புத்தகக் காவலர் ச.சீ. கண்ணன் மறைவு சிபிஐ(எம்) அஞ்சலி

அரிய நூல்களின் வேடந்தாங்கலாகச் செயல்பட்ட காரல் மார்க்ஸ் நூலகத்தை சென்னையில் பல்வேறு கடுமையான பிரச்சனைகளை எதிர்கொண்டு நடத்திவந்த, மூத்த மார்க்சிய சிந்தனையாளர் ச.சீ. கண்ணன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.

1920ல் தஞ்சை மாவட்டம் பாபநாசம் நகரில் ஆர். சீனிவாசன், லட்சுமி அம்மாள் மகனாகப் பிறந்தவர் கண்ணன். கோவை மாவட்டம் பீளமேட்டில் பள்ளிக் கல்வியும் கோவை நகரில் கல்லூரிப் படிப்பும் முடித்த அவர், 1940ல் பனாரஸ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியில் இணைந்து பொறியியலாளர் பட்டம் பெற்றார்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே விடுதலை இயக்கத்தில் பங்கேற்றதோடு, பொதுவுடைமைக் கோட்பாடுகளால்  ஈர்க்கப்பட்ட அவர் கம்யூனிஸ்ட் கட்சிப் பணிகளிலும் ஈடுபட்டார்.  தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து, 70-களின் இறுதியில் ஓய்வுபெற்ற பின்னர், நல்ல புத்தகங்களைத் தேடுகிறவர்களுக்காக நூலகம் தொடங்க முற்பட்டார். அந்த முயற்சியில் எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை துணையோடு அவர் சென்னை சிஐடி நகரில் 1980ல் காரல் மார்க்ஸ் நூலகத்தைத் தொடங்கினார்.

அன்றைய சோவியத் யூனியனிலிருந்து வெளியான நூல்கள் உள்பட, பல அரிதான நூல்கள் இந்த நூலகத்தில் இருந்தன. கிட்டத்தட்ட 9,000 புத்தகங்களும், 50க்கு மேற்பட்ட பத்திரிகைகளும் அந்த நூலகத்தில் பராமரிக்கப்பட்டன. ஆய்வு நோக்கங்களுக்காகவும், தனிப்பட்ட வாசிப்புக்காகவும் இந்த நூலகத்திற்கு வருவோருக்கு நூலகம் பெரிதும் உதவியது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெரும் மழை வெள்ளத்தில் சென்னை சிக்கியபோது, அரிய புத்தகங்கள் அழிந்துவிடக்கூடாது என்ற அக்கறையுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலக நூலகத்திற்கும் இதர சில நூலகங்களுக்கும் நூல்களை வழங்கினார்.

புத்தகங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்தோர் நெஞ்சங்களில் தோழர் ச.சீ. கண்ணன் என்றென்றும் வாழ்ந்திருப்பார். தோழர் ச.சீ. கண்ணன் பிரிவால் வாடும் அன்னாரது துணைவியார் மைதிலி, இளைய சகோதரரும் கல்வியாளரும் கல்வி உரிமைப் போராளியுமான ச.சீ. ராஜகோபாலன் மற்றும் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...