பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைக் குறைத்திடுக மக்களுக்கு நிவாரணம் அளித்திடுக இடதுசாரிக் கட்சிகள் அறிக்கை

புதுதில்லி, ஜூன் 23


மோடி அரசாங்கம், பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைத்து, மக்களுக்கு நிவாரணம் அளித்திட வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் கோரியுள்ளன.


இது தொடர்பாக திங்கள் அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, புரட்சி சோசலிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் தேவ பிரதா பிஸ்வாஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மோடி அரசாங்கம், ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றாலும், அதனைத்தொடர்ந்து எவ்விதத் திட்டமிடலுமின்றி தான்தோன்றித்தனமாகவும், முற்றிலும் தவறான முறையிலும் சமூக முடக்கத்தை அறிவித்ததன் காரணமாகவும் மக்களின் வாழ்வாதாரங்களை கருணையற்ற முறையில் அழித்திருக்கிறது.

இப்போது கடந்த பதினைந்து நாட்களாக, ஒவ்வொரு நாளும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைத் தொடர்ந்து உயர்த்திக்கொண்டே வருகிறது. பெட்ரோல் லிட்டருக்கு 7.97 ரூபாயும், டீசல் 8.88 ரூபாயும் உயர்த்தி இருக்கிறது. இது கோடானுகோடி மக்களின் வாழ்க்கையை மேலும் முடமாக்கிக் கொண்டிருக்கிறது.

பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரிகளைக் கூர்மையாகக் குறைத்திட வேண்டும் என்று இடதுசாரிக்கட்சிகள் கோருகின்றன. உலகத்தில் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இங்கே விலைகள் உயர்த்தப்பட்டிருக்கின்றன. இவ்விலை உயர்வுகளை ரத்து செய்து, மக்களுக்கு நிவாரணம் அளித்திட வேண்டும் என்று கோருகின்றன.

எண்ணெய் சந்தை நிறுவனங்கள், மக்களின் வாழ்க்கையைக் காவு வாங்கிக்கொண்டு, கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன. அதே சமயத்தில் மத்திய அரசாங்கமும் அதிக வருவாய்கள் ஈட்டிக்கொண்டிருக்கின்றன. இவை கிரிமினல்தனமாகும்.

மக்களின் ஜீவாதாரப் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, மோடி அரசாங்கம், மக்கள் மீது மேலும் மேலும் தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தப்பின்னணியில், இடதுசாரிக் கட்சிகள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து அகில இந்திய எதிர்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்ள முடிவு செய்திருக்கின்றன.


கோரிக்கைகள்:

  1. பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகளைரத்து செய்து, விலைகளைக் குறைத்திடு.
  2. வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு மாதத்திற்கு 7500 ரூபாய் வீதம் அடுத்த ஆறு மாதங்களுக்கு ரொக்க மாற்று உடனடியாகச் செய்திடு.
  3. தேவைப்படும் அனைவருக்கும், நபருக்கு தலா 10 கிலோ உணவு தான்யங்கள் வீதம் வழங்கிடு.
    மோடி அரசாங்கம் நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்க முடிவு செய்திருப்பதற்கு எதிராக, நிலச்சரிச் சுரங்கத் தொழிலாளர்கள் வரும் ஜூலை 2-4 தேதிகளில் நடத்தவுள்ள வேலை நிறுத்தத்திற்கு, இடதுசாரிக் கட்சிகள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றன.
    மத்தியத் தொழிற்சங்கங்கள் வரும் 2020 ஜூலை 3 அன்று தங்களின் கோரிக்கை சாசனத்தின்மீது நடத்தவிருக்கும் அகில இந்திய எதிர்ப்பு அறைகூவலுக்கும், இடதுசாரிக் கட்சிகள் தங்கள் ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்துக்கொள்கின்றன.

இடதுசாரிக் கட்சிகள், மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசனைகள் மேற்கொண்டு, இந்த அகில இந்திய எதிர்ப்புக் கிளர்ச்சிக்கான தேதியை அறிவித்திடும்.
இவ்வாறு இடதுசாரிக் கட்சிகள் அறிக்கையில் தெரிவித்துள்ளன.

Check Also

சட்டமன்றம் – நாடாளுமன்றம் துவங்கும் நாள் மக்கள் கோரிக்கைகளை வற்புறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: இடதுசாரி கட்சிகள் தீர்மானம்!

செப்டம்பர் 6 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், கட்சி (மார்க்சிஸ்ட் – ...