பெண்கள் மீதான அதிகரித்து வரும் வன்முறையை தடுத்து நிறுத்தக் கோரி அக்டோபர் 30 நாடு தழுவிய கண்டன இயக்கம்

 பெண்கள் மீதான வன்முறையும், பாலியல் வன்கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய பல கொடுமைகள் வழக்குகளாக பதிவு செய்யப்படாமலே போய் விடுகின்றன. 2011-ல் மட்டும் 2.28 லட்சம் பெண்களுக்கு எதிரான வன்முறைக்குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தேசிய குற்றப்பதிவேட்டுப்பிரிவு கூறுகிறது. அவ்வாண்டில் பதிவான 24 ஆயிரம் பாலியல் வழக்குகளில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்பது 10 சதவிகிதம் வரை உள்ளது என மேற்கண்ட நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. ஒரு வயது குழந்தை கூட இத்தகைய கொடுமைகளிலிருந்து தப்ப முடிவதில்லை என்கிற செய்தி நமது நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.

ஆனால், 75 சதவிகித பாலியல் வன்புணர்ச்சி குற்றவாளிகள் தண்டனையிலிருந்து எப்படியோ தப்பித்து விடுவதாக புள்ளிவிபரம் கூறுகின்றன. 2009ம் ஆண்டு மட்டும் பெண்கள் மீதான வன்முறை குறித்த 12,397 வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், கல்வி நிலையங்களில் , பொது இடங்களில், பேருந்து, ரயில் நிலையங்களிலும் பாலியல் இம்சைகள் நடக்கும் செய்திகள் வருகின்றன. மேலும், பாலியல் வல்லுறவுகளும் அதிகரித்து வருவது குறித்த செய்திகளும் வெளியாகின்றன. பெண்கள் மீது இழைக்கப்படும் இத்தகைய பாலியல் வன்கொடுமைகளையும், வன்முறைகளையும், அநீதிகளும் பெண்கள் பிரச்சனை அல்ல. மாறாக, இவைகள் ஒட்டுமொத்த சமூகத்தின் முன்னால் உள்ள பிரச்சனைகளே. இத்தகைய கொடுமைகளைத் தடுத்து நிறுத்திட, மத்திய அரசும், மாநில அரசும் உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வருகிற அக்டோபர் 30 அன்று நாடு தழுவிய கண்டன இயக்கம் நடத்துவதென்று கட்சியின் மத்தியக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.

  • பெண்கள் மீதான வன்முறை, பாலியல் கொடுமைகளுக்கு எதிரான சட்டங்களை பலப்படுத்தி அமலாக்கிட வேண்டும்.
  • புகாரை பதிவு செய்ய மறுத்தால், மெத்தனமாக இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • உடனடி மருத்துவ பரிசோதனைக்கு பாதிக்கப்பட்டவரை அனுப்ப வேண்டும்.
  • விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
  • வழக்கு விசாரணையின்போது, பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சாட்சிகளுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
  • பாலியல் குற்றங்களுக்கு எதிராக பொதுக்கருத்து உருவாக்கப்படவேண்டும்.

பெண்களுக்கு எதிரான வன்முறை- பாலியல் கொடுமைகளை எதிர்த்து நாடு தழுவிய அளவில் நடைபெறவுள்ள இயக்கத்தையொட்டி தமிழகத்தில் அக்டோபர் 30 அன்று ஒன்றியங்களிலும், நகரங்களிலும் தெருமுனைக் கூட்டங்கள் மூலமாக கண்டனக்குரல் எழுப்பிட வேண்டுமென்று கட்சியின் மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது. இந்த இயக்கத்திற்கு ஆதரவு தருமாறு அனைத்துப்பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வேண்டுகிறது.

Check Also

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் காவல்நிலை சித்ரவதையால் வாலிபர் குமரேசன் மரணம் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 8 தென்காசி மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அனுப்புநர்: நவநீதகிருஷ்ணன் (வயது 55/2020) த/பெ. ஆதிமூலம் ...

Leave a Reply