பெட்ரோல் – டீசல் விலை உயர்வு: எதிர்ப்பு இயக்கம் நடத்துக! சிபிஐ(எம்) அறைகூவல்!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்கசிஸ்ட்)-யின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி:

இரண்டு வாரங்களுக்குள் மறுபடியும் பெட்ரோல் – டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பதற்கு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் அரசியல் தலைமைக்குழு கடுமையான கண்டத்தை தெரிவிக்கிறது; 1 லிட்டருக்கு பெட்ரோல் விலை ரூ.2.50ம், டீசல் ரூ.2.26 என்றும் உயர்த்தப்பட்டிருக்கிறது. மோடி அரசு பதவியேற்றதிலிருந்து இதுவரை டீசல் விலை 19 முறையும், பெட்ரோல் விலை 16 முறையும் உயர்த்தப்பட்டுள்ளது.

மோடி அரசு தனது இரண்டாண்டு கால ஆட்சியில் மிகவும் ஆடம்பரமான முறையில் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் மக்கள் மீது இந்த சுமை ஏற்றப்பட்டிருக்கிறது. இந்த வீண் செலவினை சுமக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு மக்கள் உள்ளாகியுள்ளனர்.

விவசாய நெருக்கடி மிகவும் ஆழமாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் பெரிய அளவில் திணிக்கப்படும் டீசல் விலை உயர்வு அந்த நெருக்கடியினை மிகவும் மோசமான நிலைக்கு இட்டுச் செல்லும், ஆழ்துளை கிணறுகளிலிருந்து நிலத்தடி நீரை வெளியே கொண்டு வர டீசல் மிகவும் அடிப்படைத் தேவையான எரிபொருள் ஆகும். நாட்டின் பெரும்பகுதி வறட்சியின் தாக்கத்தாலும், குடிநீர் கிடைக்காமலும் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் இந்த உயர்வு மக்களின் வாழ்நிலையினை மிகவும் மோசமானதாக மாற்றிவிடும்.

பெட்ரோலியப்  பொருட்களின் மீது தொடர்ந்து விதிக்கப்படும் தீர்வை மற்றும் வரிகள் மூலம் அரசு நிறைய லாபம் ஈட்டிக் கொண்டு வருகிறது. பெட்ரோலியப் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்படும் பொழுது வரிகள் ஏதுமிருக்காது என நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. எண்ணெய் நிறுவனங்கள் 1 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25.31 செலுத்தும்போது, மக்கள் அதே 1 லிட்டருக்கு ரூ.65.60 கொடுக்க வேண்டியுள்ளது. அந்த இரண்டு விலைகளுக்கிடையே உள்ள வித்தியாசம் அரசுக்கு வருமானமாக போய் சேருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 5 முறை தீர்வை வரிகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டிருக்கின்றன. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. செல்வந்தர்களுக்கு வரிச்சலுகைகளை வழங்கும் அரசு மக்களின் மீது சுமையினை ஏற்றி தனது வருவாயினை அதிகரிப்பது ஏற்புடையதல்ல.

இதுவரை இல்லாத அளவிற்கு மக்கள் மீது சுமத்தப்படும் இந்த விலை உயர்வினை எதிர்த்து கட்சியின் அனைத்து மட்டங்களிலும் எதிர்ப்பியக்கம் நடத்துமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறைகூவல் விடுக்கிறது.

– சீத்தாராம் யெச்சூரி

பொதுச் செயலாளர் – சிபிஐ(எம்)

Check Also

நாட்டு மக்களை சட்ட விரேதமாகக் கண்காணித்திட யார் அதிகாரம் அளித்தது? பாஜக அரசே பதில் சொல்!

கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை; இஸ்ரேல் உளவு நிறுவனமான NSO ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் போன்கள் ...