புரட்டுகளுக்கு எதிரான போர் – சீத்தாராம் யெச்சூரி

சீத்தாராம் யெச்சூரி

தமிழாக்கம் : செ.சிவசுப்ரமணியன்

ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட கரசேவகர்களால் டிசம்பர் 6, 1992 அன்று நானூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, நவீன இந்தியாவின் மனசாட்சி உலுக்கப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்னால் பிஜேபியின் அன்றைய தலைவர் எல்.கே.அத்வானி அவர்களால் மேற்கொள்ளப்பட்ட ரதயாத்திரையானது நாடு முழுவதும் மதக் கலவரங்களையும் அதனைத் தொடர்ந்த மரணங்களையும், குழப்பங்களையும், ரத்த வெள்ளத்தையும் உருவாக்கியது. இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பின்பு பிறந்த என் தலைமுறைக்கு, இந்தியா மதரீதியாக இரண்டாகப் பிரிக்கப்பட்டது வரலாறாகும். இந்த நிகழ்ச்சிப் போக்குகளால் என்னுடைய தலைமுறை அதிர்ச்சியில் உறைந்து போனது. அதன் பின்னர் வந்த பத்தாண்டுகளில் இந்த மதவாத தாக்குதலானது உத்வேகமடைந்தது.

பாபர் மசூதி இடிப்பு என்பது ஏதோ ஒரு தனிப்பட்ட சம்பவமல்ல என்பது இப்போது உறுதியாகியுள்ளது. ராமஜென்மபூமி இயக்கத்திற்குப் பின்னால் நடந்துள்ளது இச்சம்பவம். இந்திய சுதந்திரத்திற்கு முன்பே ராமஜென்மபூமி இயக்கத்திற்கு ஒரு நெடும் வரலாறு உண்டு. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் விரிவான தத்துவார்த்த திட்டத்தின் ஒரு பகுதிதான் இது என்பது, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் குருஜி கோல்வால்கர் 1939 இல் எழுதிய ‘நாமும், நமது தேசியமும் – ஒரு விளக்கம்’ என்கின்ற சிறிய பிரசுரத்தைப் படித்தால் விளங்கும். பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர் 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. ராமஜென்மபூமி இயக்கமும், பாபர் மசூதி இடிப்பும், ஆர்எஸ்எஸ்ஸின் அரசியல் இயக்கமான பிஜேபியானது, மத்தியில் 1998 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு இட்டுச் சென்றன. (1996 ஆம் ஆண்டு 13 நாட்களே ஆட்சியில் இருந்த பிஜேபி அரசினைத் தவிர்த்து). அதன் பின்னர் மதரீதியிலான திரட்டலானது முன்னைவிட இன்னும் கூர்மை பெற்றுள்ளது. 2002 இல் அது உச்சத்தை அடைந்து குஜராத்தில் மதப் படுகொலைகளுக்கு இட்டுச் சென்றது. அது பிஜேபிக்கு குஜராத் மாநிலத்தின் ஆட்சியதிகாரத்திற்கு வழிவகுத்துத் தந்தது.

இன்றளவிலும் பிஜேபி அரசு அங்கு அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறது. 2014 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபியானது தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்துள்ளது. அவ்வாறு அது தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்ததானது புதிய வடிவங்களிலும், மூர்க்கத்தனத்தோடும் மதரீதியான திரட்டல்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்றுள்ளது. அதைத்தான் பசுப் பாதுகாப்பு என்கின்ற பெயரில் தனி ராணுவம் போல மதவாத அமைப்புகள் செயல்படுவதில் பார்க்க முடிகிறது. நல்லொழுக்க நெறிமுறைகளை போதிக்கும் காவல்துறை போன்று சில குழுக்கள், அப்பாவி மக்களையும், குறிப்பாக தலித்துகளையும், முஸ்லிம்களையும் தாக்குகின்றன.

