புயலால் பாதித்த மக்களை முதல்வர் சந்திக்காதது அநீதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள், “ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவ மக்களை போர்க்கால அடிப்படையில் மீட்கவும், அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை உள்ளடக்கி நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வலியுறுத்தியும்” மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்.


08.12.2017

பெறுநர்:
மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009.

அன்புடையீர்!, வணக்கம்.

சமீபத்தில் ஏற்பட்ட ஒகி புயலால் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் வரலாறு காணாத பாதிப்புக்குள்ளாகியுள்ளது. புயல் மாவட்டத்தையே புரட்டிப் போட்டுள்ளது. கடலில் மீன்பிடிக்கச் சென்ற பல நூறு மீனவர்களின் கதி இப்போது வரையில் என்னவாயிற்று தெரியவில்லை. மீனவ கிராமங்களும், மீனவ மக்களும் அச்சத்திலும், ஆழ்ந்த துயரத்திலும் மூழ்கியுள்ளனர்.

விவசாயம் முற்றாக அழிந்துள்ளது. வாழை, ரப்பர், தென்னை உள்ளிட்ட அனைத்தும் நாசமாகியுள்ளது. பல ஆயிரம் வீடுகள் இடிந்துள்ளன. நெல், மரவள்ளி உள்ளிட்ட அனைத்து சாகுபடிகளும் அழிந்து போயுள்ளன. மின் கம்பங்கள் சேதமடைந்து மின்விநியோகம் அறவே பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் மாவட்டமே இருளில் மூழ்கி மக்கள் அன்றாட வாழ்வு சிதைந்துள்ளன.

ஏற்கனவே சேதமடைந்த சாலைகள் மற்றும் மரங்கள் சாய்ந்துள்ளதால் போக்குவரத்து, தொலை தொடர்பு முழுமையான பாதிப்புக்குள்ளாகி மக்கள் துண்டிக்கப்பட்டுள்ளார்கள். மாவட்டம் முழுவதும் குடிநீர் விநியோகம் பாதித்துள்ளன. பால் மற்றும் உணவுப் பொருட்கள் பற்றாக்குறையால் மக்கள் சொல்லொணா கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளார்கள்.

பருவமழை காலங்களில் இயற்கை இடர்பாடுகள் குறித்து உரிய முன்னெச்சரிக்கை அறிவிப்புகள், இடர்பாடுகளை தடுத்திட உரிய முன் தயாரிப்புகள் எதுவும் அரசு சார்பில் மேற்கொள்ளப்படவில்லை. முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை மத்திய, மாநில அரசுகள் உரிய நேரத்தில் வெளியிட்டிருந்தால் மீனவர்கள் கடலுக்கு போவதை தவிர்த்திருப்பார்கள். மத்திய, மாநில அரசுகளின் தவறே இன்று சிலநூறு மீனவர்கள் காணாமல் போயிருப்பதும், சில ஆயிரம் படகுகள் சேதமடைந்து மீன்பிடி தொழிலே கேள்விக்குறியாக மாறியுள்ளது. இப்பெரும் நாசத்துக்கும், நட்டத்துக்கும் மத்திய, மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

கடந்த 30.11.2017 அன்று புயல் ஏற்பட்டு சுமார் ஒருவாரம் கடந்த பின்னரும், மீனவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண பணிகளை வழங்குவது, மருத்துவ முகாம்கள், குடிநீர், உணவு வழங்குவது போன்ற பணிகளை நிறைவேற்றுவதிலும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை.

வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ள இம்மாவட்டத்தில் இதுவரை அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, அவர்களது கருத்துக்களையும் கேட்டு நிவாரண பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

உயிர்தப்பி வந்த பல மீனவர்கள் நாட்கணக்கில் உடைந்த படகுகளின் பாகங்களை பிடித்து கொண்டிருந்ததாகவும் அதனை பயன்படுத்தி நீச்சல் அடித்து கரை சேர்ந்ததாகவும் கண்ணீர் மல்க கூறுகின்றனர். மேலும் கட்டுமர உபகரணங்களை கொண்டு நீச்சல் அடித்தவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் நீச்சல் அடிக்க முடியாமல் தங்கள் கண் முன்னாலே கடலில் மூழ்கியதாக கூறி கதறினர். போதிய ஹெலிகாப்டர் வசதி இருந்திருந்தால் இவ்விதம் தத்தளித்தவர்களை உயிருடன் மீட்டெடுக்க முடிந்திருக்கும். மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்து மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர். நூற்றுக்கணக்கான அரசு பள்ளி கூடங்கள் இடிந்தும், சேதப்பட்டும் உள்ளன.

