பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் !

சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் கே,பாலகிருஷ்ணன் கடிதம்!

பொருள் : பெண் பத்திரிகையாளர்கள் மீது ஆபாசமாகவும், இழிவுபடுத்தியும் சமூக ஊடக பதிவுகள் தொடர்வது – நடவடிக்கையின்மை – உரிய நடவடிக்கைகள் கோருவது சம்பந்தமாக

சில பெண் ஊடகவியலாளர்கள் மீது அருவறுக்கத்தக்க வகையிலும், ஆபாசமாகவும் இழிவு செய்து தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் சில நபர்கள் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்கள் தனிப்பட்ட முறையில் புகார் அளித்துள்ளனர். கூட்டாகவும் காவல்துறை ஆணையரிடம் முறையீடு செய்துள்ளனர். ஆயினும், இத்தகைய பதிவுகள் நின்றபாடில்லை. இதேபோன்று சில ஊடகவியலாளர்கள் மீது அவர்களின் மதம் சார்ந்து வெறுப்பைத் தூண்டும் வகையில் சித்தரித்து, சமூக ஊடக பதிவுகள் வந்திருக்கின்றன. அதுகுறித்தும் சம்பந்தப்பட்டவர்கள் தனியாக புகார் அளித்ததோடு, கூட்டாகவும் முறையீடு செய்திருக்கிறார்கள். இதன் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததின் காரணமாக சம்பந்தப்பட்ட நபர்களும், வேறு சிலரும் துணிச்சல் பெற்று இதேபோன்ற பதிவுகளையும், பின்னூட்டங்களையும் செய்து வருகிறார்கள்.

பொது வெளியில் பெண்கள் செயலாற்ற வரும்போது இத்தகைய பதிவுகள் குடும்பத்திற்குள்ளும், நண்பர்கள் மத்தியிலும், சமூகத்திலும் கடும் மன உளைச்சலையும், வேதனையையும் உருவாக்குகிறது. இதுபோன்ற இழிவுபடுத்துதலை கண்டித்து பெண்கள் புகார் அளிப்பதே விதிவிலக்காகத்தான் நடைபெறுகிறது. அப்படி புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்பது இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு ஊக்கத்தை அளித்திருக்கிறது என்பதைத்தான் இப்படிப்பட்ட பதிவுகள் தொடர்வது வெளிப்படுத்துகிறது.

கடந்த காலத்தில் எங்கள் கட்சி தலைவர் ஒருவர் மீதும் இத்தகைய அவதூறு பதிவுகள் வந்த போது அதன் மீது புகார் அளிக்கப்பட்ட பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும் தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறோம். அரசியல் நிர்ப்பந்தத்தின் காரணமாகவே சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பத்திரிகையாளர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் கருத்து நிலவுகிறது. காவல்துறை அரசியல் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி, பாரபட்சமாக செயல்படுகிறது என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

இத்தகைய கருத்துக்கள் காவல்துறையின் மீதான நன்மதிப்பையும், நம்பிக்கையையும் சீர்குலைத்து விடும். எனவே, தாங்கள் நேரடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு அவதூறு பதிவுகளை செய்தோர், தொடர்வோர் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

கே. பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...