பிஜேபி அரசு ஆட்சியில் இருப்பதனாலும், அதனுடைய ஆதரவோடு ஆர்எஸ்எஸ் அமைப்பு செயல்படுவதினாலுமே இதுபோன்ற கும்பல்களின் அராஜக நடவடிக்கைகளையும், அவை நாளுக்கு நாள் பெருகி வருவதையும் காண முடிகிறது. உண்மையில் இன்று நடப்பது என்னவென்றால், மதம், மொழி, கலாச்சாரம், இனம், வாழும் நிலப்பகுதி – என பரந்துபட்ட பன்முகத்தன்மை கொண்ட இந்திய தேசத்தின் மீது நடைபெறுகின்ற இழிவான தாக்குதலாகும். இந்திய தேசத்தினுடைய பன்முகத்தன்மையை ஒருங்கிணைக்கும் அடித்தளமாக எது விளங்குகிறதோ அதனை வலுப்படுத்துவதன் மூலமே இந்தியாவின் ஒற்றுமையையும், கட்டமைப்பையும் வலுப்படுத்த முடியும்.

பிஜேபியும், ஆர்எஸ்எஸ்சும் அமல்படுத்த முயற்சிக்கும் ஒற்றுமைத் தன்மை என்பது கடுமையான சமூகப் பிளவிற்கே இட்டுச் செல்லும். அது இந்தியக் குடியரசின் மாண்புகளுக்கே ஆபத்தானதாக அமையும். இப்படி ஒரு ஆபத்தை விளைவிக்கக் கூடிய தாக்குதலை இவர்களால் இந்த சமூகத்தின் மீது தொடுக்க முடியும் என்கின்ற சூழ்நிலை இருப்பதே ஒரு ஆழமான ஆய்விற்கு உட்படுத்த வேண்டிய ஒன்றாகும். நூறாண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்திய மக்கள் எவ்வாறு போராடினார்களோ அதைப் போன்றதொரு போராட்டம் இப்போது தேவைப்படுகிறது.

கருத்துக்களின் மோதல்

இந்தியா என்கின்ற தேசத்தைப் பற்றிய கருத்துருவாக்கமே இந்திய மக்களின் போராட்டத்தின் விளைவாக வந்ததுதான். 1920களில் சுதந்திர இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என்கின்ற 3 வகைப்பட்ட கருத்துக்களின் மோதலில்தான் அது உருவானது. சுதந்திர இந்தியாவானது, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக இருக்க வேண்டும் என அன்றைக்கு இருந்த காங்கிரஸ் வாதிட்டது. இடதுசாரிகள், இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டதோடு, சோசலிச அமைப்பில் எவ்வாறு ஒவ்வொரு தனிநபரின் சமூக-பொருளாதார சுதந்திரமானது உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளதோ, அதைப் போன்று அரசியல் சுதந்திரமானது, ஒவ்வொரு தனி நபரின் சமூக – பொருளாதார சுதந்திரத்திற்கு இட்டுச் செல்வதாக இருக்க வேண்டும் என வாதிட்டனர்.

இந்த இரண்டு கருத்துக்களுக்கும் எதிராக மூன்றாவதாக ஒரு கருத்து வாதிடப்பட்டது. அது சுதந்திர இந்தியாவனது, மக்கள் பின்பற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதாகும். இந்தக் கருத்தோட்டமானது இரண்டு கருத்து வெளிப்பாடுகளை உள்ளடக்கியதாக இருந்தது. ஒன்று முஸ்லிம் லீக் அமைக்க விரும்பும் இஸ்லாமிய தேசம். இன்னொன்று ஆர்எஸ்எஸ் அமைக்க விரும்பும் இந்து ராஷ்டிரம்.

முஸ்லிம் லீக்கின் விருப்பம் இந்திய நாடு சுதந்திரத்தையொட்டி இரண்டாகப் பிளவுபட்டபோது நிறைவேறியது. அது நிறைவேறுவதற்கு பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆட்சியாளர்களும் அத்தனை உதவிகளையும் செய்தனர். அதன் விளைவுகளை இன்றுவரை நாம் சந்தித்து வருகிறோம். ஆர்எஸ்எஸ்ஸின் நோக்கம் சுதந்திரத்தின் போது நிறைவேறவில்லை. ஆகையால் அது இன்றைய நவீன இந்தியாவை சற்றும் சகிப்புத் தன்மையற்ற இந்து தேசமாக மாற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இன்றைய இந்தியாவில் கருத்தியல் தளத்தில் நடைபெறக் கூடிய மோதல்களும், அரசியல் முரண்பாடுகளும், மேற் சொன்ன மூன்று கருத்து மோதல்களின் தொடர்ச்சியே ஆகும். இந்திய சுதந்திர இயக்கமானது ஆர்எஸ்எஸ்ஸின் கருத்தை ஏற்க மறுத்தது.

ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசையே அது அமைத்தது. நாடு பிளவுண்ட பின்னர், மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னணியில் ஆர்எஸ்எஸ் இயக்கமானது சுதந்திர இந்தியாவின் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது. இந்தியாவின் துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்த சர்தார் வல்லபாய் படேல்தான் அத்தடை உத்தரவைப் பிறப்பித்தார். அதன் பின்னர் ஆர்எஸ்எஸ் இயக்கமானது, தான் அரசியலிலிருந்து விலகியிருப்பேனென்றும், ஒரு கலாச்சாரஅமைப்பாக மட்டும் செயல்படுவேனென்றும், ஆகவே தன் மீதுள்ள தடையை நீக்குமாறும் அரசிடம் கோரியபோது, துரதிர்ஷ்டவசமாக, ஆர்எஸ்எஸ்சின் பாசிச இந்து ராஷ்டிரா அபாயமானது விலகிவிட்டதாக அப்பொழுது இந்திய தேசம் ஒரு முடிவிற்கு வந்தது. ஆனால் ஆர்எஸ்எஸ் அன்று கூறியது போல தன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்பதை தேசம் இப்போது தெள்ளத் தெளிவாக உணர்கிறது.

இந்துத்துவா என்றால் என்ன?

‘இந்துத்துவா’ என்கின்ற வார்த்தை விநாயக்தாமோதர் சாவர்க்கர் அவர்களால் 1923 இல் அவரால் வெளியிடப்பட்ட இந்துத்துவா என்கின்ற பிரசுரத்தில்தான் முதன் முறையாகப் பயன்படுத்தப்பட்டது. சாவர்க்கர் இந்துத்துவாவை ஒரு அரசியல் திட்டமென்றே வர்ணித்தார். அதற்கும் இந்துமதச் சடங்குகளுக்கும் சம்பந்தமில்லை எனக் கூறினார். இந்த அரசியல் திட்டத்தை அடைவதற்காக, ‘‘அரசியலை இந்துமதப்படுத்துங்கள். இந்து தேசத்தை ராணுவமயமாக்குங்கள்’’ எனக் கூறினார். டிசம்பர் 1939 இல் இந்து மகாசபையின் கூட்டத்தில் பேசுகையில், இந்தியாவில் இரண்டு தேசங்கள்தான் உள்ளன. ஒன்று இந்துக்கள். மற்றொன்று முஸ்லிம்கள் என முழக்கம் செய்தவர் சாவர்க்கர்தான். 1941இல் முகமது அலி ஜின்னா அவர்கள் இரு தேசங்கள் என்கின்ற கருத்தை வைப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே சாவர்க்கர் இவ்வாறு கூறியுள்ளார்.

பிரிட்டிஷ் அரசின் விசுவாசிகள்

ஆர்எஸ்எஸ் இயக்கமானது பல வரலாற்று உண்மைகளை மறைக்க முயற்சிக்கின்றது. அந்தமானின் செல்லுலார் சிறையிலிருந்து விடுவிக்குமாறு கோரி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் கொடுத்த சம்பவமும் அதில் ஒன்றாகும். நவம்பர் 14, 1913 அன்று பிரிட்டிஷ் அரசிடம் கொடுத்த கருணை மனுவில் சாவர்க்கர் கீழ்வருமாறு வேண்டுகோள் விடுக்கின்றார் :-

‘‘1906-07 இல் நிலவிய உணர்ச்சிமயமான, நம்பிக்கையற்ற சூழலால் ஏமாற்றப்பட்டு, அமைதியான, வளர்ச்சிக்கான பாதையிலிருந்து எந்த ஒரு நல்ல இதயம் படைத்த மனிதனும், நல்ல இந்திய தேசத்தை விரும்பும் எந்த ஒரு மனிதனும், விலகிச் சென்று முட்கள் நிறைந்த பாதைக்குச் செல்லமாட்டான். ஆகையால் அரசானது (பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசானது) பெருந்தன்மையுடன், கருணையுடன் என்னை சிறையிலிருந்து விடுவிக்குமானால், நான் அரசின் (பிரிட்டிஷ் அரசின்) அரசியல் சட்டத்தை உயர்த்திப் பிடிப்பவனாக இருப்பேன். பிரிட்டிஷ் அரசின் விசுவாசத்திற்கு உரியவனாக இருப்பேன்.’ சிறையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோருகின்றபோது, பிரிட்டிஷ் அரசின் விசுவாசத்திற்கு உரியவனாக இருப்பேன் என அவர் உத்தரவாதம் செய்கின்றார்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு சற்றும் இரக்கமின்றி பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டு வந்த காலகட்டத்தில்தான் சாவர்க்கர் இவ்வாறு உத்தரவாதம் கொடுக்கின்றார். 1857 இல் நடைபெற்ற முதல் சுதந்திரப் போருக்குப் பின்னர் பிரிட்டிஷ் அரசு பிரித்தாளும் கொள்கையை கச்சிதமாகக் கையாண்டது. இந்தியாவின் பல்வேறு மதங்களை, மொழிகளை, இனங்களைச் சார்ந்தவர்களை தங்களின் ஆட்சிக்கு எதிராக இனியும் ஒன்றுபட அனுமதித்தால், தங்களால் தொடர்ந்து இந்தியாவில் ஆட்சி செய்ய இயலாது என்ற முடிவிற்கு பிரிட்டிஷ் அரசு வந்துவிட்டது. 1857-59 இல் நடைபெற்ற போராட்டங்களின்போது இந்தியாவின் மத்தியப் பகுதியில் வாழ்ந்த சமகால எழுத்தாளர் தாமஸ் லவ் 1960 இல் பின்வருமாறு எழுதுகிறார்: ‘ராஜபுத்திரர்களும், பிராமணர்களும், முஸ்லிம்களும் இந்த நோக்கத்திற்காக (பிரிட்டிஷ் ஏகாதிபத்திற்கு எதிராக) ஒன்று சேர்ந்தனர்.

பசுவைக் கொல்பவர்களும், பசுவை வழிபடுபவர்களும், பன்றியை வெறுப்பவர்களும், பன்றியைச் சாப்பிடுபவர்களும் ஒன்று சேர்ந்து கிளர்ச்சி செய்தனர்.’ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தோற்றுவித்த டாக்டர் கே.பி.ஹெட்கேவரின் குருவான டாக்டர் பி.எஸ்.மூஞ்சே இக்கால கட்டத்தில் முசோலினியைச் சந்திப்பதற்காக இத்தாலிக்குச் செல்கின்றார். 1931, மார்ச் 19 அன்று அவர்கள் இருவருக்கும் இடையிலான சந்திப்பு நடக்கின்றது. இத்தாலியின் பாசிசமானது எவ்விதம் அந்நாட்டு இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கின்றது என்பதனை முசோலினியைச் சந்தித்த பின்னர் மிகவும் புளகாங்கிதத்தோடும், மிகுந்த மரியாதையுடனும் மூஞ்சே அவர்கள் தன்னுடைய டைரியில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்குத் திரும்பியவுடன், 1935 இல் இந்து மத்திய ராணுவப் பயிற்சி மையம் என்ற ஒன்றை நாசிக் நகரில் நிறுவுகின்றார்.

