புயல் – கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி (தானே) நேற்று 140 கி.மீ. வேகத்துடன் சூறைக்காற்று கடலூர், புதுச்சேரி பகுதியில் கரை கடந்துள்ளது. இந்த தானே புயல் – சூறைக்காற்று – கன மழையால் கடலூர், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை புதுவை உட்பட 33 பேர் பலியாகியுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மின்கம்பங்கள் அறுந்து விழுந்துள்ளன. மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளன. கடல்நீர் ஊருக்குள் புகுந்து கடலோரப் பகுதி வாழ் மக்களின் குடிசைகள் மற்றும் வீடுகள் இடிந்துள்ளன. கூரைகள் சூறைக்காற்றினால் பிய்த்தெறியப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.   கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சோனாகுப்பம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட ஏராளமான மீனவ கிராமங்களில் பல்லாயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன.

கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளில் கூரைகள் பெயர்ந்து விழுந்துள்ளன. நெய்வேலியில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் சரிந்துள்ளன. மின்கம்பங்கள் அறுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து சாலைகளும் சேதமடைந்துள்ளன. கடலூர், திருவாரூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ 1.50 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதர விவசாயப் பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளன. கடலூர் மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ ரூ. 500 கோடிக்கு மேற்பட்ட இழப்புகள் ஏற்பட்டுள்ளன. புதுச்சேரியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரூ. 500 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் கடலோரப்பகுதியில் வாழும் மீனவர்களின் வாழ்விடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.   புயல் – கனமழையால் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும்; மீனவ மக்களின் வீடுகள், படகு உள்ளிட்ட உடைமைகள் மற்றும்  கால்நடைகள், விவசாயக் கருவிகள் உள்ளிட்ட உடைமைகளை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம வழங்கிட வேண்டுமென்றும்; பயிரிழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு சேதத்தின் மதிப்பிற்கு ஏற்ப முழுமையான இழப்பிட்டுத் தொகை வழங்கிட வேண்டுமென்றும்; சாலைகள், அறுந்து விழுந்த மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டு, சுகாதாரம் பராமரிப்பு, குடிநீர் வழங்குவது, போக்குவரத்து உள்பட மக்களின் இயல்பு வாழ்க்கை விரைவில் திரும்ப போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

மேலும் வீடுகளை, உடைமைகளை இழந்து நிர்க்கதியாக நிற்கும் மக்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யும் வரை அவர்களுக்கு உணவு, தங்குமிடம் உள்ளிட்டவைகளை வழங்கிடவும் மார்க்சிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றகுழுத் தலைவர் அ. சவுந்தரராசன் எம்.எல்.ஏ., கே. பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., (சிதம்பரம் தொகுதி) மற்றும் கட்சியின் கடலூர் மாவட்டத் தலைவர்கள் நாளை (1.1.2012) கடலூர் மாவட்டத்தில் புயல் – கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து விபரம் அறிய உள்ளனர்.

Check Also

OBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்!

மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்.. மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு  வேலை வாய்ப்பு மற்றும் ...

Leave a Reply