புதுதில்லியில் சிபிஐ(எம்) தலைமை அலுவலகத்தின் மீது மதவெறிக் கும்பல்கள் தாக்குதல் – கண்டனம் முழங்கிட அறைகூவல்

புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை பிஜேபி – ஆர்.எஸ்.எஸ். தூண்டுதலால் தில்லி காவல்துறையினர் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து கைது செய்து தேசவிரோதிகள் என குற்றம் சுமத்தி சிறையில் தள்ளிய சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி வன்மையாக கண்டனம் செய்தார். கைது செய்யப்பட்ட மாணவர்களை புனையப்பட்டுள்ள வழக்குகளிலிருந்து விடுவித்து அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டதை தொடர்ந்து மாணவர் பேரவைத் தலைவர் கன்னய்ய குமார் தவிர இதர 7 மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த மதவெறி சக்திகள் புதுதில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான ஏ.கே.ஜி. பவன் மீது 14.2.2016 இன்று 3 மணியளவில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் ஜனநாயக சக்திகளின் மீதும், இடதுசாரி இயக்கத்தின் மீதும் மதவெறி சக்திகள் தொடர்ந்து தொடுக்கும் தாக்குதலின் ஒரு பகுதியாகும். அரசியல் காழ்ப்புணர்வுடன் தொடுக்கப்பட்ட இந்த தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டனக் குரல் எழுப்புமாறு கட்சி அணிகளையும், ஜனநாயக சக்திகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

Check Also

பிரதமரே நடிக்காதீர்… செயல்படுங்கள்… கொரானாவை எதிர்கொள்ள…

நாடு முழுவதும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோவிட் பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் மரணங்களைத் தடுத்து நிறுத்தவும், மருத்துவ ...