பெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

தமிழகத்தில் இன்று (18.9.14) நடைபெற்று வரக்கூடிய உள்ளாட்சிமன்ற இடைத்தேர்தலில் பல இடங்களில் ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்கள் ஜனநாயக விரோதமான முறையில் செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக சென்னை மாநகராட்சி வட்டம் 35 இல் ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் காலை 11 மணிக்கெல்லாம் அனைத்து வாக்குச்சாவடிகளையும் கைப்பற்றிவிட்டார்கள். இத்தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் போட்டியிடுகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆளும் கட்சியின் அராஜகத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்திய போது தேர்தல் அதிகாரிகளும், காவல் துறையினரும் தலையிட மறுத்துவிட்டனர். ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றியதைக் கண்டித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் தோழர். அ.சவுந்திரராசன் உள்ளிட்டு பல தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் தேதி அறிவித்த அன்றே வேட்பு மனுத் தாக்கல் என்று அறிவித்து எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் தயாரிப்புக்கு வாய்ப்பு கொடுக்காமல் மாநில அரசு ஜனநாயக விரோதமாக நடந்து கொண்டது. தற்போது ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றியுள்ளனர். ஆளும் கட்சியினரின் அராஜகத்தை, ஜனநாயக விரோதப் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதோடு, மாநகராட்சி வட்டம் 35க்கான தேர்தலை ரத்து செய்து மறுதேர்தல் நடத்த வேண்டுமென்று மாநில தேர்தல் ஆணையத்தையும், தமிழக அரசையும் மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...

Leave a Reply