆனால், ஒரு பொதுத்தன்மை அனைத்து நாடுகளிலும் இருந்ததுசமுகத் தளத்தில் நவீன தாரளமயத்தின் குறிப்பிட்ட பாதிப்புக்களுக்கு எதிராக ஏராளமான  வெகுமக்கள் இயக்கங்கள் உருவானதும், அவை ஒருங்கிணைந்து செயல்பட்டதும், இலத்தீன் அமரிக்க சோசலிசத்தின் சிறப்பு. இந்த வெகுமக்கள் இயக்க ஒற்றுமை மேடைகள் வெற்றிகளை சாதித்தன.

சமுக உள்ளூர் இயக்கங்கள்

ஒவ்வொரு நாட்டின் மக்கள் திரட்டல் மற்றும் சமுக இயக்கங்களை நூல் விளக்குகிறது. பிரேசிலில் எழுந்த நிலத்துக்கான போராட்டம், பொலிவியாவில் நடந்த தண்ணீருக்கான போராட்டம் போன்ற இயக்கங்கள் கட்டிய மக்கள் ஒற்றுமையை மார்த்தா விளக்குகிறார்.

இந்த வெற்றி வரலாற்றை விளக்குவதோடு மக்கள் திரட்டலில் எழுந்த பிரச்னைகளையும் சவால்களையும் மார்த்தா விளக்குகிறார். அங்கு ஆட்சிக்கு வந்த இடதுசாரி அரசாங்கங்கள் மாபெரும் மக்கள் இயக்கங்களைக் கொண்டுதான் அமெரிக்க அரசின் கவிழ்ப்பு முயற்சிகளை எதிர்கொண்டு வருகின்றன.

இந்த அனுபவங்கள் அடிப்படையில், 21ம் நூற்றாண்டுக்கான சோசலிசக் கண்ணோட்டம் பற்றி விவாதிக்கிறார், மார்த்தா. ஒவ்வொரு நாட்டு வரலாற்று வளர்ச்சியை மையமாகக் கொண்டு சோசலிசம் கட்டப்பட வேண்டும் என்ற சாவேசின் கருத்தை மார்த்தா வலியுறுத்துகிறார். கம்யூனிஸ்ட் அறிக்கை பேசுகிற, ஒவ்வொருவரின் ஆற்றலும் பிரகாசிக்கும் ஒரு புதிய சமுகம் என்ற மார்க்சின் பார்வையை மீடடெடுக்க வேண்டும் என்று அவர் விளக்குகிறார்.

சோசலிசத்தை அடையும் சிந்தனைகளை விளக்குகிறபோது சாவேஸ் சொன்ன கருத்தை வலியுறுத்துகிறார்;

உள்ளூர் சக்திகளின், பங்கேற்பு இல்லாமல் விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளடங்கிய கீழ்மட்ட அளவிலான அமைப்பு இல்லாமல் ஒரு புதிய வாழ்க்கையை கட்டியமைப்பது சாத்தியமில்லை“.

தேர்தலில் வெற்றி பெற்று இடதுசாரிகள் தலைமையில் அமைந்த அரசாங்கங்களுடன் சோசலிசம் நோக்கும் வாய்ப்பு இல்லாத நிலையில் சோசலிசப் பாதையில் செல்ல அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டுமென்றும் மார்த்தா விரிவாக விளக்குகிறார்.

இந்த அனுபங்களின் வழியாக அவர் எடுத்துரைக்கும் சில கருத்தாக்கங்கள் முக்கியமானவை. மக்கள் மத்தியில் முதலாளித்துவ கருத்து மேலாதிக்கம், ஊடகம் உள்ளிட்ட கருவிகளால் இன்று மேலும் இறுக்கமடைந்துள்ளதுஇந்நிலையில் மக்களின் சிந்தனையை சோசலிச செயல்திட்ட மாற்று வழியாக வென்றெடுக்க வேண்டும் என்றும் அந்த மாற்று, உள்ளூர் மக்கள் போராட்டங்களால் செழுமை பெற வேண்டும் என்றும் மார்த்தா கருதுகிறார்; இந்த புதிய ஒரு மக்கள் மேலாண்மையை (Hegemony) பெற்றிடுவதற்கு இடதுசாரிகள் பாடுபட வேண்டும்.

இதற்கு தேவையான ஒரு அரசியல் கருவியாக கட்சி அமைப்பு இருக்க வேண்டும். இந்த அரசியல் கருவி மக்களோடு உரையாடுவதாகவும்முதலாளித்துவ எதிரிகளுக்கு எதிராகபல சமுகக் குழுக்களை அணிதிரட்டி பலமான அரசியல் சக்தி ஒற்றுமையை கட்டமைக்க வேண்டும். இந்தக் கருவி, மக்கள் போராட்டங்களை வழிநடத்துவதாக, அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஊழியர்கள் கொண்டதாக இருக்க வேண்டும். இந்த அரசியல் கருவி இல்லாமல் மக்கள் எழுச்சிகள் இருந்தால், அந்த எழுச்சிகள், பயனற்றதாக முடிந்திடும்.

மார்த்தாவின் பல சிந்தனைகள் இந்திய இடதுசாரி இயக்கங்களுக்கும் பயன்படும்.

(புத்தகம் பேசுது, ஜுலை 2017)

என்.குணசேகரன்   

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...