பெட்ரோல் விலை உயர்வு எதிர்ப்பியக்கத்தில் பங்கேற்றோருக்கு மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டு!

வரலாறு காணாத அளவிற்கு மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தியதை எதிர்த்து நாடு தழுவிய எதிர்ப்பியக்கத்திற்கு இடதுசாரி கட்சிகள் அறைகூவல் விடுத்தன. ஏழை-எளிய, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் இந்த விலை உயர்வை எதிர்த்து நாடு தழுவிய அளவில் நடைபெற்ற முழு அடைப்பு, ரயில் மறியல, சாலை மறியல், ஆர்ப்பாட்டம் ஆகிய இயக்கங்களின் ஒரு பகுதியாக தமிழகததில் பரவலாக பெட்ரோல் விலை உயர்வு எதிர்ப்பியக்கம் நடைபெற்றுள்ளது.

கோவை, திருப்பூர், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் முழுமையாகவும் மற்ற மாவட்டங்களில் பகுதியாகவும் கடையடைப்பு நடந்துள்ளது. கோவை, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் தொழில்நிறுவனங்கள் முழுமையாக இயங்கவில்லை. பெரும்பகுதியான ஆட்டோக்கள், தனியார் வாகனங்கள் இயங்கவில்லை.  ரயில் மற்றும் சாலை மறியலில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் வாலிபர், மாணவர், மாதர், சிஐடியு உள்ளிட்ட அமைப்புகளைச் சார்ந்த சுமார் 15,000 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகரில் அமைதியான முறையில் ரயில் மறியலில் ஈடுபட்ட வாலிபர் மற்றும் மாணவர் சங்க உறுப்பினர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. மத்திய அரசின் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து நடைபெற்ற மாநிலம் தழுவிய கடையடைப்பு, மறியல்,  ஆர்ப்பாட்டம் போன்ற இயக்கங்களில் பங்கு பெற்றோரையும், ஆதரித்த மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு பாராட்டுகிறது.

விலை உயர்வு உள்ளிட்ட மக்களைத் தாக்கும் நவீன தாராளமய பொருளாதாரக்கொள்கையை எதிர்த்து பல வடிவங்களில் போராட்டத்தை தொடர வேண்டுமென அனைத்துப்பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகிறது.

Check Also

விவசாயி தற்கொலை வங்கிகளின் அடாவடிதனத்தை தடுத்து நிறுத்துக!

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம் மானூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி (55) என்ற விவசாயி, தாராபுரத்தில் உள்ள ஆக்ஸிஸ் வங்கியில் ...

Leave a Reply