புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிகவிற்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஆளும் கட்சி அதிகாரபலத்தையும், பணபலத்தையும் பயன்படுத்தி அராஜகம் செய்வார்கள் என்பதால் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக சில எதிர்க்கட்சிகள் அறிவித்து விட்டன.

ஆளும் கட்சியின் தேர்தல் தில்லுமுல்லுகளையும், அதிகார பலத்தையும், பணபலத்தையும், மக்களைத் திரட்டி எதிர்கொள்வதற்குப் பதிலாக, தேர்தலில் போட்டியிடாமல் விலகி இருப்பது சரியான அரசியல் அணுகுமுறையாக இருக்காது என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  முடிவு செய்தது.

திமுக ஆட்சியில் இருந்தபோது கடைப்பிடித்த திருமங்கலம் பார்முலாவாக இருந்தாலும், அதிமுக கடைபிடித்த சங்கரன்கோவில் பார்முலாவாக இருந்தாலும் இரண்டையும் அரசியல் ரீதியாக எதிர்த்து நிற்பதே சரியான ஜனநாயக அணுகுமுறை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது என தேமுதிக  முடிவெடுத்து என்.ஜாகீர் உசேனை வேட்பாளராக தற்போது அறிவித்துள்ளது.  

இந்நிலையில், தேமுதிக வேட்பாளரை ஆதரிப்பது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. கடந்த ஓராண்டு காலமாக, அதிமுக ஆட்சியில் கடுமையான விலை உயர்வு, பேருந்து, பால் மற்றும் மின் கட்டண உயர்வுகள், காவல்துறை அத்துமீறல்கள், சட்டமன்ற ஜனநாயக மறுப்பு, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ள நிலை, சமூக விரோத கும்பலின் மணற்கொள்ளை, நில மோசடிகள் போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து நீடிக்கிறது.

எனவே, இத்தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளரைத் தோற்கடிக்கும் வகையிலும், தேமுதிக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் பணிகளையும், பிரச்சாரத்தையும் மேற்கொள்ளும் என தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...

Leave a Reply