எனவே தமிழக அரசு உடனடியாக கீழ்க்கண்ட கோரிக்கைகளை போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

 • உடனடியாக மாவட்ட அளவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி நிவாரணங்களுக்கு திட்டமிடுவதுடன், அனைத்து கட்சிகள், அனைத்து மக்கள் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்களை இணைத்து நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
 • கடலில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 • கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
 • சுமார் 2000 கோடி ரூபாய் அளவிற்கு மாவட்டத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
 • புயலால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களுக்கு கேரளா அரசு வழங்கியது போல் 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
 • மீனவர்கள், விவசாயிகள் வாங்கியுள்ள அரசு கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
 • பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் இதரர் தங்கள் முறையீடு மனுக்களை அந்தந்த கிராம அலுவலகங்களில் பெறவசதி செய்து கொடுக்க வேண்டும். அங்கிருந்து துறைவாரியாக பிரித்து கொள்ள வேண்டும்.
 • புயல் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்கள், மீனவர்கள், தோட்டத் தொழிலாளர்கள், செங்கல்சூளை தொழிலாளர்கள், முந்திரி தொழிலாளர்கள் மற்றும் இதரகூலி வேலை செய்பவர்களுக்கு மேலும் பல நாட்கள் வேலைவாய்ப்பு கிடைக்காத நிலை உள்ளது. எனவே குடும்பங்களுக்கு தலா 5,000/- ரூபாய் உடனடி வழங்க வேண்டும்.
 • துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகள் போர்கால அடிப்படையில் சரிசெய்ய போதிய உபகரணங்கள் தட்டுபாடின்றி வழங்க வேண்டும்.
 • வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பதிலாக புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும்.
 • மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை நிவாரண பணிக்கு பயன்படுத்த வேண்டும். அவர்களுடைய சம்பள பாக்கிகளை அவசரமாக வழங்க வேண்டும்.
 • மின்தடையை காரணம் காட்டி ரேசன் பொருட்கள் வழங்கவில்லை. ரேசன் பொருட்கள்  வழங்க ஏற்பாடு செய்திட வேண்டும்.
 • சேதமடைந்த செவ்வாழைக்கு தலா 500/- ரூபாயும், இதர வாழைகளுக்கு 300/- ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும். தென்னை மரத்திற்க்கு 5,000/- ரூபாயும், ரப்பர் மரத்திற்கு 2,000/- ரூபாயும் இழப்பீடு வழங்கிட வேண்டும். புதிய ரப்பர் நட தேவையான ரப்பர் தை, ரப்பர் போர்டு மூலம் இலவசமாக வழங்கிட வேண்டும். அதே போன்று சேதமடைந்த மா, பலா, தேக்கு, அயினி ஆகியவற்றிற்கும் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.
 • முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு ஒரு லட்சம் ரூபாயும், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு 50,000/- ரூபாயும் இழப்பீடு வழங்கிட வேண்டும்.
 • கூரை போன வீடுகளையும் சேதமடைந்த வீடுகள் பட்டியலில் இணைக்க வேண்டும். நீர்நிலைகளின் கரைகள் மற்றும் ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழைகளின் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கும் நஷ்ட ஈடு வழங்குவதுடன் மாற்றும் இடம் கண்டுபிடித்து பசுமை வீட, அடுக்கு மாடி வீடுகள் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
 • இடிந்து போன நூற்றுக்கணக்கான அரசு பள்ளிக் கூடங்களை கணக்கெடுத்து கட்டிடத்தை புனரமைக்க  வேண்டும்.
 • ஜெனரேட்டர் மூலம் மேல்நிலை தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகத்தை தடையின்றி செய்ய வேண்டும்.
 • வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைத்துள்ளவர்களின் வீடுகள் சரிசெய்யும் வரை முகாம்களில் தங்க வைப்பதுடன், போதிய வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும்.
 • குமரிமாவட்டத்தில் ஹெலிகாப்டர் தளம், அதிநவீன விசைபடகு வசதி திட்டத்தை விரைந்து அமலாக்கிட வேண்டும்.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...