இம்மையமானது 1937 இல் நிறுவப்பட்ட போன்சாலா ராணுவப் பள்ளிக்கு முன்னோடியாகும். பின்னாட்களில் மாலேகான், ஆஜ்மீர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பின்னர் நடைபெற்ற புலன் விசாரணைக்குப் பின்னர் இவைகளெல்லாம் தீவிரவாத இடங்கள் என கண்காணிப்பின் கீழ்க் கொண்டு வரப்பட்டன. எப்பொழுதெல்லாம் அவர்களைச் சார்ந்தவர்கள் தீவிரவாத நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்படுகிறார்களோ, அப்பொழுதெல்லாம் ஆர்எஸ்எஸ் இயக்கமானது, அவ்வாறு கைதாகிறவர்களெல்லாம் தங்கள் இயக்கத்தைச் சார்ந்தவர்களல்ல எனச் சொல்லிவிடும். உதாரணமாக, நாதுராம் கோட்சே, காந்தியைக் கொன்றபோது, அவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சார்ந்தவரல்ல எனச் சொன்னது. இதை அவருடைய சகோதரர் கோபால் கோட்சேயே கடுமையாக மறுக்கிறார்:

‘சகோதரர்கள் நாங்கள் அனைவருமே ஆர்எஸ்எஸ்சில் இருந்தோம். (நாதுராம், தத்தரேயா, நான் மற்றும் கோவிந்த்) நாங்கள் அனைவருமே வீட்டில் வளர்ந்தோம் என்று சொல்வதைவிட ஆர்எஸ்எஸ்சில் வளர்ந்தோம் என்றே சொல்லலாம். அது எங்களின் குடும்பம் போன்றது. நாதுராம் கோட்சே ஆர்எஸ்எஸ்சின் அறிவுத் தளத்தில் (Intellectual Worker) பணி செய்தார். காந்தி இறந்த பின்னணியில், கோல்வால்கரும், ஆர்எஸ்எஸ் இயக்கமும் கடுமையான நெருக்கடியில் இருந்த பின்னணியில் ஆர்எஸ்எஸ்சிலிருந்து வெளியேறுவதாகச் சொன்னார். ஆனால் அவர் ஆர்எஸ்எஸ்சை விட்டு வெளியேறவில்லை’’ – இதுதான் கோபால் கோட்சேயின் வாக்குமூலம். இங்கு விஷயம் என்னவென்றால், அவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினராக இருந்தாரா, இல்லையா என்பதல்ல.

விஷம் கக்கும் தத்துவார்த்தக் கொள்கைகளை ஆர்எஸ்எஸ் கையிலெடுக்கிறது என்பதுதான். அது வன்முறையை, தீவிரவாதத்தை வளர்க்கிறது என்பதுதான். சர்தார் படேல், ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடை செய்கின்றபோது ‘ஆர்எஸ்எஸ்சின் நடவடிக்கைகளால் தூண்டிவிடப்படும் வன்முறைக் கலாச்சாரம்’ என்றுதான் குறிப்பிட்டார். இது அப்பாவி மக்களின் உயிரைப் பறித்தது. அதனை இன்று பசுப் பாதுகாப்பு குழுக்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் காண முடியும். இவையெல்லாமே மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசான இந்தியாவை, ஆர்எஸ்எஸ்ஸின் கனவுத் திட்டமான பாசிச, சகிப்புத் தன்மையற்ற ஒரு இந்து ராஷ்டிரமாக மாற்ற முயற்சிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியே.

ஆரியர் என்ற மாயை

சமீபத்திய அறிவியல் ஆய்வுகள், ஆரியர்கள், 3500லிருந்து 4000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கு குடிபெயர்ந்து வந்தவர்கள் என்பதை உணர்த்துகிறது. இன்னும் 17.5 சதவீத இந்திய ஆண்கள் R1a ஹாப்லோ வகையைச் சேர்ந்த Y டிஎன்ஏ உயிரணு வகையைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்த ஆய்வு சொல்கின்றது. இவை 4000லிருந்து 4500 வருடங்களுக்கு முந்தைய வகையைச் சேர்ந்தவை என்றும் ஆய்வுகள் சொல்கின்றன. (ஜூன் 16, 2017 அன்று வெளிவந்த ஆங்கில இந்து பத்திரிகையில் இது குறித்த கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது.) ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள் எனும் சாவர்க்கர் மற்றும் கோல்வால்கரின் வாதங்களை இவை தவிடுபொடியாக்குகின்றன.

இருவருமே ஆரியர்கள் அனைவரும் இந்துக்கள் என்றும், இந்துக்களே இந்த நிலப்பரப்பின் பூர்வகுடிகள் என்றும், மற்றவர்களெல்லாம் அந்நியரே என்றும் வாதிட்டனர். சாவர்க்கர் இன்னும் ஒருபடி மேலே சென்று இந்துக்கள் அல்லாதவர்களெல்லாம் இந்தியாவை தங்களுடைய தாய் மண்ணாகவோ, தந்தை மண்ணாகவோ ஏன் கர்மபூமியாகவோ கூடக் கருதலாம். ஆனால் இந்தியா அவர்களுடைய புண்ணிய பூமி கிடையாது. ஆகவே அவர்களெல்லாம் அந்நியர்கள்தான் எனக் கூறினார். ஆனால் சமீபத்திய ஆய்வுகளெல்லாம் ஆரியர்கள் மத்திய ஆசியாவின் காஸ்பியன் கடல் பகுதியிலிருந்து, ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள் என்று கண்டுபிடித்திருப்பது, ஆர்எஸ்எஸ்ஸின் அடிப்படை வாதங்களை நொறுங்கச் செய்திடும் ஒன்றாகும்.

உண்மையை மறைக்கும் உணர்ச்சிமிகு வார்த்தைகள்

ஆகையால் சாவர்க்கர் சொன்னதைப் போல, இந்துத்துவா என்பது அரசியல் திட்டமே. அதற்கு அறிவியல்ப்பூர்வமான, வரலாற்று ரீதியான ஆதாரங்கள் ஏதும் கிடையாது. இந்த அரசியல்தான் இன்று இந்தியாவின் மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசின் மாண்புகளின் அடிப்படையைத் தகர்க்க முயல்கின்றது. அந்த இடத்தில் சகிப்புத்தன்மையற்ற பாசிச இந்து ராஷ்டிரத்தை நிறுவ முயற்சிக்கின்றது. யதார்த்த சூழ்நிலைகளைவிட, வெறும் உணர்ச்சிப்பூர்வமான பேச்சுக்களே உண்மையென நம்ப வைக்கப்படுகிற சூழ்நிலையில்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பானது தன்னுடைய பாசிசக் கோட்பாட்டினை அமல்படுத்த முயற்சிக்கின்றது. ஆக்ஸ்போர்டு அகராதியானது, Post Truth என்கின்ற இந்த வார்த்தையை ‘2016 ஆம் ஆண்டின் வார்த்தை’ என அறிவித்துள்ளது. Post Truth என்றால் என்னவென கீழ்க்கண்டவாறு ஆக்ஸ்போர்டு அகராதி விவரிக்கின்றது:‘உண்மை நிலைமைகளைவிட, உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகளும், செல்வாக்குடைய தனிநபர்களின் பேச்சுக்களுமே ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு கருத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவது’ என அது விளக்குகிறது.

