பெட்ரோல் டீசல் மீது மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரி உயர்வுக்கு கண்டனம்

பெட்ரோல் டீசல் மீது மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரி உயர்வு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

4.3.2017 நள்ளிரவிலிருந்து பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை தமிழக அரசு கடுமையாக உயர்த்தியிருக்கிறது. பெட்ரோலுக்கு 27 சதவிகிதமாக இருந்த வரி 34 சதவிகிதமாகவும், டீசல் 21.43 சதவிகிதமாக இருந்தது தற்போது 25 சதவிகிதமாகவும்  உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.78, டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.76 அளவுக்கு உயர்ந்துள்ளன.

விலையேற்றம் பற்றிய தகவல் எஸ்.எம்.எஸ் வழியாக தெரிவிக்கப்பட்டதாகவும், உடனடியாக விலையேற்றம் அமலுக்கு வந்திருப்பதாகவும் பெட்ரோல்/டீசல் விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர். பட்ஜெட் கூட்டத்தொடர் சில நாட்களில் நடக்க உள்ள சூழலில், தமிழக மக்களை பாதிக்கக் கூடிய வரி உயர்வை எதேச்சதிகாரமான முறையில் மாநில அரசு மேற்கொண்டிருப்பதை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்புகள் எல்லாப் பொருட்களின் விலையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி, ஏழை, எளிய மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். சதவிகித அளவில் செய்யப்பட்டுள்ள உயர்வானது இனி வரும் காலங்களில் செய்யப்படும் ஒவ்வொரு உயர்விலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

நூறாண்டு காணாத வறட்சியில் மாநில மக்கள் தவிக்கின்றனர்.  ரேசன் முறையில் மக்களுக்கு கிடைத்து வந்த சமையல் எண்ணெய், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவை நிறுத்தப்பட்டு விட்டது. கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இப்பின்னணியில் வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல் மாநில அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தி உள்ளது.

மக்களைப் பாதிக்கும் பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வைக் கை விட வேண்மென்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

மனுவாதிகளின் ஆதிக்க செயலை முறியடித்த அய்யா வைகுண்டரின் 189-வது பிறந்த தினம்…

அய்யா வைகுண்டரின் 189வது பிறந்த தின விழாவை கொண்டாடி வரும் அய்யாவின் அன்புக்கொடி மக்களுக்கு இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ...