புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் செயலாளர் தோழர் சண்முகம் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

புதுக்கோட்டை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தோழர் சண்முகம் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக  தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய தோழர்  சண்முகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது அதில் தன்னை இணைத்துக் கொண்டு தீவிரமாக கட்சிப் பணியாற்றியவர்.

தொழிற்சங்கத்தில் மாவட்டத் தலைவர், கட்சியின் நகரச் செயலாளர், மாவட்டக்குழு உறுப்பினர், மாவட்ட செயற்குழு உறுப்பினர், மாவட்டச் செயலாளர் மற்றும் பொறுப்புச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளில் மாவட்ட கட்சிக்கு தலைமை வகித்தவர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர்.

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோருக்கான எண்ணற்ற போராட்டங்களுக்கு தலைமையேற்று வெற்றி கண்டவர். உழைப்பாளி மக்களின் நலன்களைப் பாதுகாக்க மாவட்டம் முழுவதும் சென்று பணியாற்றியவர்.

புதுக்கோட்டை நகர்மன்ற உறுப்பினர், நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் போன்ற பல்வேறு பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். உழைப்பாளி மக்களுக்காக தன்னலமற்ற முறையில் பாடுபடுபட்ட தோழர் சண்முகம் தனது கடைசி மூச்சு வரை குடிசையில்தான் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், புதுக்கோட்டை மாவட்ட உழைப்பாளி மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் புதுக்கோட்டை தோழர்களுக்கும் அவரது குடும்பத்திற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

– கே. பாலகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்       

Check Also

5000 பட்டதாரி ஆசிரியர்கள், 1250 தமிழாசிரியர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் பணி வழங்கிட தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்

03.8.2021 பெறுநர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம்.   பொருள்:- கடந்த ...