‘இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியா வளமான நாடாக வளர்ச்சியுறுகிறது. அதன் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவர்கள் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளே’ என உணர்ச்சிப்பூர்வமான அறிக்கைகளாலும், செல்வாக்கு செலுத்தும் தனிநபர்களாலும் நம்பவைக்கப்படுகிறது. மதரீதியான திரட்டல்களாலும், பசுப் பாதுகாப்புக் குழுக்கள் என்ற பெயரிலும் ஆர்எஸ்எஸ்ஸின் தனி ராணுவம் போன்ற குழுக்கள் தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் மீது நடத்தும் தாக்குதல்களால் இவை இன்னும் அதிகரித்துள்ளன. ஜூன் 29 அன்று சபர்மதி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவில் பேசுகையில் ‘பசுவைப் பாதுகாக்கின்றோம் என்கின்ற பெயரில் மனிதர்கள் கொல்லப்படுவதை காந்தி உயிரோடு இருந்திருந்தால் ஏற்றுக் கொண்டிருக்கமாட்டார்’ என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். உண்மைதான். காந்தி அதனை ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்ல. அருவருக்கத்தக்கது எனவும் கூறியிருப்பார்.

ஆனால் பிரதமரும், அவரது அரசும் இதனை எப்படிப் பார்க்கிறார்கள்? இதுநாள் வரை அரசோ, ஆர்எஸ்எஸ் இயக்கமோ, பிஜேபியோ இந்தச் சம்பவங்களைக் கண்டிக்கவில்லை. மத்தியிலுள்ள பிஜேபி அரசோ, மாநிலங்களில் ஆட்சியிலுள்ள பிஜேபி அரசுகளோ இத்தகைய கொலைகளைச் செய்யும் குற்றவாளிகள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து சட்டத்தை நிலைநிறுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஹிட்லரின் கறுப்புச் சட்டைகள் என்றும், முசோலினியின் பிரௌன் சட்டைகள் என்றும் வர்ணிக்கப்பட்ட இனப்படுகொலை செய்யும் குழுக்களை நினைவூட்டுகின்ற இத்தகைய தனி ராணுவ அமைப்புகள், இந்திய மக்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதம் செய்துள்ள வாழ்விற்கும், சுதந்திரத்திற்குமான அடிப்படை உரிமைகளை மறுக்கின்றன.

ஆனாலும் கூட, மத்தியில் அதிகாரத்திலுள்ள பிஜேபி அரசோ, சட்டத்தைப் பயன்படுத்தி இத்தகைய செயல்களைத் தடுத்து நிறுத்தி குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், ஞடிளவ கூசரவா என்பது ஒன்றும் பழைய வரலாற்றுக் காலங்களில் இல்லாத ஒன்றல்ல. ஹிட்லரின் கொள்கைப் பரப்பு அமைச்சரான கோயபல்ஸ் இவ்வாறு கூறுவார்: ‘ஒரு பெரிய பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லுங்கள். அது உண்மையாகிவிடும்.’ இதுதான் நாஜிக்களின் பிரச்சாரத்தின் மையமாக இருந்தது. இப்போது ஆர்எஸ்எஸ்சின் இந்துத்துவா பிரச்சாரத்தின் முதுகெலும்பாக அது உள்ளது.

உண்மையை மறைக்கும் உணர்ச்சிமிகு வார்த்தைகள் Post Truth என்பது மக்களை ஒரு கற்பனையான உலகில், உணர்ச்சிகரமான பேச்சுக்களை மையமாகக் கொண்ட சூழ்நிலையிலே வாழ்வதற்கு இட்டுச் செல்கின்றது. அவை முற்றிலும் யதார்த்த உலகின் துயரங்களை நம்மை மறக்க வைத்துவிடும்.மக்களின் அன்றாட வாழ்வின் பிரச்சனைகளையும், வர்க்கப் போராட்டத்தினையும் மையப்படுத்தி இதற்கு எதிராகப் போராட வேண்டும்.இப்போராட்டத்தினை வலுப்படுத்த வேண்டுமெனில், விரிவுபடுத்த வேண்டுமெனில், 1939இல் கோல்வால்கர் முன்வைத்த ஆர்எஸ்எஸ்ஸினுடைய பாசிசத் திட்டத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி: ஜூலை 21, 2017 பிரண்ட்லைன்

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...