புதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்

ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் இன்று (22.9.2014) மண்ணாடிப்பட்டு கொம்யூன் கட்சி கமிட்டி அலுவலகம் 21.9.2014 அன்று வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு அமைப்பைச் சார்ந்தவர்களால் தாக்கப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டது – சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்கக் கோரி புதுவை முதலமைச்சர் அவர்களுக்கு அனுப்பிய கடிதம்.


22.09.2014

பெறுநர்

            மாண்புமிகு புதுவை முதலமைச்சர் அவர்கள்,

            புதுவை அரசு,

            தலைமைச் செயலகம்,

            புதுச்சேரி.

அன்புடையீர்,

வணக்கம்,

பொருள்: மண்ணாடிப்பட்டு கொம்யூன் கட்சி கமிட்டி அலுவலகம் 21.9.2014 அன்று வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு அமைப்பைச் சார்ந்தவர்களால் தாக்கப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டது – சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்கக் கோருவது தொடர்பாக.

தோழர் பி.சீனிவாசராவ் அவர்களது நினைவு தினமான செப்டம்பர் 30-ல் தீண்டாமை கொடுமைக்கு எதிரான நேரடி நடவடிக்கையில் தீண்டாமை ஓழிப்பு முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கடந்த நான்கு வருடங்களாக ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுவை பிரதேசத்தில் பல கோயில்களில் தலித் மக்களின் ஆலயப் பிரவேசம் உட்பட பல்வேறு தீண்டாமை ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், இந்த வருடமும் தோழர் பி.சீனிவாசராவ் அவர்களது நினைவு தினமான செப்டம்பர் 30-ல் தீண்டாமை கொடுமைக்கு எதிரான நேரடி நடவடிக்கையில் ஈடுபடுவது என்று தீண்டாமை ஓழிப்பு முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் முடிவு செய்திருந்தது.

இதனையொட்டி, தீண்டாமை கொடுமைக்கு எதிரான ஆய்வு மேற்கொண்டபோது, கலிதீர்த்தாள்குப்பம் திரௌபதியம்மன் கோவிலில் வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பைச் சார்ந்த இளைஞர்கள் தலித் மக்களை ஆலயத்திற்குள் நுழைவதை தடுத்து நிறுத்தியுள்ளனர் என ஆய்வில் தெரிய வந்தது.

எனவே, செப்டம்பர் 30-ம் தேதி திரௌபதியம்மன் கோவிலில் தீண்டாமை கொடுமையை எதிர்க்கும் விதத்தில், தலித் மக்களை ஆலயத்திற்குள் அழைத்துச்செல்வது என்று தீண்டாமை ஓழிப்பு முன்னணி முடிவு செய்தது. அது குறித்து பத்திரிகை செய்தியும் வெளியிட்டது.

இதன் காரணமாக, 30-க்கும் மேற்பட்ட மேற்கண்ட அமைப்பைச் சார்ந்த இளைஞர்கள் மதகடிப்பட்டு அலுவலகத்தை நோக்கி வெறிக்கூச்சல் போட்டபடி ஓடி வந்து கட்சி அலுவலகத்தில் உள்ள பொருட்களை நாசப்படுத்தி அலுவலகத்தை தீயிட்டு கொளுத்தி உள்ளனர். அலுவலத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. மேற்கண்ட சாதிவெறித் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

உடனே, வெ.பெருமாள் மற்றும் தா.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இச்செய்தி கேட்டு அப்பகுதியில் உள்ள மக்கள் ஆத்திரத்துடன் அங்கு திரண்டனர். இத்கைய அராஜகச் செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் கைது செய்து சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்குமாறு அங்கு வந்த காவல்துறையிடம் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையும் உறுதி அளித்தது.

எனவே, மாண்புமிகு புதுவை முதல்வர் அவர்கள், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் உடனயாக கைது செய்யவும், அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உத்திரவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

அதே போல், செப்டம்பர் 30-ம் தேதி திரௌபதியம்மன் கோவிலில் தலித் மக்கள் ஆலயத்திற்குள் நுழைந்து வழிபாடு நடத்துவதை உறுதி செய்வதுடன் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.

தங்களன்புள்ள

ஜி.ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

5000 பட்டதாரி ஆசிரியர்கள், 1250 தமிழாசிரியர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் பணி வழங்கிட தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்

03.8.2021 பெறுநர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம்.   பொருள்:- கடந்த ...

Leave a Reply