புதுச்சேரி நியமன எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்! ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்!

6-7-2017

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!

ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, அம்மாநிலத்தின் நியமன எம்.எல்.ஏ பதவிகளுக்கு பாஜகவினர் பெயர்களை பரிந்துரை செய்திருப்பதுடன், அவர்களுக்கு பதவிப் பிரமாணமும் செய்து வைத்துள்ளார். இந்த நடவடிக்கை ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதாக அமைந்திருக்கிறது.

இதுவரையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நியமன எம்.எல்.ஏ-க்களை  நியமித்திட ஆளும் அமைச்சரவை பரிந்துரை செய்து அந்த பரிந்துரையை மத்திய உள்துறை அங்கீகரித்து நியமனம் செய்யப்பட்டு வந்தது.  தற்போது ஆளுநரே பாஜகவினரின் பெயர்களை பரிந்துரை செய்து அதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் கொடுத்து எம்.எல்.ஏ-க்கள் நியமிக்கப்பட்டிருப்பது ஜனநாயக விரோதமானது. எதேச்சதிகாரமான செயல்பாடாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஊழல் எதிர்ப்பாளராகவும், லோக்பாலுக்காக போராடுபவராகவும் தன்னை காட்டிக் கொண்ட புதுச்சேரி ஆளுநர்  மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. ஆளுநரை தங்கள் அரசியல் நோக்கத்திற்காக மத்திய பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது என்பதும் அம்பலமாகியுள்ளது.

எம்.எல்.ஏ-க்கள் நியமனத்தை ரத்து செய்ய வேண்டுமென்றும், துணை நிலை ஆளுநரை திரும்பப் பெற வேண்டுமென்றும் வலியுறுத்தி புதுச்சேரியில் இடதுசாரி, ஜனநாயக கட்சிகள் 8-7-2017 அன்று முழுஅடைப்புக்கு அறைகூவல் விடுத்துள்ளன. புதுச்சேரியில் நடைபெறவுள்ள முழுஅடைப்பு போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆதரவு தெரிவிப்பதோடு,  எம்.எல்.ஏ-க்கள் நியமனத்தை ரத்து செய்வதோடு, எதேச்சதிகாரமாக செயல்படும் ஆளுநரை திரும்பப் பெற வேண்டுமென்றும் மத்திய அரசை வலியுறுத்துகிறது.

– ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

 

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...