பெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை ஒழித்துக்கட்ட ஆக.15 மனித சங்கிலி இயக்கம்

இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார். அதே நேரத்தில் ஒரு குழந்தையும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறது. இது தேசத்தின் அவமானம் என்று கருதப்பட வேண்டும். வன்முறையற்ற வாழ்க்கை என்பது தேச வளர்ச்சியின் ஒரு குறியீடு. ஆனால் அந்த முக்கியத்துவத்துடன் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தேசத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலில் இடம் பெறுவது கிடையாது என்பது வருத்தத்திற்குரியது. பெண்களின் பிரச்சனையை சமூகத்தின் சரிபாதியினுடைய மனித உரிமை பிரச்சனையாக மட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுவது கிடையாது. இது ஜனநயாக உரிமையின் ஒரு பகுதி என்பதாக கருதுகிறது.

இப்பின்னணியில் கண்ணியமான வாழ்க்கை என்பது அனைத்து மனிதர்களுக்கும், குறிப்பாக, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் கை கூட வேண்டுமென்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாகக் களம் இறங்கிப் போராடி வருகிறது. ஜூலை 3ம் தேதி சேலத்தில் பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை ஒழிப்பு மாநாட்டை எழுச்சியாக நடத்தியது. இந்திய சூழலில் சாதியும், மதமும், வர்க்கமும் இவ்வன்முறையின் பரிமாணங்களாக இருப்பதை சுட்டிக்காட்டியது. மத்திய மாநில அரசுகளின் நவீன தாராளமயக் கொள்கைகள் வன்முறைக்கான களம் அமைத்துக் கொண்டுக்கின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலில் செயல்படும் மத்திய பாஜக அரசு முன்வைக்கும் இந்துத்வ கருத்தியல் நிராகரிக்கப்பட வேண்டும் என்று அறைகூவல் விட்டது.

சேலம் மாநாட்டைத் தொடர்ந்து, தேசத்திற்கு விடுதலை கிடைத்தால் மட்டும் போதாது, தேசத்தின் ரத்தமும் சதையுமாக இருக்கக் கூடிய பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் வன்முறையிலிருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என்ற வலியுறுத்தலோடு ஆகஸ்ட் 15 மாலை 4.00 மணியளவில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மனிதச் சங்கிலி இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது.

பாலின நிகர்நிலையில் நம்பிக்கை கொண்ட, ஜனநாயகம் வேண்டும் என்று நினைக்கிற, மனித உரிமைகளைப் பற்றி நிற்கிற அனைத்து கட்சிகளும், அமைப்புகளும், பொதுமக்களும் இந்த மனிதச் சங்கிலியில் கரம் கோர்க்க வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

Check Also

நாட்டு மக்களை சட்ட விரேதமாகக் கண்காணித்திட யார் அதிகாரம் அளித்தது? பாஜக அரசே பதில் சொல்!

கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை; இஸ்ரேல் உளவு நிறுவனமான NSO ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் போன்கள் ...